Wednesday, May 25, 2005

பெண்கள்: நான் கணிக்கின்றேன்



பயணம் நிச்சயமாகி விட்டது. .எப்படியாவது யன்னலருகிலுள்ள சீட்டை புக் பண்ணுங்கள் என்ற போது “என்ன கடைசி நேரத்தில இப்பிடி கேக்கிறீங்கள்” என்று அவன் சினப்பது தெரிந்தது.. “வரேக்க ஒரு பட்டு வேட்டி சால்வை வாங்கிக்கொண்டு வருவன்” என்றதும்.. வினோதமான ஒரு ஒலியுடன் அவன் சிரித்தான் அவ்வளவுதான்..


எனக்கான இருக்கை எண்ணை கத்திதமான ஒருத்தி சுட்டிக்காட்ட பட்டுவேட்டி சால்வைக்கு முழுக்குப் போட்டு உடலை நுழைத்துக்கொண்டேன்.. நெருக்கமாக இருந்தது.. இடதுபக்கத்தில் பின்னால் இருந்து யாரோ பின்னால் குத்துவதுபோல் ஒருவித ஒலியை எழுப்பியபடியே பிலிப்பீனோ தம்பதி ஒருவர். சண்டை போடுகிறார்களா? சம்பாஷிக்கிறார்களா? புரியவில்லை.. புரிந்து என்ன பண்ணுவது.. தொடரும் ஆறுமணித்தியாலங்களிற்கு எனக்கான பின்ணணி இசை அது என்று மட்டும் புரிந்தது.. வலதுபக்கத்திலிருந்த வெள்ளப்பெண்ணிடமிருந்து வந்த விலையுயர்ந்த வாசனை தலையிடியைத் தந்தது.. சுற்றுமுற்றும் பார்த்தேன்.. கனடா பல்கலாச்சார நாடு என்பது உறுதியானது.. வடஇந்தியப் பெண்மணி ஒருத்தி கணவனின் உழைப்பில் குடும்பத்தைப் பார்க்க ஊருக்குப் போகிறாள் போலும்.. கழுத்து கைகள் எல்லாம் கணவனின் உழைப்பால் நிறைந்திருந்தது..தலையணையை அணைத்தபடி எப்போது விமானம் கிளம்பும் குறட்டை விட்டு நித்திரை கொள்ளலாம் என்பதான நிலையில் அவள் காத்திருந்தாள்.. எடுத்துச் சென்ற புத்தகத்தைக் கூட பிரிக்க முடியாத இறுக்கத்தில் இறுகிப்போய் நான்.. என்னைத் தவிர எல்லோருமே வாழ்வில் பலமணி நேரங்களை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் மீண்டும் எனக்குள் எழுந்தது.. நான் தயாரானேன்..பயணத்திற்காய்..


அவள் என்னை இறுக அணைத்துக்கொண்டாள்.. அதே நீள் சதுர முகம் வயதாகிப்போயிருந்தது.. கட்டையாய் வெட்டப்பட்ட தலைமயிரை தூக்கிக் கட்டியிருந்தாள்.. கருகருவென்றிருந்தது.. நிச்சயம் டை அடித்திருப்பாள்.. உடல் இறுகி ஆண் தனத்தைக் காட்டியது.. மீண்டும் அணைத்துக்கொண்டோம்.. “எத்தினை வருஷமாச்சு.. இப்பவாவது வந்தியே..” என்னுடைய பையைப் பறித்து கழுத்தில் மாட்டியபடியே குதிரை போல் அவள் நடந்தாள்.. நீண்ட தலைமயிரும் மெல்லிய இடையும் நாணமும்.. கூச்சமுமாக பெண்களுக்கே ஆதாரமாக இருந்தவள்.. இன்று.. என்னை நான் குனிந்து பார்த்துக்கொண்டேன்.. விதியை நொந்தபடியே அவள் பின்னால் நான்..


