Thursday, April 07, 2005

பெண்சுதந்திரம் என்றால் என்ன?

நீங்கள் பெண்சுதந்திரம் எண்டுறதைப் பிழையா விளங்கியிருக்கிறீங்கள். பெண் சுதந்திரத்தின்ர அடிப்படையே தெரியாமல் எப்பிடிப் பெண்சுதந்திரம் பற்றிக் கதைக்கிறீங்கள்? பெண்சுதந்திரம் எண்டால் இதில்லை. பெண்சுதந்திரம் எண்டால் அதில்லை. அப்ப பெண்சுதந்திரம் எண்டால் என்ன?

கறுப்பியின்ர அனுபவத்திலையும் மற்றவர்கள் சொல்லக் கேட்டதும் படிச்சதும் எண்டு சில கருத்துக்களை நான் இங்க பகிர்ந்து கொள்ளப்போறன்.
பெண்சுதந்திரம் எண்டு தனியா ஒண்டு இல்லை. தனிமனித சுதந்திரம்தான் பெண்சுதந்திரத்தின்ர அடிப்படை எண்டுதான் கறுப்பி விளங்கி வைச்சிருக்கின்றாள். பெண்கள் ஆண்களாலையும் சமூகத்தாலையும் அடக்கு முறைக்கு ஆட்படுறதால “பெண்சுதந்திரம்” எண்டு அழுத்திச் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குப் பெண்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
சரி அப்ப தனிமனித சுதந்திரம் எண்டால்? ஒரு மனிதன் தனது விருப்பத்துக்கேற்ப சுதந்திரத்திற்கு ஏற்ப வாழுதல் எண்டு சொல்லலாம். உடன அப்ப கொலையும் செய்யலாமோ? எண்ட கேள்வி கூட ஒருக்கா கறுப்பியிடம் வைக்கப்பட்டது. தனிமனித சுதந்திரத்தை நீங்கள் முற்றாகப் புரிந்து கொண்டால் கொலை என்பது இன்னுமொருவரின் உயிரை எடுப்பது என்ற நிலையில் இன்னுமொருவரின் வாழும் சுதந்திரத்தை நீங்கள் பறிக்கும் போது அங்கே தனிமனித சுதந்திரம் அடிபட்டுப் போகிறது. சட்டங்களை மீறுதல் என்பதும் தனிமனித சுதந்திரத்திற்குள் அடங்கா.
கறுப்பியின் பார்வையில் தனிமனித சுதந்திரம் என்பது ஒரு ஆணோ பெண்ணோ தன் விருப்பப்படி எந்த ஒரு திணிக்கப்படும் தீர்வுகளுக்கும் அடிபணியாமல் வாழுதல் எனலாம். 18 வயது வரைக்கும் பெற்றோர்களின் பாதுகாப்பில் இருந்த பிள்ளைகள் பின்னர் தம்மை பெரியவர்களாக அடையாளம் கண்டு கொள்ளும் போது அவர்கள் தெரிவில் அவர்கள் தேடலில் அவர்களின் அறிவிற்கு ஏற்ப தமது எதிர்காலத்தைத் தீர்மானித்தல் இதற்குள் அடங்கும். இது எப்போதுமே சிறந்த தெரிவா இருக்கவேண்டிய அவசியமில்லை. பெற்றோர்களோ நண்பர்களே உறவுகளோ இவர்களின் தெரிவு தவறு என உணரும் பட்சத்தில் அறிவுரை கூறலாமே தவிர. தமது கொள்கைக் கேற்ப அவர்களை மாற்ற முயலக்கூடாது.
சரி இனி பெண்சுதந்திரம் என்று கூறிக்கொள்ளும் எமது சமுதாயம் பெண்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்று பார்த்தால். –
பெண்ணியம் பெண்சுதந்திரம் பேசும் எழுதும் கோட்பாடுகளுக்குள் வாழுபவர்கள் கூட தமது சிந்தனைக் கேற்ப தம்மால் வரையறுக்கப்பட்ட பெண்ணியம் எனும் ஒன்றுக்குள் பெண்சுதந்திரம் கதைக்கும் ஒருவர் நடந்து கொள்ளாத பட்சத்தில் நீங்கள் பெண்சுதந்திரத்தைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றீர்கள் என்று மீண்டும் ஓரு அடக்குமுறைக்குள் பெண்ணைக் கொண்டு வர முயல்கின்றார். இதை கறுப்பி பல அனுபவங்கள் மூலம் கண்டுள்ளாள்.

