நிகழ்வு முடிந்த வந்த கிழமைகளில் கறுப்பி கனேடிய ஈழத்து எழுத்தாளரான காலம் சென்ற குமார்மூர்த்தி அவர்களின் "சப்பாத்து" எனும் சிறுகதையைத் திருடி விட்டாள் என்று அனாமதேய நபர் ஒருவர் திண்ணை, பதிவுகள், கனேடியப் பத்திரிகை என்று கிழித்து வைத்தார். வழக்கும் போடப்போறாராம் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் போடவில்லை ஏனோ தெரியவில்லை.
இந்த வாரம் கறுப்பியின் சினிமா வாரம். பல தரமான படங்களைப் பார்த்த மகிழ்ச்சி. அந்த வகையில் உலகத்திரைப்படங்கள் வாடகைக்கு விடும் ஒரு கடையில் கிண்டிக்கிளறி எடுத்தவற்றில் ஒன்று "Children of Heaven". திரைப்படத்தைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது காரணம் இதுவும் சப்பாத்திற்காக ஏங்கும் ஏழைக்குழந்தைகளின் கருதான் திரைக்கதையாகியிருக்கின்றது. ஏற்கெனவே "செருப்பு" எனும் பெயரில் ஈழத்திலிருந்து இதே கருவைக் கொண்ட ஒரு குறுந்திரைப்படமும் வெளி வந்திருக்கின்றது. இதில் யார் யாரைக் கொப்பி அடித்தார்கள். ம்..
"Children of Heaven"
Director: Majid Majidi
அலி ஒன்பது வயதுச் சிறுவன் குடும்பத்தில் மிகுந்த அக்கறையும் குடும்பச் சு10ழலையும் புரிந்தவன். தனது தங்கையான ஜேராவின் பிய்ந்து போன சப்பாத்தை (இருக்கும் ஒன்றை) தைக்கக் கொடுத்து வரும் வழியில் தொலைத்தும் விடுகின்றான். ஆவலோடு சப்பாத்திற்காகக் காத்திருந்த ஜேரா தனது ஒரே சப்பாத்துத் தொலைந்து போய் விட்டதை அறிந்து பாடசாலைக்கு எப்படிப் போகப் போகின்றேன் என்று கண் கலங்குகின்றாள். தனது தங்கையின் நிலை அலிக்கு வேதனையைக் கொடுத்தாலும் புதிய சப்பாத்து வாங்க அப்பாவிடம் பணம் இல்லை எனவே எனது சப்பாத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளுவோம் என்று பெண்களுக்கான காலை பாடசாலைக்கு ஜேராவும் ஆண்களுக்கான பின்னேரப் பாடசாலைக்கு அலியும் என அலியின் பழைய சப்பாத்தைப் பகிர்ந்து கொள்கின்றார்கள். சப்பாத்து மாற்றுவதற்காக பாடசாலை விட்டவுடன் ஜேரா வேகமாக ஓடி வருவதும் மாற்றியவுடன் பாடசாலைக்கு அலி ஓடிப்போயும் நேரம் காணாததால் பாடசாலைக்குத் தாமதாகச் சென்று அதிபரிடம் வசை வாங்கிக் கொள்ளுவதும் என்று வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கும் குழந்தைகளின் நிலையையும் அவர்களது கனவையும் தாங்கி நிற்கின்றது திரைக்கதை. படம் முழுவதிலும் தங்கை ஜேராவிற்கு எப்படியாவது ஒரு சப்பாத்து வாங்கிக் கொடுத்து விடவேண்டும் என்ற கனவு கண்களில் இழையோடுவதைக் காணலாம். பாடசாலையில் நிகழ இருக்கும் ஓட்டப்போட்டியில் மூன்றாவது பரிசாக சப்பாத்து அறிவிக்கப்பட்டபோது சந்தோஷமாக தங்கையிடம் எப்படியும் நான் மூன்றாவதாக வந்து உனக்கு அந்தச் சப்பாத்தைப் பெற்றுத் தருவேன் என்று விட்டுப் போட்டியில் கலந்து கொண்ட அலி முதலாவதாகத் தான் வரப்போவதை அறிந்து இரண்டு பேரை முன்னே விட்டு மூன்றாவதாக வருவதற்கு முயற்சி செய்து நாலாவதாக வந்தவன் காலில் தடக்கி விழுந்து பின்னர் எழுந்து ஆவேசமாக ஓடி முதலாவதாக வந்து பாடசாலைக்குப் பெயரை வாங்கிக் கொடுத்து கண்கள் கலங்க வீட்டிற்கு வருகின்றான்.
கதையில் பிழை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் கண்டு பிடிக்க முடியும். ஆனால் சிறுவர்களின் யதார்த்தமான நடிப்பு மூன்றாம் உலகநாடுகளில் குழந்தைகளின் கனவு வாழ்வு நிலை என்று மனதை இருக்கமாகப் பிடித்து வைத்திருக்கின்றது திரைப்படம்.
தன்னுடைய தொலைந்து போன சப்பாத்தைப் போட்டிருக்கும் சிறுமியைக் கண்டதும் அவள் பின்னால் அலியும் ஜேராவும் சென்று அவளின் வீட்டைக் கண்டு பிடிக்கையில் அவளின் தந்தை பார்வை இழந்தவன் என்று தெரிந்த போது தம் நிலையின் கீழும் சிறுவர்கள் வாழ்கின்றார்கள் என்று புரிந்து வீடு திரும்புதல். ஊத்தைச் சப்பாத்தை கழுவிக் காய வைத்து சின்னச் சின்னச் சம்பவங்களில் தம்மைத் திருப்திப் படுத்துதல் என்று குழந்தைகளின் மனநிலையை நிறைவாகப் படம் பிடித்திருக்கின்றார்கள்.
வாழ்வு தொடங்கும் ஏக்கங்களுடனும் கனவுகளுடனும் நகரும் எதுவும் நிறைவேறாமலே. வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் நிலை இதுதான் என்பதை சீராகப் படமாக்கியிருக்கின்றார்கள்.
"Little things make all the difference in the world".
No comments:
Post a Comment