Thursday, April 21, 2005
சும்மா ஒரு அலசல்
"மும்பை எக்ஸ்பிரஸ்" படம் பார்த்தேன். வழமையான தமிழ்த் திரைப்படம் காண்பிக்கப்படும் திரையரங்கில் இல்லாமல் ஆங்கிலத்திரைப்படம் காட்டப்படும் (சர்வதேச திரைப்படங்கள்) திரையரங்கம் ஒன்றில் மும்பை எக்ஸ்பிரஸ் காட்டப்பட்டதன் காரணம் தெரியவில்லை. இப்படியான திரையங்குகளில் திரை பிரமாண்டமாக இருக்கும். "மும்பை எக்ஸ்பிரஸ்" High Definition முறையில் படமாக்கப்பட்டதென்றும் தொழில் நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தாததால் பெரிய திரையில் படம் தெளிவாக இல்லை என்றும் என்னுடன் வந்திருந்த நண்பர் புறுபுறுத்தார்.
செவ்வாய்க்கிழமைகளில் கனேடிய திரையரங்குகளில் டிக்கெட் குறைந்த விலைக்குக் கிடைக்கும். எனவே இந்த நாளை நான் திரைப்படம் பார்க்கும் நாளாக வைத்திருந்தேன். எனது நண்பி ஒருத்தி "மும்பை எக்ஸ்பிரஸ்" பார்க்க வேண்டும். கனேடித் திரையரங்கில் காட்டப்படுவதால் டிக்கெட் குறைந்த விலைக்கெடுக்கலாம் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் அன்று நான் பார்க்க நினைத்து வைத்திருந்த “Born into Brothels “ ஐ விட்டு விட்டு மும்பை எஸ்பிரஸ் போய் பார்த்து விட்டு வந்தேன். ஆனால் ரிக்கெட் அதே விலைதான்.
கமலின் திரைப்படம் என்றால் பார்ப்பதற்கு நிச்சயமாக ஏதாவது இருக்கும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் இருப்பதாலும் அண்மையில் வெளிவந்த தெனாலி,பஞ்சதந்திரம்,வசு10ல்ராஜா போன்ற படங்கள் நகைச்சுவையோடு போர் அடிக்காமல் ஒரு பொழுதைக் கழிக்க உதவியதாலும் பெருத்த நம்பிக்கையுடன் போயிருந்தேன்.
பார்த்த பின்பு கமலுக்கு என்ன நடந்தது என்ற கேள்விதான் எனக்குள்ளும் எஞ்சிப்போயிருந்தது. மும்பை எஸ்பிரசில் வேகமிருந்தது ஆனால் ஆழமில்லை.
தரமான படங்களை மட்டும் தரவேண்டும் என்று பல காலமாக கமல் திரைக்கு வராமல் இருந்து பல தரமான திரைப்படங்களை வருடத்திற்கு ஒன்று என்று தந்து கொண்டிருந்தார். அதில் வெற்றி பெற்றவை பல தோல்வி பெற்றவையும் தான். உடைந்து, உழைத்துக் கொண்டிருக்கும் போது வயதும் ஏறுகின்றது என்பதை உணர்ந்ததாலோ என்னவோ நல்ல ஒரு கலைஞன் என்ற உணர்வில் மீண்டும் திரையில் ஓரளவிற்கேனும் வந்து போக வேண்டும் இல்லாவிட்டால் பார்வையாளர்கள் மறந்து போய் விடுவார்கள் என்பதை அறிந்து தற்போது பலவிதமான திரைப்படங்கள் முக்கியமாக நகைச்சுவைப்படங்களுக்குள் தன்னை இடையிடை புகுத்திக்கொண்டு விட்டார். நல்ல விடையம் ஆனால் கொஞ்சம் கவனம் வேண்டும்.
நல்ல கருத்துக்களைச் சொல்கின்றோம் என்று விட்டு உணர்ச்சிவசப்பட்ட நடிப்பால் கழுத்தறுக்கும் அனைத்துத் தமிழ் படங்களுள் விரல் நீட்டி ஒன்று இரண்டு பார்க்கும் படியாக உள்ளன. கமலின் ஆழமான திரைக்கதை கொண்ட படங்களை விடுத்து நகைச்சுவைத் திரைப்படங்களும் போர் அடிக்காமல் பார்வையாளர்களை வைத்துக்கொள்பவையா இருந்து வந்தது. எங்கோ, எதிலோ கமல் கோட்டை விட்டுவிட்டார். தொடர்ந்தும் இந்தத் தவறைச் செய்யாமல், தமிழ் திரைஉலகின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்து வருபவர் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது.
மோனிஷாவிற்கு நடிக்க வராது என்பதை மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதம் செய்துள்ளார். பசுபதிக்கு நடிக்க வரும் என்று மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களும் மற்றவையும் மனதில் நிற்கவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
ம்ம்ம்... அது என்ன எழவு க்ளைமாக்ஸோ மும்பை எக்ஸ்பிரஸ்ல. கேவலமான க்ராபிக்ஸ் அங்கங்கே...
//மும்பை எக்ஸ்பிரஸ்" High Definition முறையில் படமாக்கப்பட்டதென்றும் தொழில் நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தாததால் பெரிய திரையில் படம் தெளிவாக இல்லை என்றும் என்னுடன் வந்திருந்த நண்பர் புறுபுறுத்தார். //
அட! நீங்க என்ன சொல்றீங்க அதச் சொல்லுங்க முதல்ல.
அப்புறம் பொதுவான ஒரு கேள்வி?
ஏன் இலங்கை மக்கள் 'ட'வை 'ர' என உச்சரிக்கிறார்கள்?
எடுத்துக்காட்டு 'டிக்கெட்' என்பது 'ரிக்கெட்' என ஆவது. ஒருவேளை ஆங்கில பதமாய் இருப்பதால் அது தான் இலக்கணமோ? ஒரு ஆர்வகோளாறில் தான் கேட்கிறேன்.