"அம்பை" தனது பயணக்கதை ஒன்றில் தான் குடிப்பதாக எழுதியிருந்தது பலரால் அப்ப பெண்ணியம் எண்டாக் குடிக்க வேணுமோ என்று கிண்டல் அடிக்கப்பட்டது. இங்கும் தீர்மானிக்கப்பட்ட வரையறைக்குள் தமது பெண்ணியக் கருத்துக்களைக் கொண்டவர்கள் தமது பெண்ணியக் கருத்துக்குள் குடிப்பது என்பது அடங்காத பட்சத்தில் நாகரீகமற்ற முறையில் கிண்டல் அடிப்பதாகவே கறுப்பி விளங்கிக் கொள்கின்றாள். அதே நேரம் ஒரு ஆண் எழுத்தாளர் தான் குடிப்பதாக கூறும் போது அது ஒருவராலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. இங்கே பெண்ணியம் பேசுபவர்களாலேயே பெண்கள் தரமற்றவர்களாக இல்லாவிட்டால் ஆண்களைப் போல வாழ முற்படுகின்றார்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றாள். ஒரு பெண் அவளுக்கு குடிப்பது என்பது பிடித்திருக்கும் பட்சத்தில் அவளின் தீர்மானத்தின் படி அவள் குடிப்பது அவள் சுதந்திரம். குடிப்பதோ, புகைப்பிடிப்பதோ, ஏன் கன்ஜா அடிப்பதோ, போதை மருந்து பாவிப்பதோ, உடலுக்குக் கெடுதல் என்பது சாதாரண எந்த மனிதனுக்கும் தெரிந்த விடையம். ஒருவரின் தெரிவில் தனது உடல் பற்றிய அக்கறை இல்லாத பட்சத்தில் அவர் அதனை உபயோகிப்பது அவரின் விருப்பமேயன்றி வேறொன்றுமில்லை. பெண் அதனைச் செய்யும் போது உடலுக்குத் தீங்கானது என்று அறிவுரை கூறலாம் அதைவிடுத்து பெண்ணியம் பேசுவதால் பெண்சுதந்திரம் என்று பிழையாக விளங்கிக்கொண்டு (விளங்க என்ன இருக்கு) ஆண்களை பிரதிமை செய்கின்றார்கள் என்று கூறுவது அவர்கள் அறியாமையே.

தமிழ் சமுதாயக் கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்த பல தமிழ் பெண்கள் தற்போது புலம்பெயர்ந்து வேற்று நாட்டுக் கலாச்சாரத்திற்குள் தம்மைப் புகுத்தி வாழ முற்படுகின்றார்கள். இப்போது தமிழ்ச் சமுதாயம் ஒரு போதும் கண்டிராத பல வாழ்வு முறைகளை புலம்பெயர்ந்த பெண்கள் பின்தொடருகின்றார்கள். மீண்டும் பெண்கள் தவறான வழியில் போகின்றார்கள் அவர்களைத் தட்டி, நிமிர்த்தி சீராக்க வேண்டும் என்று பல மூத்தவர்களும், ஆண்களும் புலம்புவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து தனித்துவமாக வாழ முற்படும் ஒரு பெண்ணிற்கு புலம்பெயர் கூ10ழல் அதற்கேற்ப இசைவாக்கம் அடையும் தன்மையைக் கல்வி முறையாலும், வாழ்க்கை முறையாலும் கற்றுக்கொடுக்கின்றது. இனிமேலும் தமிழ் பெண்களை ஒன்றும் தெரியாதவர்களாகவும் மூத்தவர்களாலும், ஆண்களாலும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஜந்தாகப் பார்க்கப்படல் கூடாது. தமது வாழ்வு முறை எதிர்காலம் என்பவற்றில் புலம்பெயர்ந்து வாழும் பெண்களுக்கு இருக்கும் திடமான அறிவு, தீர்மானம் சிலவேளைகளில் கறுப்பியை வியக்கவும் வைத்திருக்கின்றது.

