Tuesday, May 24, 2005

கவிதை



என்னை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன்
நான் ஒரு பெண்
பிறந்த போதே
பெண் என்று உங்களால் அடையாளப்படுத்தப்பட்டவள் நான்
அடையாளங்கள் உங்களுக்கு இலகுவாயிற்று
அடையாளங்களை ஆகர்ஷித்தீர்கள்
அடையாளங்களைக் கொண்டு என்னைக் கட்டிப்போட முனைந்தீர்கள்

அடையாளங்களை நான் வெறுக்கின்றேன்
அவை புற்று நோயைப் போல் என்னை அரிக்கக் கூடியவை
விலங்குகளாகி எனை சிறையில் பூட்ட முயலுபவை
பொதியை என்மேல் திணிப்பவை
அடையாளங்கள் அழிக்கப்பட வேண்டியவை

பெண் என்பதாய்
உங்களால் எனக்குக் கொடுக்கப்பட்ட
அத்தனை அடையாளங்களையும் அழித்து விட்டேன்
அடையாளங்களின் அடைகலம் எனக்கு வேண்டியதில்லை
இனி எப்படி என்னை அடையாளம் காணப்போகின்றீர்கள்?

நான் என்னை நானாக அடையாளம் காண்கின்றேன்
முடிந்தால்
உங்கள் அடையாளங்களையும் அழித்துக் கொள்ளுங்கள்
துருப்பிடித்த இரும்புகளாலான
உங்கள் இதயங்களை உடைத்து விடுங்கள்
உங்களை என்னால் அடையாளம் காண முடியும்


விலாசம் அற்ற வீடு என்னுடையது
நான் ஒரு பெண்
பெண் என்பதற்காய் நான் பெருமைப்படுகின்றேன்.

2 comments:

இளைஞன் said...

//ஆகர்ஷித்தீர்கள்//

என்றால் என்ன?

கறுப்பி said...

இளைஞன் போற்றுதல் போன்ற கருத்தில் வரும்.

அருவி தாங்கள் சொல்வது உண்மை. பாடல் பொருந்துகின்றது.

சாரா – அது முரண்பாடாக எழுதப்பட்ட வரிகள் தான். நான் மற்றவர்கள் பார்வையில் பெண்ணாக இருக்க விரும்பவில்லை. அதற்காக ஆணாக இருக்க விரும்புகின்றேன் என்று அர்த்தமுமல்லை. (இரண்டும்தானே இருக்கின்றன) நான் பெண் அதற்காகப் பெருமைப்படுகின்றேன். இது என் பார்வைக்கான பெருமை.