லண்டனின் நெளிந்த குறுகிய ரோட்டும்.. நெருப்புபெட்டி போன்ற கார்களும் வினோதமாக இருந்தது.. அவள் ஆங்கிலப் பாடல் ஒன்றைப் ஓட விட்டு என் கைகளுக்குள் தன் கையைப் பிணைத்து “நல்ல குண்டா வந்திட்டாய்.. அம்மா மாதிரி இருக்கிறாய்” என்றாள்.. பிள்ளைகள் கணவன் குடும்ப வாழ்க்கை எல்லாம் எப்பிடிப் போகுது என்றாள்.. என் அளவில் எனது சந்தோஷங்கள் எனக்குப் பிடித்திருந்தது.. பெருமையாயும் இருந்தது.. அவளை நோகடிக்க விரும்பாது நான் சிரித்தேன்.. அவளும்..


கச்சிதம் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை அவள் இருப்பிடத்திற்குள் புகுந்த போது புரிந்துகொண்டேன்.. வீடு ஒரு பல்கலாச்சார பள்ளியாய் சீனர்களின் சிரித்த வாய் குண்டுப் புத்தாவிலிருந்து.. கறுப்பர்களின் நார்பின்னல் தலையுடனான சின்னச் சின்னச் சிலைகள் ஓவியங்களுடன் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நாட்டவர்களின் கலையுணர்வைக் காட்டி நின்றது.. கண் விழித்து நான் வியப்போடு பார்க்க தனது வேலை அப்படிப்பட்டதென்றாள்.. கட்டிடக்கலை ஆராய்ச்சில் தான் வேலை செய்வதாகவும் பல நாட்டு நண்பர்கள் தனக்கு இருப்பதாகவும் சொல்லி என்னை நான் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்று காட்டினாள்.. எல்லாமே புதுமையாகவும் கொஞ்சம் அதிசயக்கக்கூடியதாகவும் இருந்தன..


நான் அவளுடன் தங்கும் அந்த ஒரு கிழமையில் எங்கெல்லாம் செல்வது, என்ன சாப்பிடுவது என்பதை மிகவும் நேர்த்தியாக எழுதி வைத்து என்னிடம் காட்டி சம்மதமா என்றாள்? நான் யாரையாவது பிரத்தியேகமாகச் சந்திக்க வேண்டுமா என்றும் கேட்டாள்.. அவள் எல்லாவற்றையும் ஒழுங்கு முறையோடு எழுதி வைத்து அதன்படி நடப்பது ஒரு வித செயற்கைத் தனம் போல் இருந்தாலும் அதில் இருக்கும் கச்சிதம் அவள் எனக்காக எடுத்துக்கொண்ட பிரயத்தனம் என்னைக் கவர்ந்திருந்தது.. பதினைந்து வருட நண்பியை முதல் முதலாய் பார்ப்பது போல் வினோதமாகப் பார்த்தேன்.. இருந்தும் அந்த வீடு நிறைவற்றதாய் எனக்குள் பெருமூச்சை வெளிக்கொணர்ந்ததை தவிர்க்கமுடியவில்லை..


கால்கடுக்க லண்டன் "ஹைட்" பாக்கில் பொடேரோ சிப்ஸ் சாப்பிட்டபடியே பாடசாலை நாட்களை மீட்டு மீட்டு வாய்விட்டுச் சிரித்து மீண்டும் எம்மை சிறுமிகளாக்கி புளகாந்கிதம் அடைந்தோம்.. மீட்டுப்பார்க்க எமக்குள் அடங்கியிருக்கும் நினைவுகளைப்போல் புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கு இல்லை என்ற படியே அவளின் கண்பார்வையைத் தவிர்த்து “ஏன் இன்னும் கலியாணம் கட்டாமல் தனியா இருக்கிறாய்” என்ற போது அவளின் தொலைபேசி ஒலித்தது.. என்னிடம் கண்ணால் பொறு என்பதாய் காட்டி விட்டு சிறிது தூரமாய் போய் சிரித்துச் சிரித்துக் கதைத்தவள்.. பின்னர் ”என்ர ப்ரெண்ட் மைக்கல் வெரி இன்ரறஸ்ரிங் பெலோ.. நைஜீரியன் யூனிவேர்சிட்டிலிய வேலை செய்யிறான்.. எப்ப பாத்தாலும் ரிசேஜ் அது இது எண்டு உலகம் சுத்துவான்.. இப்ப பிரான்ஸ்சில நிக்கிறானாம் இன்னும் ட்ரூ வீக்ஸில இஞ்ச வந்திடுவன் எண்டான்.. நீ வாறது அவனுக்குத் தெரியும்.. உனக்கும் ஹாய் சொல்லச் சொன்னான்..” மூச்சு விடாமல் கூறியவள்.. சிறிது நிறுத்தி “வந்தால் என்னோடதான் தங்கிறவன்..” என்றாள் இயல்பாய்.. என் இயல்பு களங்கப்பட்டது..