புழுதி புளொக்கில் நிருபா கறுப்பியின் பின்னூட்டதிற்கு இட்ட பதிலைப் பார்க்கின்

//வெள்ளி சனி வந்து விட்டாலே டிஸ்கோவிற்காக தம்மைத் தயார்படுத்திக் கொள்கின்றனர் நீங்கள் குறிப்பிடும் „மிகவும் சுதந்திரமாக இருக்கும் பெண்கள்.“ பெண்களுக்கான சுதந்திரம் என்பது கிளப்புகளுக்குப் போவது என்கின்ற ஒரு அபிப்பிராயம் இருந்துவருகிறது. இது பெண்களின் விடுதலைபற்றிய சரியான விளக்கமின்மையையே சுட்டிநிற்கிறது\\

இதுவும் தீர்மானிக்கப்பட்ட முடிவே. சமூகசேவை என்பதோ இல்லாவிட்டால் (ஏதாவது நல்ல விடையங்கள்) எமது சமூகத்திற்குப் பெண்களுக்கு உதவும் வகையில் நடப்பதுதான் பெண்சுதந்திரம் என்று ஒரு வரையறைக்குள் எதையும் நாம் கூறிவிட முடியாது. சுதந்திரமாக வாழும் ஒரு பெண் கிளப்பிற்கும் போகும் அதே நேரம் சமூக சேவைகளையும் செய்ய முடியும் இது அவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைக் கொண்டது. இங்கும் ஆணுக்கான சுதந்திரம்தான் பெண்களால் தொடரப்படுகின்றது என்ற கருத்துப் பலருக்கும் இருக்கின்றது. முற்றுமுழுதான நல்லதைத்தான் (தமிழ் மக்களால் தீர்மானிக்கப்பட்ட) பெண்ணியம் பேசுபவர்கள் செய்யவேண்டும் என்று இல்லாவிட்டால் இவர்கள் பெண்சுதந்திரத்தைத் தவறாக விளங்கிக் கொண்டுள்ளார்கள் என்று தமது வரையறைக்குள் எல்லாவற்றையும் முடித்துக்கொள்கின்றார்கள்.


பெண்சுதந்திரம் என்று ஒன்று தனியாக இல்லை. தனிமனித சுதந்திரம் என்பதே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது கறுப்பியின் அபிப்பிராயம்.

16 comments:

Vaa.Manikandan said...

//பெண்சுதந்திரம் என்று ஒன்று தனியாக இல்லை. தனிமனித சுதந்திரம் என்பதே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது கறுப்பியின் அபிப்பிராயம். //

சரி தான்.அதுவே மீறி விடக்கூடாது என்பது தான் மணிகண்டன் வாதம்.

கறுப்பி said...

மீறுவது என்றால் என்ன அர்த்தம்? சரியான வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுப்பது அவரவர் சாதுரியம். தவறான வாழ்க்கைப் பாதையை ஒரு பெண் தேர்ந்தெடுத்தல் வீணே பெண்சுதந்திரத்தில் பழியைப் போடாதீர்கள்.

Vaa.Manikandan said...

அட எங்களை எல்லாம் அடிக்க வர்ரீஙளேப்பா! அதான்.....
அளவுக்கு மீறிய சுதந்திரம் நிச்சயம் தவறான பாதைக்கு வழிகாட்டும் அல்லவா?அது மனித மனத்தின் மாற்றவியலாத நியதி கூட.

பத்மா அர்விந்த் said...

சுதந்திரம் இயற்கை அதற்கு எல்லையும் இல்லை.அது ஆணுக்கும் பொருந்தும். எது அளவு என்பதையும், எது சரி, தவறு என்பதையும் தீர்மானிப்பது அவரவரேதான் அது ஆணாயினும் பெண்ணாயினும் அடுத்தவரை காயப்படுத்தாத வரை.