கறுப்பியின் ஆதங்கம் நியாயமானதுதான்.ரஜனி நடந்தாலே படம் ஓடும் ஆனால் கமல் நடித்தால்தான் படம் ஓடும் என்பது காலாகாலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு நியமம்.கமல் இப்போதெல்லாம் அப்படிப்பட்ட ரசிக எதிர்பார்ப்புக்கு ஹேராமுக்கு பிறகு தீனி போடவில்லை என்பது எனது கருத்து.அதை உணர்ந்தும் இவ்வளவு காலமும் சினி உலக அனுபவம் இருந்தும் ஏன் கமலால் செயற்படுத்த முடியவில்லை என்பது தான் தெரியவில்லை.
அடுத்ததாக அல்வாசிட்டி விஜயின் கேள்விக்கு பதில் கூற விழைகிறேன்.ஆங்கிலத்தில் D என்ற எழுத்துக்கு டி யைப்பாவிப்பதும் T என்ற எழுத்துக்கு ரி என்ற எழுத்தை பாவித்து எழுதுவதும் நானறிய ஈழுத்தமிழர்களால் பின்பற்றப்பட்டுவரும் வழக்கு.இதனைப்பல இடங்களில் பார்க்கலாம்.
நன்றி அருணன். அந்த வார்த்தையை ஆங்கிலத்தில் பாவிக்கும் போது அதே உச்சரிப்புடன் சொல்வீர்களா? எடுத்துக்காட்டாக ரிக்கெட்..
என் கேட்கிறேன் என்றால் சில ரஷ்யர்களின் T பாவிப்பு 'G' என உச்சரிப்பார்கள். அதே தொனியுடன் தான் ஆங்கிலத்திலும் ஒலிக்கும், அதான் கேட்டேன்.
மும்பை எக்ஸ்பிரஸ் - மட்டமான நகைச்சுவை.
“Born into Brothels"--DONOT MISS IT.
Born into Brothels பாராமல் இருக்காதீர்கள். ஆஸ்கார் விருது படம். அது தாண்டி, இங்கே கல்கத்தாவில் எடுக்கப்பட்ட படம். ஒருவர் எடுத்த படம் என்று சொல்லுவதை விட நிறைய குழந்தைகள் எடுத்த கனமான படம். பத்ரி இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறார்.
மும்பை எக்ஸ்பிரஸ் .... ம்ம்ம்... விடுங்க, கமல் வேட்டையாடு விளையாடு-ல தீனி போடுவார்ன்னு நினைக்கிறேன்.
இந்த ஹை டெபனிஷன் சமாச்சாரம், வேண்டாம் விவாதத்தை ஆரம்பிக்க விருப்பமில்லை.
/Born into Brothels பாராமல் இருக்காதீர்கள். ஆஸ்கார் விருது படம். அது தாண்டி, இங்கே கல்கத்தாவில் எடுக்கப்பட்ட படம்./
கூடவே, அந்தப்படம் எடுக்கப்பட்டதின்பின்னான சர்ச்சையையும் வெகுவிரைவில் உங்களுக்கு அருகிலிருக்கும் இணையத்தளம் ஒன்றிலே வாசிக்கத் தவறாதீர்கள் ;-)
அல்வாசிட்டிக்கு!
ஆங்கில உச்சரிப்பில் எந்த மாற்றமுமில்லை. 'T' என்பதை 'ரி' என்றுதான் உச்சரிப்போம். அதாவது வல்லின உச்சரிப்பைப் பெறும்.(ர் புள்ளியுடன் மெய்யெழுத்தாக வரும் சந்தர்ப்பத்தில் மட்டும் R இன் உச்சரிப்பைப் பெறும்).
'டிக்கட்' என்று உச்சரிக்க வேண்டுமானால் எங்களுக்கு அது ஆங்கிலத்தில் Dicket என்று இருக்க வேண்டும். ரிக்கற் என்பதற்கும் றிக்கட் என்பதற்கும் தமிழகத்திலே வித்தியாசம் இருக்காது என்றே நினைக்கிறேன். எமக்கு T க்கும் R க்குமிடையிலான வித்தியாசம் இருக்கிறது.
ஆனால் இப்போது மெல்ல மெல்ல எமது வழக்குகளும் மாறி வருவது போல் தெரிகிறது. முன்பு ராணி என்பதை வல்லின உச்சரிப்பாகத் தொடங்கியே உச்சரித்தார்கள். இன்று றாணி (Rani)என்ற உச்சரிப்பில் சிலர் உச்சரிக்கிறார்கள். இதைப்போலவே ரவி எனும் பெயரும் இரு உச்சரிப்புகளையும் கொண்டுள்ளது. நாம் ரேக் இற் ஈசி என்பதை தமிழகத்தில் டேக் இட் ஈசி என்பர். Ten என்பதையும் Den என்பதையும் தமிழில் எழுதுங்கள் என்றால் தமிழகத்தில் ஒரே மாதிரித்தான் எழுதுவார்கள். ஆனால் ஈழத்தில் முன்னையதை 'ரென்' என்றும் பின்னயதை 'டென்' என்றும் எழுதுவோம்.
சயந்தன்!
கமல் நடித்தால்தான் படமோடும் என்ற நிலையிருப்பதாகச் சொல்வது சரியென்றால் ஹேராமும் அன்பே சிவமும் ஏன் ஓடவில்லை? அவை இரண்டையும் விட வேறெதை கமல் நடித்துக்காட்ட முடியும்? கமல் விசயத்தில் இப்படியெடுத்தால் தான் படமோடும் என்று நிலை நிச்சயமாக இல்லை. கமலுக்கே இன்னும் சரியாகப் பிடிபடவில்லையென்றே நினைக்கிறேன்.
தெனாலி, பஞ்ச தந்திரம், காதலா காதலா போன்று படம்தந்தால்தான் படம் வெற்றி பெறும் என்றுதான் நாம் கமலுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறோம். இப்போது கமல்மீதே குற்றமும் சொல்கிறோம்.