எனக்கான அந்தக் கிழமை.. அவளுடன் சேர்ந்து ஒவ்வொரு இடமாகச்செல்லும் போதும் மிகவும் அர்த்தம் பொதிந்ததாக பிரமிப்பபை ஏற்படுத்தியது.. குடும்பத்துடன் எத்தனை இடங்களுக்குச் சென்றுள்ளேன்.. எப்போதும் பதட்டமும், களைப்பும், அலுப்பும் எப்படா வீட்டிற்கு வருவோம் என்றிருக்கும்.. வீணான சிடுசிடுப்புக்கள் கோபங்கள்.. வெறிச்சிடும் வாழ்வு.. ஆனால் இப்போது.. இவள் வாழ்வின் ஒவ்வொரு விடயத்தையும் அர்த்தமாக்கி அனுபவிக்கிறாள்.. தோள் தேய்த்து நடக்க கணவன்.. காலுக்குள் இடற குழந்தைகள் அற்ற நிலையிலும்..இவளால் சிரிக்க குதூகலிக்க முடியுமெனின்.. கணவன் குழந்தைகள்.. வீடு கார்.. அதற்கும் மேலாய் இன்னும் கொஞ்சம் போய் வாசிப்பு, எழுத்து என்று என்னை மேன்மை படுத்தி பெண்ணியம், முற்போக்குத்தனம் என்று பவிசு பண்ணி.. மேதாவியாய் உலவி.. இப்போது.. என் முற்போக்குத்தனம் பெண்ணியக் கருத்துக்கள் என்னுள் முரண்டு பிடிக்கத்தொடங்கியது.. இருந்தும் எனக்குள் இவள் ஏன் இன்னும் கலியாணம் கட்டாமல்.. ஆண்களோடு இவ்வளவு க்ளோஸாக..


லண்டனில் பிரசித்தி பெற்ற சுற்றுலாப்பயணிகள் பார்க்க வேண்டிய இடங்கள் என்ற பட்டியலை முடித்து அவளது வேலைத்தளத்திற்கும் அழைத்துச் சென்றாள்.. பல இனத்து நாட்டவர்களும் அவளைக் கண்டதும் ஓடிவந்து அணைத்து என்னையும் சுகம் விசாரித்தார்கள்.. பாடசாலை நாட்களில் ஆண்களை நிமிர்ந்து பார்க்க மாட்டாள்.. ஆனால் இப்போது.. சரளமாக ஆண்களை அணைப்பது அவர்களின் கையைப் பிடித்தபடியே உரையாடுவது.. அவளின் இந்த “போல்ட்நெஸ்” எனக்குள் வியப்பாய்..விரிய.. அவள் இடுப்பை வளைத்துப் பிடித்திருக்கும் வெள்ளையன் ஒருத்தனை தானும் அணைத்து அவன் உதட்டில் முத்தமிட்டு ஈரப்படுத்தி எல்லோரிடமும் இருந்து விடைபெற்றுக்கொண்டாள்.. நான் என்னிலிருந்து மீண்டு வர பல மணிநேரமானது..