கறுப்பி said...

அது என்ன அளவுக்கு அதிகமான சுதந்திரம்?. சுதந்திரம் என்றால் சுதந்திரம். அதற்கு அளவு என்று ஒண்டு உண்டா? அளவு என்று கட்டுப்பாடு போட்டால் அது சுதந்திரமாகாது. தேன்துளி கூறியது போல //எது சரி, தவறு என்பதையும் தீர்மானிப்பது அவரவரேதான் அது ஆணாயினும் பெண்ணாயினும் அடுத்தவரை காயப்படுத்தாத வரை\\.
இருந்துவிட்டால் சரிதானே?

Balaji-Paari said...

நல்ல பதிவு. நன்றிகள்.

Vaa.Manikandan said...

நான் "அளவு" என்பது சுயகட்டுபாட்டினை.அது ஆணாக இருப்பினும் சரி பெண்ணாக இருப்பினும் சரி.
சுதந்திரம் என்னும் பெயரில்,சுயகட்டுப்பாட்டினை இழத்தல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத விஷயம்.
என்னுடன் பயின்ற பல பெண்கள் இந்த நிலையினை அடைந்தவர்களே.அவர்கள் சொன்ன ஒரே பதில் சுதந்திரம்.
சுதந்திரம் என்னும் பெயரில் ஆடைகுறைப்பினையும்,பல பேருடன் உடலினை பகிர்ந்து கொள்ளுதலையும் எப்படி ஆதரிக்க முடியும்?

கறுப்பி said...

ஆடைக்குறைப்பதும், பலருடன் உடலைப் பகிர்ந்து கொள்ளுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். நாகரீகம் அற்ற தன்மை, நோய்கள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் என்பனவற்றால் இவை தணிக்கை செய்யப்படல் வேண்டும் எனின் அது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொருத்தமானது. கனடாவில் மேலாடை இல்லாமல் பெண்கள் வெளியே செல்லலாம். அதற்காக எல்லாப் பெண்களும் அப்படியா திரிகின்றார்கள். இது அவர்களின் சிந்தனையின் பேரில் விருப்பத்திற்கேற்ற தெரிவு செய்யும் ஒண்டு. தனிமனித சுதந்திரத்தால் அவர்கள் செய்யும் நன்மை, தீமை இரண்டிற்கும் அவர்களே பொறுப்பு. ஒரு பெண் நான் சுதந்திரமானவள் என்று விட்டு இரவு நேரம் தனியாகச் சென்று பிரச்சனையில் மாட்டிக்கொண்டால் அது இந்த சமூகம் மனிதர்கள் என்பதைப் புரிந்து கொள்ளாதது அவளின் தவறே. பெண்களைப் பொத்திப் பொத்தி வளர்க்காமல் இந்த உலகத்தில் அடிபட்டுத் தாமாகத் தெளிந்து கொள்ள விடல் வேண்டும். பெற்றோர்கள் இளம் வயதில் கண்காணிக்கலாம், அறிவுரை கூறலாம். அதை விட்டுப் பெண் என்று தனியாச் சட்டங்களைப் போட்டு அடைத்தல் கூடாது என்பதுதான் கறுப்பியின் கருத்து.

Vaa.Manikandan said...

என்னங்க உடலை பலருடன் பகிர்தல் தனிப்பட்ட விருப்புனு பொசுக்குனு சொல்லிட்டீங்க! அது நம்ம பண்பாடு ஆகாதுங்க....ஊடகங்களின் ஆக்கிரமிப்பு மிக்க இந்த சூழலில் எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு என்பது சாதாரண நிகழ்வு.அதற்காக விரும்புகிறவர்களோடு எல்லாம் உறவு என்பதற்க்கு சுதந்திரம் என்பது எல்லாம் எப்படி பொருந்தும்?ஆடைகுறைப்பினை கூட என்னால் எற்றுக்கொள்ள முடியும்...ஆனால் இது ரொம்ப கஷ்டம்ங்க!

கறுப்பி said...