தனக்கென ஒரு ஆட்டு மந்தையை வைத்திருக்காதது தான் கமலின் பலமும் பலவீனமும். மும்பை எக்ஸ்பிரஸ் தோற்பது பற்றியதல்ல என் கவலை. அதைத்தாண்டி என் கவலையுள்ளது. ஒரு அருமையான கலைஞன் மனம் நொடித்துப் போகக்கூடாது என்பது ஒன்று. நல்ல படமொன்றைக்காண இன்னும் நிண்டநாள் காத்திருக்க வேண்டுமென்ற கவலை இன்னொன்று. இது பெரும் வெற்றி பெற்றிருந்தால் சீக்கிரமே அருமையான படமொன்றைத் தந்திருப்பார் கமல். தோல்வியென்றால் இன்னொரு டப்பா படம் தந்துதான் காலை வைப்பார். மருத நாயகம் கூட கனவாகவே போய்விடுமோ என்பது என் ஏக்கம்.
'ட', 'ற'வுக்கு விளக்கம் தந்த வசந்தனுக்கு ரொம்ப நன்றி. பேச்சு வழக்கை தெரிந்துக் கொள்வதில் அலாதி பிரியம் தான் காரணம். மீண்டும் நன்றி.
மன்னிக்கவும். நான் முதல் எழுதியது சயந்தனுக்கான பதிலன்று. மாறாக ஆருணனுக்கான பதில். தவறுக்கு மன்னிக்கவும். (இரண்டு பேரும் ஒரே மாதிரி என் மனத்தில் இருக்கிறார்களே என்ன செய்ய?)
//சயந்தன்!
கமல் நடித்தால்தான் படமோடும் என்ற நிலையிருப்பதாகச் சொல்வது சரியென்றால் ஹேராமும் அன்பே சிவமும் ஏன் ஓடவில்லை? அவை இரண்டையும் விட வேறெதை கமல் நடித்துக்காட்ட முடியும்?//
எதற்கு எனக்கு சொல்லுகிறீர்கள்.. நான் இங்கே வரவேயில்லையே..
பின்னூட்டங்களுக்கு நன்றி
Must do ரஜனி நடந்தால் படம் ஓடும் கமல் நடிக்க வேண்டும். கமல் நடிக்காத படம் என்று ஒண்டுள்ளதா? மிக மட்டமான ரசனை உள்ள தமிழகத்தில் கமல் போல் நல்ல ஒரு கலைஞன் பிறந்தது கொடுமை என்பது என்கருத்து. பொன் முட்டை போன்று தமிழர்களுக்குக் கிடைத்துள்ள கமலை வீணாக்கும் தமிழ் ரசிகர்களை என்னென்று சொல்லவது. கமலுக்கு வயது போகின்றது. உலக சினிமாவில் தமிழரைத் தலை நிமிர்ந்து வைக்கும் வகையில் படம் எடுக்க நடிக்கக் கூடியவர்களுள் முக்கியமானவர் கமல். அவருக்கு ஆதரவு கொடுக்காமல் "அன்பே சிவம்" போன்ற படங்களை தோல்வியில் கொண்டு போய் முடித்தால்? வருகுது வாயில…
ரோஸவசந்தின் விமர்சனத்தை முன்னிட்டு இன்று வெள்ளி இரவு லேட் நைட் ஷோவுக்கு "சந்திரமுகி" பார்க்கப் போகின்றேன். பல தமிழ் திரைப்படங்கள் நான் தியேட்டர் சென்று லேட் நைட் ஷோ பார்ப்பதற்கு முக்கிய காரணம் லேட் நைட்டிற்கு அனேகமாக இளைஞர்கள் வருவார்கள். படம் தொடங்கி முடியும் வரை அவர்கள் தரும் கொமென்ஸ் தியேட்டரைக் கலகலப்பாக்கும். நல்ல கதை உள்ள படம் என்றால் அதற்கு வேறு நேரம்.
அது சரி இந்த ஈழத்துத் தமிழ் உச்சரிப்பு இந்தியத்தமிழ் உச்சரிப்பு. அல்வா தெரியாதா உங்களுக்கு? ஈழத்துத் தமிழர் கதைப்பதுதான் சுத்த தமிழ். இந்தியர்கள் கதைப்பது தமிங்கிலம். கவிஞர் சேரன் (ஈழத்துக் கவிஞர்) தமிழினிக்காக இந்தியா வந்திருந்தபோது சென்னைத் தொலைக்காட்சி ஒன்று அவரை நேர்காணல் ஒன்று கண்டதாம். கேட்ட கேள்விகளுக்கு சேரன் கூறிய பதில்கள் நேர்காணல் கண்டவருக்குப் புரியவில்லையாம். காரணம் சேரன் கதைத்தது சுத்த தமிழ்.
நாராயணன் அடுத்த செவ்வாய் "Born into Brothels" நிச்சயமாகப் பார்ப்பேன். ரி(டி)க்கெட் அரைவிலை.
பெயரிலி //அந்தப்படம் எடுக்கப்பட்டதின்பின்னான சர்ச்சையையும் வெகுவிரைவில் உங்களுக்கு அருகிலிருக்கும் இணையத்தளம் ஒன்றிலே வாசிக்கத் தவறாதீர்கள் ;-) \\
இது எதுவோ?
சயந்தன்! (*_*)
வசந்தன் ரேக் இற் ஈசி
Arunan & Adenkappa thanks. Sorry I missed you guys.
யோவ் கறுப்பி!
இதென்ன புது குழப்பம்?
உங்களுக்கு ஆரோடயேன் ராத்திக்கொண்டு இருக்கோணும் அப்பிடித்தானே?
இப்ப எதுக்குச் சுத்தத்தமிழ் தமிங்கலக் கதையெல்லாம்?
முதலில பிரச்சின துவங்கினது ட,ர இல்தான். இந்த உச்சரிப்பு மாற்றத்தில எங்க சுத்தத் தமிழும் தமிங்கலமும் வந்தது? நானும் ஏதோ சேரன் தான் அப்பிடிச்சொன்னவராக்கும், அவரையும் மற்றாக்களையும் கொழுவி வைக்கப் போறியளாக்கும் எண்டிட்டு இருந்தா... அது உங்கட கருத்து.
அது சரி எங்கட ஆக்கள் எங்க சுத்தத் தமிழ் கதைக்கினம். அவயளவிட கொஞ்சம் பரவாயில்ல எண்டு சொல்லலாம் அவ்வளவுதான். நேற்று யாழ்ப்பாணத்துக்கு தொலைபேசின போது "இப்ப போறன் நைட்டுக்கு எடுத்தியெண்டா ஆறுதலாக் கதைக்கலாமெண்டான்". நைற் எல்லாம் எப்ப வந்ததெண்டு தெரியேல. இப்பிடித்தான் போகுது நிலைமை. ஆனா இதுக்குக் காரணம் தொலைக்காட்சியும் படங்களுந்தான் எண்டது என்ர கருத்து.