அவளை நான் உன்னிப்பாகக் கவனித்தேன்.. ஒருவேளை தீர்க்க முடியாத நோயினால் சாகப்போகிறாளோ? இல்லாவிட்டால் காதல் தோல்வியை மறைக்க சந்தோஷமாக இருப்பதாய் பாசாங்குபண்ணுகிறாளோ..? கர்ப்பம் கொள்ளாததால் கண்டிப்போன உடல்.. நேர்கோடாய் நிமிர்ந்து நிற்கும் விதம்.. நுனிநாக்கு ஆங்கிலம்.. காற்றில் கலைந்து நெற்றியில் வழியும் கருமயிர், கன்னத்தில் குழி விழ குழந்தைபோல் சிரிப்பு.. எனக்குள் எதுவோ எழுந்து என்னைக் கேள்வி கேட்க தலையை உலுக்கி மீள முயன்று மீண்டும் தோற்றேன்..


லெமன் ரீக்குள் கொஞ்சம் தேனை விட்டு எனக்கு ஒரு கப்பை நீட்டியவள்.. சோபாவில் இரு கால்களையும் தூக்கிப்போட்டு தன்னை குஷனுக்குள் புதைத்து தனது ரீ கப்பை இரு கைகளாலும் அணைத்துப் பிடித்து வெளியேறும் சு+ட்டை உள்ளங்கைக்குள் வாங்கி ஒரு குழந்தையைப் போல் கவனமாகக் வாயருகே கொண்டு சென்று கண்களை மூடி முகர்ந்து பார்த்துப் பின்னர் ஒரு முறை மெதுவாக உறிஞ்சி.. ச்ஆஆஆஆ.. என்றாள்.. ஒரு தேனீரைக் கூட இவளால் எப்படி இவ்வளவு அலாக்காக அனுபவிக்க முடிகிறது..


எனக்குள் எழுவது என்ன?.. புரியவில்லை..புரியவதில் சம்மதமுமில்லை.. மௌனமாக இருந்து விட்டு பின்னர் மீண்டும் கேட்டேன்.. “ஏன் நீ இன்னும் கலியாணம் கட்டேலை..?” நான் கேட்பதைப் பொருட்படுத்தாது மீண்டும் ஒரு முறை தேனீரை உறிஞ்சியவள்.. என்னைப் பார்த்துச் சிரித்தாள்.. “எதுக்கு நீ இந்தியா போறாய்” தெரியாததுபோல் கேட்டாள்.. நான் அலுத்துக்கொண்டேன்.. இவள் எதையோ மறைக்கிறாள்.. உண்மையான நட்பு என்பதற்கு இவளிற்கு அர்த்தம் தெரியவில்லை என்ற கோபமும் வந்தது.. அவள் என்னையே பார்த்தபடி இருக்க.. “அதுதான் சொன்னனே.. இலக்கியச்சந்திப்பு ஒண்டு.. “பெண்ணியம்” எண்ட தலைப்பில நான் ஒரு கட்டுரை வாசிக்கப் போறன். எங்கட கலாச்சாரத்தில எப்பிடியெல்லாம் பெண்கள் அடக்கப்படுகிறார்கள்.. எண்ட கட்டுரை” என்றேன் பெருமையாய்.. பின்னர் நான் வாசிக்கும் புத்தகங்கள்.. பற்றியும் எனது முற்போக்குச் சிந்தனை கொண்ட எழுத்து.. பெண்ணியக் கருத்துக்கள் என்பன எவ்வளவு தூரம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, பேசப்படுகிறது என்பது பற்றியும் பெருமை இல்லாது சொல்லி வைத்தேன்.. “குட்.. வாவ்;” என்று விட்டு மீண்டும் தேனீரை உறிஞ்சிய படியே “உன்னை நினைக்க எனக்குப் பெருமையா இருக்கு” என்றாள். எனக்குள் நான் மீண்டும் என்னைத் துளைத்தெடுத்து கேட்டேன் “ஏன் இன்னும் கலியாணம் கட்டாமல் இருக்கிறாய் ஏதாவது பேர்சனல் பிரைச்சனையா?”