//என்னங்க உடலை பலருடன் பகிர்தல் தனிப்பட்ட விருப்புனு பொசுக்குனு சொல்லிட்டீங்க! அது நம்ம பண்பாடு\\

பண்பாடு பெண்களுக்கு மட்டும் தான் என்று பாத்தால் அதை கறுப்பி ஏற்றுக்கொள்ள மாட்டன். ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று பாத்தாலும் இடிக்கும். காரணம் இந்தியாவின் பல பெரிய தலைகள் ரெண்டு கலியாணத்தைக் கட்டிப்போட்டு "கம்" மென்று இருக்கின்றார்கள். அதைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை. பண்பாடு எல்லாம் பேச்சோடு மட்டும்தான். அதுசரி தாங்கள் எங்கே எந்தக் காலத்தில் இருக்கின்றீர்கள்?

Vaa.Manikandan said...

நான் பெண்ணுக்கு மட்டும் எனச்சொல்லவில்லயே?
காலம் எதற்க்கு?ஓ....இந்த காலத்தில் சகஜம் என சொல்ல வருகிறீரா?நான் இன்னும் பத்தம் பசலி தான்...ஒரு வேளை சந்தர்ப்பம் வாய்க்காததால் இருக்குமோ?.இருக்கலாம் :)

கறுப்பி said...

சொல்வார்களே ஆண்கள் சேற்றை மிதித்தால் கழுவிவிட்டுப் போய் விடுவார்கள். பெண்கள் மிதித்தால் அது காலத்துக்கும் ஒட்டிக்கொண்டு இருக்குமெண்டு. அந்தக் கதையெல்லாம் இப்ப இல்லை. கலியாணம் கட்டிப் பிள்ளையும் பிறந்த பிறகு ரெண்டாவது எண்டு சொல்லி வீட்டுக்க இன்னுமொரு பெண்ணைக் கொண்டு வந்து பாருங்க அப்ப நான் சொன்ன எந்தக் காலத்தில இருக்கிறீங்கள எண்டதின்ர அர்த்தம் புரியும்.

Vaa.Manikandan said...

என்னங்க இது chatting மாதிரி ஆகிடுச்சு?நீங்களும் நானும் உங்க ப்ளாக்லயே பேசிட்டு இருக்கோம்.நான் கல்யாணாம் ஆகாத சின்ன பயன்.வேற எதாவது எழுதுங்க!

கறுப்பி said...

அனேகமான புளொக்குகள் இப்பிடித்தான் இருக்கு. தமக்குள்ள பேசிக் கொள்ளுவாங்க. சரி நான் ஒரு பெண் என்னைச் சுதந்திரமா இருக்க விடுங்க.
வேறு ஒரு பதிவில சந்திப்போம்.

SnackDragon said...

கறுப்பி அம்மணி,
புலம் பெயர் சூழலிலே குந்திக்கொண்டு ஈழ விடுதலைப்பற்றி புளாக்கிலே எழுதினால் சவுண்டு என்பவ்ர்கள், புலம் பெயர்சூழலிலே குந்திக்கொண்டு, தமிழக பெண்சுததிரத்து வரைமுறை செய்வதை எப்படிப்பார்ப்பது எண்டு தெரியவில்லை :)

Sri Rangan said...

கருப்பி,உண்மையிலேயே ரொம்ப நல்லா விமர்சிக்கிறீர்கள்.பெண் விடுதலையென்பது குறித்த தங்கள் குறிப்புகள் யாவும் தர்க்கமுடன் இருக்கிறது.இது குறித்து ஆண்கள் எதைச்சொன்னாலும் அதுள் எஜமானக் கண்ணேட்டம் கலந்துள்ளது.நாம் யார் பெண்களின் உரிமை பற்றிப்பினாத்த?அவர்களுக்குத் தெரியாதா எது சரி-பிழையென?எதற்கெடுத்தாலும் வந்துவிடுகிறோம் மறுப்புச் சொல்ல(நானும்தாம் கண்டுகொள்ளாதேங்கோ).
ப.வி.ஸ்ரீரங்கன்