//உங்களுக்கு ஆரோடயேன் ராத்திக்கொண்டு இருக்கோணும் அப்பிடித்தானே?\\
அட வசந்தன் எனக்கு வேலையில பொழுது போக வேண்டாமே. நாங்கள் (ஈழத்தவர்) ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலமாகத்தான் பாவிப்பம். ஆனால் இந்தியர்கள் ஆங்கில வார்த்தைகளை தமிழாக மாற்றி விட்டார்கள். அதனால்தான் தமிங்கிலம் எண்டன். (என்ர மனுசன் இந்தியன் தெரியுமோ தமிழ் இல்லை மராட்டி).
நாங்கள் டொக்டர் என்றால் அது ஆங்கில டொக்டர். இந்தியர்கள் டாக்டர் என்றால் அது தமிழ்தான் என்ன சொல்ல வாறன் எனக்கே குழப்பமா இருக்கு. இண்டைக்கு வெள்ளிக்கிழமை கொஞ்சம் சந்தோஷமா இருப்பம் எண்டால்?? ஈழத்தமிழர்கள் இந்த நாடகங்களையும் படங்களையும் பாத்துப் பாத்து..
ஓ.கே. எல்லாரும் முடிஞ்சுதா.இஞ்ச கனபேர் அவலை எண்டு நினைச்சு உரலை இடிச்சதால சயந்தன் படுகாயம் எண்டு கேள்விப்பட்டன்.சரி விஷயத்துக்கு இப்பவாவது வராட்டி பிறகு ஓடி ஒழிச்சிட்டான் எண்டு நினைப்பினம்.
தமிழ் உச்சரிப்பு வழக்கில் என்து கருத்துக்கு வசந்தன் வழி மொழிந்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன்.அதுதான் எனது அபிப்பிராயமும்கூட.ஆனால் அதற்காக தமிழ்நாட்டு தமிழ்நடையை கொச்சைப்படுத்துவது நல்லாயில்லை.தமிழ் சினிமா நடிகர்கள் எங்கு சென்றாலும் ஈழத்தமிழரது தமிழை ஏற்றிப்பேசி அதை புகழ்கிறார்கள்.ஆனால் அவர்களால் அதை உச்சரிக்க முடியாததற்று பல காரணங்கள்.மக்கள் மத்தியில் விற்பனை இடத்தை பிடித்துவிட்ட - முக்கியமாக பிராமணியத்தில் தோய்ந்தெழுந்த சிலரின் கட்டுக்குள் உள்ள - சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்பன மக்களுக்கு நல்ல தமிழை போதிக்கவில்லை.பத்திரிகைகள் மக்களுக்கு செய்தியை கொடுப்பதுக்கு அப்பால் நல்ல தமிழையும் கொண்டுசெல்கின்றன.அதைப்பொறுத்தவரை ஈழத்தமிழ் பத்திரிகைகள் அந்தப்பணியை தமிழ்நாட்டுப்பத்திரிகைகளைவிட நன்றாகவே செய்கின்றன.ஆனால் ஈழத்தைவிட அதிக தமிழ்அறிஞர்கள் திறமையான தமிழ்பத்திரிகையாளர்கள் உள்ள தமிழ்நாட்டில் அதை நடைமுறைக்கு கொண்டுவருவதில் உள்ள சிக்கல்தான் இந்த மாயைக்கு காரணம்.
டொனி ப்ளேயரின் மனைவி கர்ப்பம்:ஒக்டோபர் மாதம் குழந்தை ரிலீஸ் எண்டு தினமலர் போன்ற பத்திரிகைகள் செய்திகளுக்கு தலைப்பு இடுமவரை வாசகன் செய்தி,தமிழ் என்ற வரைமுறைகளுக்கு அப்பால் இப்படியான கவர்ச்சி மாயைக்குள்ளேயே விழுகிறான்.இதன் பாதிப்புத்தான் தமிழ்உச்சரிப்புகளில் ஏற்படுகின்ற கோளாறும்கூட.
அடுத்ததாக கமல் விஷயத்தில ஆளுக்காள் நல்லா குழும்பியிருக்கினம்.குழப்பியிருக்கினம்.தற்போது சினிமாவில கதையுள்ள படங்கள் இருந்திட்டுத்தான் வெற்றியடையுது எண்டதையும் இப்பவெல்லாம் கொமேர்ஷல் ஹீரோக வலம் வந்தாத்தான் விஜய் போல அங்கு நிலைக்க முடியும் எண்டதையும் விளங்கிய கமல் நகைச்சுவை படங்கள் மூலம் ரசிகர்களுக்கு கயிறு விடுகிறார்.இந்த ஸ்டைலில இறங்கி பிரபு ஏற்கனவே அடிவாங்கி இப்ப இரண்டர்ம ஹீரோவா நடிச்சு முகம் காட்டித்திரியிறார்.கமல் பழைய பெயரில வலம் வாறார்.ஆனா அன்பே சிவம்,ஹேராம் எண்டு நடிச்சாலும் தற்கால ரசிகர்கள் நடிப்பு எண்டதுக்கு வச்சிருக்கிற அளவுகோல் முந்திமாதிரி இல்லை எண்டதை கமல் உணரவேணும்.மூன்றாம் பிறை நடிப்பை இப்பவும் காட்டினா படம் தோக்கத்தான செய்யும்.கனக்கவேண்டாம் சிவாஜியே பழைய மாதிரி வந்து நடிச்சாலும் இப்ப யாரும் பாக்க ஆளில்லை.சிவாஜி எண்ட பெயருக்கும் அவற்ற பழைய ரசிகர்களின் ரசிப்புக்கும்தான் கொஞ்சம் மதிப்பு கிடைக்குமே தவிர வேறயொண்டும் கிடைக்காது.