அவள் கண்மூடி மீண்டும் தேனிரை உறிஞ்சியது எரிச்சலைத் தந்தது.. “நான் கேக்கிறதை நீ இக்நோ பண்ணுறாய் எனக்கு விளங்குது.. நான் நினைச்சன் நீ என்ர உண்மையா ப்ரெண்ட் எண்டு உன்னுடைய கவலை வேதனைகளை என்னோட பகிரந்து கொள்ளாமல் நீ என்னை தூரத்தில வைக்கிறாய்” நான் கொஞ்சம் உணர்ச்சிவசப் பட..அவள் வாய் விட்டுச்சிரித்தாள்.. பின்னர் எழுந்து வந்து என்னருகில் இருந்தவள்.. “ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மா எண்டுறாள் இன்னும் அதே குழந்தைத்தனம்” என்று என் முதுகில் தட்டி விட்டு என் ரீ கப்பையும் வாங்கிக்கொண்டு குசினியை நோக்கிச் சென்றாள்.. என்ன குழந்தைத் தனம்? நான் கேட்டதில என்ன பிழை? இந்தளவு வயதாகியும் கலியாணம் கட்டேலை.. வாரிசு எண்டு சொல்ல ஒரு பிள்ளை இல்லை.. இதில நகைச்சுவைக்கு எங்கே இடம்.. மனம் அடித்துக்கொள்ள.. நான் மௌனமாக அவளைத் தொடர்ந்தேன்..


மீண்டும் தொலைபேசி அழைத்தது.. இப்போது எல்லாமே எனக்கு கோபத்தைத் தந்தது.. அவளின் ஒவ்வொரு அசைவும் எனக்குள் அசிங்கமாகி.. உன்னிப்பாய் நான் கண்காணிக்க.. ஆங்கிலத்தில் அவள் உரையாடலில் காதல் தெரிந்தது.. இது யார் இன்னுமொருத்தனா? முதலில் நைஜீரியக் கறுப்பன் தன்னுடன் வந்து தனியாகத் தங்குவான் என்றாள்.. பின்னர் வெள்ளையனை அணைத்து முத்தமிட்டாள்.. இப்போது யார் சைனாக்காறனா? கடவுளே நல்ல காலம் நான் தனியாக இங்கு வந்தது.. இவர் வந்திருந்தால் இதுதான் உம்மட க்ளோஸ் ப்ரெண்டின்ர லச்சணமோ என்று கேட்டு என்னையும் தவறாகக் கணித்திருப்பார்.. அவள் தனது தனிமையை முழுமைபெறாத தனது வாழ்க்கையைப் பற்றிக் கதைக்காதது எனக்குள் எரிச்சலை ஏற்படுத்த எப்படியும் ஏதாவது சாக்குச் சொல்லி கெதியாக இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்.. இவளோடு தனித்திருந்தால் தெரிந்தவர்கள் பார்வையில் பட்டு வைத்தால்? நானும் கணிக்கப்பட்டு விடுவேன்..


வாய்க்குள் ஏதோ பாடலை முணுமுணுத்தவள்.. நான் அவளையே உற்றுப்பார்த்தபடி நிற்பதைக் கவனித்து விட்டு “என்ன?” என்பது போல் தலையை ஆட்டினாள்..

