Friday, April 08, 2005

Guyana 1838



வரலாற்றைக் கூறும் திரைப்படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருப்பதுண்டு. தற்போதெல்லாம் History Channel இல் WWI, WWII படங்களை எத்தனை விதமாக எத்தனை கோணத்தில் காட்டினாலும் மிகவும் விரும்பிப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் "Guyana 1838" திரைபடம் திரையரங்கிற்கு வந்த போது கயானா நாட்டு வரலாறு வேண்டிய அளவிற்குத் தெரிந்திருந்ததால் மிகுந்த ஆவலுடன் சென்று பார்த்தேன்.

19ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து கரும்பு தோட்டத்தொழிலுக்காக ஒரு மில்லியனுக்கு மேலான மக்கள் கயானா, ரினிடாட் போன்ற நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அடிமைகளாக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகியிருக்கின்றார்கள். வெறுமனே படிக்கும் போது எழாத உணர்வுகள் திரைமொழி மூலம் சொல்லப்படும் போது மக்களிற்கு அதிக தாக்கத்தைக் கொடுக்கும். அந்த வகையில் பார்த்தால் "Guyana 1838" பார்வையாளர்களுக்கு மிகுந்த தாக்கத்தை உண்டு பண்ணியாதா? எனின் பார்வையாளராகிய என் கருத்தின் படி இல்லை என்றே கூறுவேன். "Guyana 1838" ஒரு சுதந்திரமான திரைப்பட நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மிகக் குறைந்த பணச்செலவில் ஒரு வரலாற்றுத் திரைப்படத்தை எடுத்தது தவறோ என்ற எண்ணத்தையே எனக்குள் விட்டுச் சென்றது. ஒரு விவரணப்படமாக மட்டும் வேண்டுமென்றால் இதனைப் பார்க்கலாம். ஆனால் விவரணப்படத்திற்கான விதிமுறைகள் இப்படத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை.



திரைப்பட ஆரம்பத்தில் கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான பிரச்சனைகள் காட்டப்பட்டு குறைந்த ஊதியத்தில் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய மறுத்த கறுப்பர்களை நிராகரித்து விட்டு புதிதாக இந்தியாவிலிருந்து வேலையாட்களை கொண்டுவருகின்றார்கள் வெள்ளையர்கள். பல ஆயிரம் கறுப்பர்கள் அடிமைகளாக கயானாவில் வாழ்ந்து தனது உரிமைக்காகப் போராடியதையும் அடிமை நிலையை அவர்கள் எதிர்த்து நின்று போராடி வெற்றி கண்டதையும் இயக்குனர் மிக குறைந்த அளவு நடிகர்களை வைத்து (25க்கும் குறைந்த) காட்டியிருப்பது அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதே போல் ஒரு மில்லியனுக்கும் மேலான இந்திய மக்கள் என்று வரலாற்றின் மூலம் அறிந்திருந்த எமக்கு ஏனோதானோ என்று பத்துப் பதினைந்து நடிகர்களை வைத்து ஒரு நாட்டு மக்களின் பிரச்சனையை அலசியிருப்பது யதார்த்தமாக இல்லாததுடன் மிகவும் செயற்கையாகவே இருந்தது.
இருந்தும் சொல்ல வேண்டிய கருவை தவறாமல் எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள். கறுப்பர்களை அவர்கள் விரும்பின் கூலிக்காக மட்டும் உபயோகப்படுத்தலாம் என்ற சட்டம் வந்த பின்னரும் அதனைச் சட்டை செய்யாததும் கூலிகள் என்ற பெயரில் இந்தியர்களுக்கு ஊதியம் தருவதாகவும் அவர்கள் விரும்பிய காலத்திற்கு வேலை செய்து விட்டு மீண்டும் திரும்பி தமது நாட்டுக்குப் போகலாம் என்று ஆசை வார்த்தை கூறி பல இந்தியக் குடும்பங்கள் பிரித்தும் அடிமையுமாக்கியதை முற்று முழுதாகக் காட்டியிருக்கின்றார்கள்.
இந்தியாவிலிருந்து வந்து அடிமை வாழ்க்கை வாழ்ந்து சொந்தங்களையும் தமது வேரையும் கூட இழந்து விட்ட இந்திய கயனா மக்களுக்கு தமக்கான சரியான தீர்ப்பு ஒருபோதும் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் தற்போதும் இருக்கின்றது. அவர்கள் பார்வையில்
"Guyana 1838" கூட பல உண்மைச் சம்பவங்ளை மறைத்து விட்டது என்றே கருதுகின்றார்கள்.

4 comments:

Adaengappa !! said...

Am glad Karupi discusses the same topic as Mine..Nandri

Adaengappa !! said...

PHAGWAH

கறுப்பி said...
This comment has been removed by a blog administrator.
கறுப்பி said...

அடேங்கப்பா! ஹாலிப் பண்டிகை வாழ்த்துக்கு நன்றி. (*_*)
ஈழத்தில் இந்தப்பண்டிகை கிடையாது. தமிழ்த்திரைப்படங்களில் பார்ப்பதோடு சரி. அது பற்றிக் கொஞ்சம் விளக்கமா எழுதுங்கள் அறிந்து கொள்வோம்.