அதால கமல் வச்சா குடுமி அடிச்சா மொட்டை எண்டகணக்கில உன்றில் நகைச்சுவை அல்லது கடும் நடிப்பு எண்ட போர்முலாவை மாற்றி வயதுக்கு அனுசரித்து போகக்கூடிய பாத்திரத்தேர்வை செய்து நடிக்கமுன்வந்தால் நன்று.அத்துடன் அப்ப கைகொடுத்தார் எண்டதுக்காக இப்ப மார்க்கெட்டே இல்லாத இளையராஜாவை இசைக்கு தேர்வு செய்வது விளக்கை பிடித்துக்கொண்டு போய் கிணற்றில் விழுவது போன்ற செயல்.இவற்றை உணர்ந்தால் கமலுக்கு சுபமே.
//ரோஸவசந்தின் விமர்சனத்தை முன்னிட்டு இன்று வெள்ளி இரவு லேட் நைட் ஷோவுக்கு "சந்திரமுகி" பார்க்கப் போகின்றேன்.//
அய்யோ, கறுப்பி இப்போதுதான் பார்த்தேன். என் விமரசனத்தை முன்னிட்டு தயவு செய்து போகாதீங்கோ. ஏனேனில் நான் உங்களின் முந்தய கருத்திலிருந்து முற்றிலும் மாறுபடும் பார்வையில் எழுதிய பதிவு அது. அதாவது,
//மிக மட்டமான ரசனை உள்ள தமிழகத்தில் கமல் போல் நல்ல ஒரு கலைஞன் பிறந்தது கொடுமை என்பது என்கருத்து. //
இந்த கருத்தை (அல்ல, இந்த பாசிசத்தை) வன்மையாய் கண்டிக்கிறேன்.
ஆனால் இதன் அபத்தம் கூட உங்களுக்கு புரியவில்ல்லை. கமலை கொண்டு போய் உச்சியில் வைத்ததே தமிழ்நாட்டவர்தான். ஹிந்தியிலும் (விட்டால் ஹாலிவுட்டிலும்) எடுபட வாய்பில்லாத (கவனிக்கணும் ஹிந்தியில் எல்லா முயற்சியும் செய்து தோல்வி கண்டு தமிழில் தொங்கும்) கமலை வாழவைத்து அவருக்கு கோடானுகோடி ரசிகர்களையும் தந்த தமிழுக்கு இது தேவைதான்.
ரோசாவசந்த் - யார் என்ன சொன்னாலும் கமல் நல்ல ஒரு நடிகன் நல்ல ஒரு கலைஞன். அதை விடுத்து வேறு ஒன்றையும் நான் பார்க்கவில்லை. தமிழில் தரமாக எதையாவது தரவேண்டும் என்று எண்ணி பல பரீட்சாத்த முயற்சிகளில் ஈடுபட்டு வரும் ஒரே கலைஞன் அவர்தான். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்தும் மசாலாப்படங்களாக வழங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா உலகில் கமல் வந்து சேர்ந்தது துரதிஷ்டமே. இங்கே எங்கே வந்தது பாஸிஷம் ரோசாவசந்த். சொல்லுங்கள் தமிழ் சினிமா உலகில் ஒரு நல்ல கலைஞனை. கமலை விட யாராவது இருக்கின்றார்களா? அவரின் திறமையை அடையாளம் காணாது போனதால்தான் கமல் "மும்பை எக்பிரஸ்" போன்ற படங்களிலும் நடிக்கவேண்டி வருகின்றது. ஹிந்தி உலகத்தைத் தெரியாததா தங்களுக்கு. அங்கு இருக்கும் நாயகர்கள் தமிழ் நாயகன் ஒருவனின் திறமை கண்டு ஆடிப்போய் ஒதுக்கி விட்டார்கள். எங்குதான் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் எங்கும் எல்லா இடமும் அரசியல்தான். இதுதான் உலகம். தமிழ் சினிமா உலகில் ஒரு நல்ல கலைஞனை எமக்குச் சொல்லுங்கள் என்று சினிமா உலகில் இருக்கும் ஒருவரின்டம் கேட்டால் கமலைத்தான் சொல்லப்போகின்றார்கள். (ரஜனி கூடச் சொல்லுவார்) அந்த வகையிலாவது அவர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார் என்பது சந்தோஷம்.
கறுப்பி, எதையோ சொன்னால் பதிலுக்கு சம்பந்தமில்லாமல் எதையோ சொல்கிறீர்கள். நான் கமல் நல்ல நடிகனா என்பது பற்றி எங்கே கருத்து சொன்னேன்?
"மிக மட்டமான ரசனை உள்ள தமிழகத்தில் கமல் போல் நல்ல ஒரு கலைஞன் பிறந்தது கொடுமை என்பது என்கருத்து" என்பதை பற்றித்தானே பேசினேன். தமிழகத்து மக்களை பற்றி நீங்கள் -முக்கியமாய் நீங்கள்- சொலவதை பற்றித்தானே சொல்கிறேன். கமலின் திறமையை தமிழகம் அடையாளம் காணாமல் வேறு எந்த மானிலம் அடையாளம் கண்டது? எங்கேயும் எடுபடாத கமலை வளர்த்து அவரை கோடி மக்களின் -ஆமாம், இப்போதுதான் ரஜினி மட்டும் சூப்பர் ஸ்டார், ஒரு காலத்தில் அதற்கு சமமாய் அல்லது ஒப்பிடகூடிய வகையில் கமல்- ஆதர்ச நாயகனாய் இருக்கும் போது தமிழகத்தை பற்றி சொல்வதையே கண்டிக்கிறேன்.
தமிழக மக்கள் எல்லாம் சினிமா பயித்தியம் என்று நீங்கள் நினைப்பது உண்மையல்ல. சினிமாவால் எல்லாம் தீர்மானிக்க படுகிரது என்பதும் உண்மையல்ல. அப்படி -தமிழ்நாட்டைவிட இன்னும் பின் தங்கியிருக்கும்- மற்ற மானிலத்தவர்கள் நினைக்கிறார்கள். தமிழகத்திலும் பலர் நினைக்கலாம். எப்படியிருந்தாலும் ஈழத்தவராகிய நீங்கள் என் (தமிழ்)நாட்டை பற்றி கேவலமாக பேசுவதை கண்டிக்காமல் வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள்? இந்தியர்கள் ஈழத்தவர் பற்றி மோசமாய் பேசியபோது கண்டித்திருக்கிறேன். அதே போலத்தான் இதுவும். நீங்கள் வேறு சந்தர்ப்பங்களிலும் இது போல சொல்லி படித்திருக்கிறேன். நீங்கள் அறியாத(அல்லது சரியாய் அறியாத) தமிழ்நாட்டின் நிலமை பற்றி பேசாமல் இருப்பது நல்லது.