“நீ எதையோ என்னட்ட இருந்து மறைக்கிறாய்.. நீ இன்னும் கலியாணம் கட்டாமல் இருக்கிறதுக்கு ஏதோ பெரிய காரணம் இருக்க வேணும் சொல்ல விருப்பமில்லாட்டி விடு..” நான் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டேன்.. அவள் என்னைப் பார்த்து ஒரு விதமாகச் சிரித்தபடியே.. “ சரி சொல்லு. நீ சந்தோஷமா இருக்கிறாயா?” கேட்டாள்.. “ ஓம் அதில என்ன சந்தேகம்.. நல்ல அண்டஸ்ராண்டிங்கான புருஷன் நல்ல வடிவான கெட்டிக்காரப் பிள்ளைகள்.. வசதிக்கும் குறைவில்லை.. அதோட என்ர வாசிப்பு, எழுத்து எண்டு எவ்வளவு சந்தோஷமா இருக்கிறன்.. இதுக்கு மேல ஒரு பொம்பிளைக்கு என்ன வேணும் சொல்லு” என் முகத்தில் அதி உயர்ந்த பெருமை வழிய.. அவள் என்னை உற்றுப் பார்த்தாள்.. அவள் கண்களின் தீவிர ஒளி எனைத் தாக்க நான் பார்வையைத் தாள்த்திக்கொண்டேன்.. என் கைகளைப் பற்றிய படியே அவள் சொன்னாள்.. “நீ சந்தோஷமா இருக்கிறாய் எண்டதை முற்றும் முழுதாக நான் நம்பிறன்.. ஏன் கலியாணம் கட்டினனீ பிள்ளைகளைப் பெத்தனீ எண்டு நான் உன்னட்ட எப்பவாவது கேட்டனானா? என் நெற்றியில் முத்தமிட்டவள் தனது கைகளைக் கழுவி விட்டு படுப்பதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கியிருந்தாள்.. நீண்ட நேரமாக என்னால் நின்ற இடத்தை விட்டு அசையமுடியவில்லை..

7 comments:

Anonymous said...

//நீண்ட நேரமாக என்னால் நின்ற இடத்தை விட்டு அசையமுடியவில்லை.. //

படித்துவிட்டு என் நிலையும் இதுதான். தேர்ந்த எழுத்து நடை!. நல்ல பதிவு. பெண்களைக் கணிக்கிறீர்கள்., இதே அனுபவம் எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது... நல்ல தோழிகள் இடையேயும் இடைவெளி என்பது இருக்கத்தான் செய்கிறது. ஆதங்கத்தினால் கேள்வி எழுப்பபோய் 'தள்ளி நில்' என்கிற பதிலே கேள்விகளாய் திரும்பக் கிடைக்கின்றது. எது புரிகின்றதோ இல்லையோ தற்காலப் பெண்ணியம் என்பது சற்றுப் புரியத்தான் செய்கிறது. ஆனால் புரிந்து கொண்டதில் பெருமைப் பட ஏதுமில்லை!!!

லதா said...

//தனது தனிமையை முழுமைபெறாத தனது வாழ்க்கையைப் பற்றிக் கதைக்காதது//

முழுமை பெறாதது என்று அவர்ர்கள் சொன்னார்களா ? இல்லை நீங்களே தீர்மானித்துக்கொண்டீர்களா ?

//எனக்குள் எரிச்சலை ஏற்படுத்த எப்படியும் ஏதாவது சாக்குச் சொல்லி கெதியாக இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்.. இவளோடு தனித்திருந்தால் தெரிந்தவர்கள் பார்வையில் பட்டு வைத்தால்? நானும் கணிக்கப்பட்டு விடுவேன்..//

சிலர் தங்களுக்கு எது சரி என்றிருக்கிறதோ அதன்படி வாழ்கிறார்கள் என்றும், சிலர் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று மற்றவர்களுக்காகவே வாழ்கிறார்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

கறுப்பி said...

அப்படிப்போடு – நன்றி

லதா - முழுமை பெறாதது என்று கணித்தது கதையை எழுதிய கறுப்பியல்ல அந்தக் கதையின் நாயகி.

துளசி கோபால் said...

அன்புள்ள கறுப்பி,

//வடஇந்தியப் பெண்மணி ஒருத்தி கணவனின் உழைப்பில் குடும்பத்தைப் பார்க்க
ஊருக்குப் போகிறாள் போலும்.. கழுத்து கைகள் எல்லாம் கணவனின்
உழைப்பால் நிறைந்திருந்தது..//

இதுலே என்ன தவறு? கணவனுக்காக வாழ்நாள் முழுதும் உழைக்கின்றவர்களுக்கு
கணவனின் சம்பளக்காசை அனுபவிக்க உரிமை இல்லையா?

