Tuesday, March 29, 2005

பஞ்சி

நான் ஒரு இந்திய நண்பருடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தேன். நான் அவருடன் கதைக்கும் போது (பேசும் போது) முடிந்தவரை எனக்குத் தெரிந்த இந்தியத் தமிழில் உரையாடுவது வழக்கம். அவர் எப்போதும் என்னை அது செய்யுங்கள், இது செய்யுங்கள் என்று "என்கரோஜ்" பண்ணும் ரகம். அன்றும் அது செய்யுங்கள், இது செய்யுங்கள் வழ வழ தான். எனக்கு விசராக வந்தது (பிராந்து??) நான் சொன்னேன் இப்பவெல்லாம் எனக்கு ஒரே "பஞ்சி" எண்டு. மறுமுனை மௌனமாகி விட்டது. பின்னர் அவர் கேட்டார் “பஞ்சி” எண்டால் என்ன?. உடனே என் மனத்தளத்தில் இந்தியத் திரைப்பட டயலாக்கை எடுத்து ஓட விட்டு பஞ்சிக்கு இந்தியத் தமிழ் பிடித்து “சோம்பல்” என்று சொன்னேன். சிறிது நேரத்தின் பின்னர் கேட்டார் “விசர்” எண்டால் என்ன என்று? நான் அவரிடம் கேட்டேன் என்னுடைய காசில் வாய் ஓயாமல் நான் கதைத்துக் கொண்டிருக்கின்றேன். நான் கதைத்ததில் உங்களுக்கு எவ்வளவு விளங்கியது? அவர் நீங்கள் பேசுவது புரிகின்றது ஆனால் எனக்குத் தெரியாத எம்மக்களிடத்தில் புளக்கத்தில் இல்லாத பல தமிழ் சொற்கள் வந்து போகின்றன அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான் என்றார். நான் விசர் எண்டு விட்டு வைத்து விட்டேன்.

நான் இந்தியா சென்றிருந்த போது சாலிக்கிராமத்தில் ஏ.வி எம் ஸ்ரூடியோக்கு அருகில் மூலிகை முறையால் முகத்தைச் சுத்தம் செய்யும் (பேர்ஷல்) இடம் ஒன்று இருந்தது. கனேடியக் காசுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாக இருந்தது எனவே செய்வதற்காக உள்ளே சென்றேன். பல பெண்கள் இருந்தார்கள். எனக்குச் செய்த பெண் கனேடிய வாழ்க்கை அனுபவங்கள் என்று கதை கேட்டவண்ணம் தனது வேலையைத் தொடர்ந்தார் நான் கொஞ்சம் வேகமான வழ வழக்காறி. கண்ணை மூடி அனுபவித்த படியே என் அனுபவங்களை எடுத்து விட்டுக்கொண்டிருந்தேன். அவர் மௌனமாக இருந்தார். சிறிது நேரத்தின் பின்னர் அந்தப் பெண் என் கண்களுக்கு குளிர்மைக்காக வேண்டிய பொருளை வைத்துவிட்டு வெளியில் போய் மற்றைய பெண்களிடம் அந்தப் பெண் சிங்களத்தில் ஏதேதோ பேசுது தனக்கு ஒன்றும் புரியவில்லை என்றார் எனக்கு ஐயோடா என்றிருந்தது. அவர் திரும்பி வந்த போது நான் கூறினேன் எனக்குச் சிங்களத்தில் ஒரு வார்த்தை கூடத் தெரியாது என்று. அவர் ஓ.. என்று விட்டு இதுதான் யாழ்ப்பாணத்துத் தமிழா? இலங்கையரின் தமிழ்தான் சுத்தமான தமிழ் என்கின்றார்களே.. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியாயின் நாங்கள் பேசுவது என்ன தமிழா வேறு ஏதுமா என்று கேட்டார். நான் சொன்னேன் நீங்கள் பேசியது எல்லாமே எனக்குப் புரிந்தது எனவே அது தமிழ்தான். இலங்கையருக்கு இந்தியத்தமிழோடு நல்ல பரிச்சயம் இருக்கிறது. காரணம் திரைப்படங்கள் சஞ்சிகைகள். தங்களுக்கு இலங்கைத் தமிழோடு அப்படியான உறவு இல்லை அதுதான் காரணம் என்றேன். அவர் சிரித்துக் கொண்டார்.

தொடர்ந்து எழுதப் பஞ்சியாக இருக்கிறது..

5 comments:

வசந்தன்(Vasanthan) said...

சில நேரங்களில் இழுத்து இழுத்துக் கதைக்கிற ஆக்களிண்ட கதையக் கேக்கப் பஞ்சியா இருக்கும். நானும் வேகமாக் கதைக்கிற ஆள்தான். மலேசியாவில நான் இந்தியத் தமிழரோட கதைக்கேக்க அவைக்கு அரவாசி விளங்கிறேல. பிறகு 'ஸ்லோவாக் கதயுங்க' எண்டு சொன்னப்பிறகுதான் நான் மெதுவாக் கதைக்கிறனான். என்னோட கதைக்கிறதெண்டா சாதாரண பேச்சுத் தமிழில இருந்து எழுத்து நடைத்தமிழுக்கு மாறுவினம். மேயில பேசுற மாதிரி இலக்கணத்தமிழில கதைக்க வெளிக்கிடுவினம். 'நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா', 'எத்தனை மணிக்குப் புறப்பட்டீர்கள்?' என்பது போன்று இருக்கும். நான் சொல்வென்@ என்னால உங்கட கதைய விளங்கிக்கொள்ள ஏலும் எண்டபடியா நீங்கள் சாதாரணமாகவே கதையுங்கோ எண்டு. சினிமாவாலதான் நாங்கள் அவயளிண்ட கதையப் புரிஞ்சு கொள்ள முடியுது.

வசந்தன்(Vasanthan) said...

அதுசரி,
அலுவலகத்திலயிருந்து தானே இத எழுதினனியள்? (எப்பிடிக் கண்டு பிடிச்சன் எண்டு நினைக்கிறியளே?)

கறுப்பி said...
This comment has been removed by a blog administrator.
கறுப்பி said...

ஆ.. ஓமோம் எப்பிடிக் கண்டு பிடிச்சியள்? hmmmm. நான் எழுதுறது எல்லமே அலுவலகத்தில் இருந்துதான். வீட்டில செய்யிறதுக்கு கனக்க நல்ல வேலைகள் இருக்கு. அலுவலகத்தில் அலுவலக வேலை செய்யச் சரியான பஞ்சி. இப்ப வரவர எல்லாத்துக்கும் பஞ்சி பிடிக்குது.
பஞ்சி போக்கும் மருந்து தெரியுமா?

இங்கும் சில புலவர்கள் இருக்கின்றார்கள் என்னைக் கண்டால் செந்தமிழில் உரையாடத்தொடங்கி விடுவார்கள். நான் ஒரே ஓட்டம்தான்.

dondu(#11168674346665545885) said...

"ஆ.. ஓமோம் எப்பிடிக் கண்டு பிடிச்சியள்? hmmmm."
பாம்பின் கால் பாம்பறியும்?
ஜாக்கிரதை கறுப்பி அவர்களே. மாட்டிக் கொள்ளாதீர்கள். அதில் நீங்கள்தான் முதலாளி என்றால் அது வேறு விஷயம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்