ரோசாவசந்த் ஒட்டு மொத்தமாக ஒரு மாநிலத்தில் எல்லோருமே மட்டமான ரசனை உள்ளவர்களாக இருக்கமாட்டார்கள் தானே. தங்களைப் போலும் சிலரும் இருப்பார்கள். அவர்களின் பார்வையால் வளர்ந்தவர்தான் கமல். பாலுமகேந்திரா ஒரு படம் தருவதற்கு இந்தப் பாடுபட்டுக்கொண்டிருக்கையில் சங்கரும், வாசுவும், ரஜனிப் படங்களும், மற்றும் இத்யாதிகளும் சக்கை போடு போட்டால் அந்த மாநிலத்து மக்களின் ரசனையை தமிழச்சியான நான் அடையாளம் காண்பதில் என்ன தவறு. நான் ஈழம் இந்தியா என்று பிரித்துப் பார்க்கவில்லை. தமிழர் என்று பார்த்தேன். எனினும் என் இந்திய நண்பர்களே இந்தியத் தமிழர்களைப் பற்றி இது போல்தான் விமர்சிக்கின்றார்கள். இந்தியா அளவிற்கு எதுவுமே ஈழத்தில் எக்ஸ்ரமாக இல்லை. காரணம் மக்கள் தொகை. அந்த விளக்கம் எனக்கு இருக்கின்றது.
//இப்போதுதான் ரஜினி மட்டும் சூப்பர் ஸ்டார், ஒரு காலத்தில் அதற்கு சமமாய் அல்லது ஒப்பிடகூடிய வகையில் கமல்- ஆதர்ச நாயகனாய் இருக்கும் போது தமிழகத்தை பற்றி சொல்வதையே கண்டிக்கிறேன்.\\
உங்கள் இந்த வரிகளைப் படிக்கும் போது சிரிப்பாக வருகின்றது. இதைத்தான் நான் ஏன் என்று கேட்கின்றேன். ரஜனி நடந்தாலே படம் ஓடுகின்றதே. ஆனால் கமல் மாய்ந்து, மாய்ந்து தரமான படங்கள் தந்தாலும் சுருண்டு போய் விடும் போது மக்களின் ரசனை பற்றி நான் கூறக் கூடாது (முக்கியமா கறுப்பி) என்று சொல்லும் (ஒரு வேளை நான் ஈழத்துப் பெண்ணாக இருப்பாதாலோ) தங்கள் பாசிஸப் பார்வைதான் எனக்குப் புரியவில்லை.
கருப்பி, முதலில் நீங்கள் நினைப்பது போல், ரஜினி நடந்தால் படம் ஓடாது. விளக்க பல உதாரணகளை நீங்களே யோசிக்கலாம். மேலும் உலகம் முழுவதும் இதுதான் நிலமை. ஆர்னால்டின் படம் போல், லா தோல்சே விடா ஒடாது.
மேலே இதில் வாதம் செய்வது எங்கேயும் கொண்டுபோய் விடாது. ரசனை என்பது உங்கள் தனிப்பட்ட வந்தடைதல். அதை மற்றவர் அபத்தமாய் நினைக்கலாம். அதை முன்வைத்து ஒரு முழு தமிழ்நாட்டை பற்றி சொல்ல உரிமையில்லை. உங்கள் பார்வையை மட்டும் முழுமையானதாக நினைக்கும் மனப்பான்மைதான் அதில் இருக்கிறது. மேலே சொல்ல எதுவுமில்லை. ஏற்கனவே பேசி பிய்ந்து போய் இருக்கிறேன்.
ரோசாவசந்த் நானும் தொடர்ந்து விவாதிப்பதை விரும்பவில்லை. விவாதம் என்பது காத்திரமான கருத்துப் பரிமாற்றமாக இருக்க வேண்டுமே தவிர வெறும் விதண்டாவாத வாதமாக இருப்பதை நானும் விரும்பவில்லை. அதுவும் ரஜனியின் ஒரு படத்திற்காக. நோ காட் ஃபீலிங் ப்ளீஸ்.
//ஏற்கனவே பேசி பிய்ந்து போய் இருக்கிறேன்.\\
நானும் படித்துக்கொண்டுதான் வருகின்றேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை.
தங்கள் தளத்திலும் மற்றவர்களுக்குத் தாங்கள் இடும் பின்னூட்டத்திலும் இருந்து ஒன்றை மட்டும் நான் அவதானித்தேன். சின்னச் சின்ன விடையங்களுக்கெல்லாம் தாங்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகின்றீர்கள். இது வெறும் பொழுது போக்குத்தளமாக மட்டுமே நான் பார்க்கின்றேன். பல விடையங்களை விவாதிக்கலாம் வாதிடலாம் ஒரு நட்பின் அடிப்படையில். எல்லோருமே முகம் தெரியாத எங்கெங்கோ வாழ்பவர்கள் கடுமையான சொற்களை உபயோகித்து எதற்கு முறைத்துக் கொள்வான்.
//சின்னச் சின்ன விடையங்களுக்கெல்லாம் தாங்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகின்றீர்கள். இது வெறும் பொழுது போக்குத்தளமாக மட்டுமே நான் பார்க்கின்றேன்.//
என் கருத்தும் இதே. இந்த அளவு நேரமும், சக்தியையும் வீணடிக்கத் தேவையில்லை.