கறுப்பி said...

//கணவனுக்காக வாழ்நாள் முழுதும் உழைக்கின்றவர்களுக்கு
கணவனின் சம்பளக்காசை அனுபவிக்க உரிமை இல்லையா?\\

துளசி கோபால் உங்களுக்கு மட்டுமல்ல பல வாசகர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கின்றது. ஒரு பெண் எழுத்தாளர் ஒரு பெண்ணைச் சுற்றி கதையை எழுதும் போது அந்தப்படைப்பு கதைசொல்லியின் சொந்த அனுபவமோ, இல்லாவிட்டால் கதை சொல்லி தன்னைத்தான் நாயகியாகக் கொண்டு படைப்பபைத் தருகின்றார் என்ற பார்வை பலரிடம் இருக்கின்றது. நான் லெஸ்பியன் கதை கூட எழுதியிருக்கின்றேன். உடனே நீங்கள் அப்படியா என்ற கேள்வி கூட என்னிடம் வைக்கப்பட்டிருக்கிறது. இது தவறான பார்வை.
இந்தக் கதையின் நாயகி தன்னை ஒரு இன்ரலக்சுவலாக பிரதிமை பண்ணி மற்றைய அனைத்து நபர்களையும் முக்கியமாகப் பெண்களை கேள்விக்குட்படுத்துகின்றாள். அவள் பார்வைதான் கதையாக வருகின்றது. நாயகிக்கு நகையணிந்த பெண்ணையும் பிடிக்கவில்லை விலை உயர்ந்த பெர்பியூம் போட்ட பெண்ணையும் பிடிக்கவில்லை தனது நண்பியையும் பிடிக்கவில்லை. தன் வாழ்வு முறையை மட்டும்தான் அவள் தரமானது என்று கணிக்கின்றாள். இப்போது புரிந்திருக்கும் என்ற நினைக்கின்றேன்.

ரவியா said...

//.. குடும்பத்துடன் எத்தனை இடங்களுக்குச் சென்றுள்ளேன்.. எப்போதும் பதட்டமும், களைப்பும், அலுப்பும் எப்படா வீட்டிற்கு வருவோம் என்றிருக்கும்.. வீணான சிடுசிடுப்புக்கள் கோபங்கள்.. //

இது புனைவாக இருந்தாலும் ஒரு பெண் எழுத்தாளராக இப்படி எழுதினது எனக்கு பிடித்திருக்கிறது. துணிவுக்கு பாராட்டுக்கள்.
//உடனே நீங்கள் அப்படியா என்ற கேள்வி கூட என்னிடம் வைக்கப்பட்டிருக்கிறது//

ஒரு படைப்பாளியின் புனைவில் சிறிது "தானும்" இருக்கும் என்பதிற்கு உங்களின் "கனவு" பதிவே சாட்சி !

பாராட்டுக்கள் !!!

கறுப்பி said...

ஒத்துக்கொள்ளுகிறேன் ராவியா. லெஸ்பியன்ஸ் பற்றி எழுதியபோது நகைச்சுவையா என்று விட்டு என் நண்பர் என்னிடம் கேட்டார் இது உங்கள் கதையா என்று கேட்டார். இதில் நகைச்சுவை என்ன இருக்கிறது. நான் அப்படியென்றால் ஒத்துக் கொள்ளுவேன். ஆண்கள் பற்றிய கதைகள் முதியோர் பற்றிய கதைகள் எழுதியிருக்கின்றேன். எல்லாமே என் சொந்தக்கதை என்று கூறமுடியாதுதானே. ஆங்காங்கே சில கருத்துக்கள் எட்டிப்பார்க்கலாம். அவ்வளவுதான்.