தவிர, இந்த 'தமிழ் நாட்டுக்காரர்கள் சினிமாப் பைத்தியங்கள்' என்ற கறுப்பியின் கருத்தோடு ஒப்புதலில்லை. சினிமா இவ்வளவு பிரபலமாக இருப்பதற்குக் காரணம் அது பரவலாக ஜனநாயகப் படுத்தப்பட்ட மிகக் குறைந்த விலையில் கிடக்கும் கேளிக்கை. அவ்வளவுதான். சினிமா அரசியலை நிர்ணயிக்கிறது என்பதிலும் உடன்பாடில்லை. எம்.ஜி.ஆரின். வெற்றி தி.மு.க.வின் வளர்ச்சியோடு பிணைந்தது. தி.மு.க.வால் எம்.ஜி.ஆர். வளர்ந்தாரா? எம்.ஜி.ஆரால் தி.மு.க. வளர்ந்ததா? என்று சளைக்காமல் விவாதிக்கலாம். ஆனால் ஒரு முடிவுக்கு வருவது கடினம். எம்.ஜி.ஆரை வெறும் சினிமா நடிகராகப் பார்த்து, தாமும் அதேபோல் பெரியாளகலாம் என்று கனவு காணும் ஓய்வு பெறும் நிலையில் உள்ள நடிகர்களும், அதை நம்பும் மற்றவர்களும் கடந்த நூற்றாண்டின் தமிழக வரலாற்றை ஊன்றிப் படிக்கவேண்டும்.
சுந்தரமூர்த்தி தமிழ் நாட்டுக்காரர்கள் சினிமாப் பைத்தியம் என்பது என் கருத்தல்ல. (நான் கூட சினிமாப் பைத்தியம் தான்) ஆனால் வாழ்விற்கும் நடிப்பிற்கும் பார்வையாளர்களுக்கு வேறுபாடு தெரியவேண்டும். இது உலகம் முழுவதிலும் உள்ள பிரச்சனை தமிழ் மக்களுக்கு மட்டுமானது என்று நான் குறிப்பிடவில்லை. ஒருவருக்கு உள்ள திறமையிலும் பார்க்க அவரை இன்னும் ஏற்றி புகழ் பணம் என்று அளவிற்கு அதிகமாக் கொடுத்து அவரையே திக்குமுக்காட வைத்தல். சாதாரண மக்களிலும் விட அவரிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதைப் போல் நம்புதல். இது தான் மைக்கல் ஜாக்சனுக்கும் நடந்தது என்பது என் கருத்து.
சினிமாதான் அரசியலை நிர்மாணிக்கின்றது என்பதில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிடினும் சினிமாவின் பாதிப்பு (இந்தியாவில் முக்கியமாக) அரசியலில் அளவுக்கு அதிகமாக இருக்கின்றது என்பதைத் தாங்கள் ஒத்துக் கொள்ளுவீர்கள் என்று நம்புகின்றேன். நாயகர்களை ரசிகர்களே நீங்கள் தான் எமது அடுத்த தலைவர் என்று வெறும் ஆசை ஊட்டி விடுகின்றார்களோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. சினிமா என்பது ஒரு துறை என்பது மக்களுக்கு மறந்து போய்விடுகின்றது
ஒரு விளையாட்டு வீரனையோ இல்லாவிட்டால் வேறு ஒரு துறையில் மிளிரும் ஒருவருக்கோ இந்த மாதிரியான சந்தர்ப்பங்கள் அமைவதில்லை. காரணம் தாம் மக்களின் நலனின் மேல் அளவுக்கதிகமாக அக்கறை கொண்டது போல் காட்ட அவர்கள் துறையில் சந்தர்பங்கள் இல்லை. நடிகர்களுக்கு அது நிறையவே இருப்பதால் அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து அவர்களும் அரசியலுக்குள் நுழைந்துவிடும் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கின்றன. ரஜனி அரசியலுக்குள் நுழையவில்லை என்று பலர் கூறுகின்றார்கள். நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக நுழைந்து விட்டார் என்பதை எல்லோருமே அறிவர்.
சுந்தரமூர்த்தி, கருப்பி,
நான் ஆட்சேபித்தது பேசுவது தமிழகத்தை பற்றியே, ஒழிய ரஜினி கமலை பற்றி அல்ல. கருப்பி 'மட்டமான ரசனை, கேடுகெட்ட' என்றூ சொலவதெல்லாம் ஒரு மேலோட்டமான தன்னை மட்டும் வைத்து உலகத்தை எடைபோடும் பார்வையாய், கண்டிக்க பட வேண்டியதாய் எனக்கு தெரிகிறது. வேறு காரணங்களால் சுந்தரமூர்த்திக்கு அப்படி தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு மக்களின் சினிமா ரசனையை கேவலமாய் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், உணவை பற்றியோ, மற்ற வாழ்க்கைமுறை பற்றியோ பேசினால் மட்டும் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. நான் உணர்ச்சி வசப்படுவதாய் சொல்வதற்கு சொல்ல எதுவும் இல்லை. என் மற்ற கருத்துக்களுக்கும் அது பொருந்தகூடுமா என்று சொல்லவேண்டும். அது உண்மையாய் கூட இருக்கலாம். அதற்கான காரணமாய் சொல்வதுதான் சரியல்ல. ரவி எழுதியது எல்லாம் மிகுந்த எரிச்சலை கிளப்பியது. கிட்டதட்ட ஒரு வருஷமாய் இந்த எரிச்சலை பொறுத்து நிதானமாகவே பதில் சொல்லிவருகிறேன். இது போன்ற கருத்து ஒவ்வொரு முறை சொல்லும் போதும் வந்து ஒரு பெரியண்ணா மனோபாவத்துடன் எழுதுவதற்கு இந்த முறை ஒரு முடிவு கட்டுவதாய் இருந்தேன். கட்டிவிட்டேன். அவ்வளவே! மற்றபடி சுந்தரமூர்த்தி நான் சந்திரமுகி பற்றி சொல்லுவதை ஒப்புகொள்ளமாட்டார் என்று தெரியும். தங்கமணி, சங்கரபாண்டி மின்னஞ்சல் எழுதியுள்ளார். (ஏனோ பொதுவில் வைக்கவில்லை) அங்கேயெல்லாம் உணர்ச்சிவசப்படவில்லை.
மற்றபடி நீங்கள் எழுதும் கருத்துக்கு விசிதா மாதிரி ஒருவர் வந்து உங்கள் முட்டாளாக சொல்லிவிட்டு போனால் ஒப்புதலானதா என்று சொல்லுங்கள். எனக்கு அந்த திமிர் மட்டுமே எரிச்சலை கிளப்புகிறது, கருத்து அல்ல.
//கருப்பி 'மட்டமான ரசனை, கேடுகெட்ட' என்றூ சொலவதெல்லாம் ஒரு மேலோட்டமான தன்னை மட்டும் வைத்து உலகத்தை எடைபோடும் பார்வையாய், கண்டிக்க பட வேண்டியதாய் எனக்கு தெரிகிறது. வேறு காரணங்களால் சுந்தரமூர்த்திக்கு அப்படி தெரியாமல் இருக்கலாம். //
சுமு அப்படி சொல்லவில்லை, ஏனோ அப்படி எடுத்துகொண்டு எழுதினேன்.
வீட்டிலிருந்து வேலைக்கு கிளம்பும் முன் அவசரமாய் எழுதியது. கறுப்பி, சுந்தரமூர்த்தி என்று சேர்ந்து விளித்து எழுதியதில் குழப்பம் வந்துவிட்டது. மன்னிக்கவும். சுந்தரமூர்த்தி இங்கே தெர்டிவித்த என் கருத்து குறித்து எதுவும் சொல்லவில்லை.
கறுப்பி தமிழ் சினிமா பற்றியோ அதன் பாதிப்பு அரசியலில் இருப்பது பற்றியோ கவலைப்பட்டால் அது வேறு விஷயம். கமலை போற்றும் தனது ரசனையை முன்வைத்து தமிழகத்தையே கேவலமாய் சொன்னதை மட்டுமே எதிர்கிறேன். அதுவும் (அவருக்கு விளங்கவில்லை, அல்லது இன்னும் தெரியவில்லை. ரஜினியுடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு கமலுக்கும் வெறிபிடித்த ரசிகர்கள் உண்டு -கமல் தனது 'சீரியஸ்' பாணி சினிமாவை தேர்ந்தெடுக்கும் வரை, அண்ணாமலை படம் மெகா ஹிட் ஆகும்வரை) கமலை போற்றி வளர்த்த ஒரே இடத்தை அப்படி சொல்வது அபத்தமானது. அவ்வளவே, வேறு எதையும் சொல்ல்வில்லை. (அவர் ஈழத்தமிழர் என்பதும் ஒரு காரணம், ஏனெனில் ஒருவர் சுயவிமரசனம் செய்வதற்கும், மற்ரவர் வந்து கேவலமாய் பேசுவதற்கும் வித்தியாசம் உண்டு.) இதை மட்டுமே சொல்ல விரும்பினேன். இதை ஏன் இத்தனை முறை செல்லத்தேவை ஏற்பட்டது என்று புரியவில்லை.
//இதை ஏன் இத்தனை முறை செல்லத்தேவை ஏற்பட்டது என்று புரியவில்லை.//
கருப்பி சொன்னது.
//அதுவும் ரஜனியின் ஒரு படத்திற்காக. நோ காட் ஃபீலிங் ப்ளீஸ்.//
இங்கே நான் பேசுவது ரஜினி படத்தை பற்றி அல்ல. கமலை பற்றியுமல்ல. ஆனால் எனக்கு பதிலாய் கருப்பி மீண்டும் மீண்டு வேறு ஒன்றை தருகிறார். (அதற்கு பிறகு விதண்டாவாதம் கூடாது என்கிறார்)இதனால் இத்தனை முறை எழுதவேண்டி வந்தது.
//மற்றபடி சுந்தரமூர்த்தி நான் சந்திரமுகி பற்றி சொல்லுவதை ஒப்புகொள்ளமாட்டார் என்று தெரியும். //
வசந்த்:
ஈழநாதன் டிக்கட் விலை பேசியபோதும், காஞ்சி திருட்டு விசிடி பற்றி எழுதியதில் மட்டும் இந்த படத்தை காசு கொடுக்காமல் பார்ப்பதில் தப்பில்லை என்று எழுதினேன். மற்றபடி உங்கள் விமர்சனத்திற்கு நன்றி மட்டும் சொல்லி முடித்துக்கொண்டேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லையாதலால் அதுபற்றி எதுவும் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. ரஜனி-பா.ம.க. லடாய் பற்றி எழுதியது கூட அரசியல் நோக்கில் தான். சினிமாப் பற்றியதல்ல. சினிமாப் பார்ப்பது வெகுவாகக் குறைந்துவிட்டதால் சினிமா விவாதங்களில் ஆர்வம் அதிகமில்லை. ஒன்றைப் பற்றி எல்லோரும் குமட்டுகிற அளவிற்கு பேசுவதை/எழுதுவதைப் பார்க்கும்போது ஏற்படும் எரிச்சலே இந்த சந்திரமுகி இரைச்சலின்போதும் ஏற்பட்டது.
கறுப்பியோடு ஒத்துப்போவதாகச் சொன்னது அவருக்கும் உங்களுக்கும் நடக்கும் விவாதத்தை முன்வைத்தல்ல. நீங்கள் உணர்ச்சி வசப்படுவதாக கறுப்பி சொன்னது நீங்கள் உங்கள் பதிவில் நடத்தும் விவாதத்தை என்று புரிந்துகொண்டு நான் எழுதியது. விசிதா, ரவி ஸ்ரீனிவாஸ் ஆகியாரது ஒற்றை வரித் தீர்ப்புகளை அந்த அளவுக்கு சீரியசாக எடுத்து வளர்த்திருக்க வேண்டியதில்லை என்பதே என் கருத்து. மற்றபடி சினிமா-தமிழ் நாட்டு மக்கள் தொடர்பாக நான் இங்கு சொன்ன கருத்து உங்களுடைய கருத்தோடே அதிகம் பொருந்துகிறது.
நன்றி சுந்தரமூர்த்தி. எனக்கும் அது புரிந்தது. சங்கரபாண்டி, தங்கமணியும் முன்வைத்த கருத்தை போல என்னுடன் வேறுபடுவீர்கள் என்று நினைத்தேன். அதைத்தான் சொன்னேன். இனி விவாதங்களீல் ஈடுபடுவதில்லை என்றே இருக்கிறேன். நன்றி!
Post a Comment