Tuesday, May 10, 2005

அன்புள்ள அப்பா

"மரணத்தை எண்ணிக் கலங்கிடும் மனிதா மரணத்தின் மேன்மை சொல்வேன். மானிட ஆன்மா மரணமெய்யாது மறுபடி பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய், மேனியைக் கொல்வாய்.. நீ விட்டு விட்டாலும் இவர்களின் மேனி வெந்துதான் போகும் ஓர்நாள்".

என் அப்பாவிற்கு கடந்த மார்ச் மாதம் 80ஆவது பிறந்தநாள் நிறைவு பெற்றது. உடலின் சின்னச் சின்ன உபாதைகளோடு முற்றாக நரைத்த முடியுடன் இன்னும் காலையில் தவறாமல் யோகாசனம் செய்து வரும் ஆறு அடி உயர ஆஜானபாகுத் தோற்றம் கொண்ட எனது அப்பாவைப் பார்க்கும் போது எனக்குள் இப்போதெல்லாம் ஓர் குற்ற உணர்வு. எதற்கு? தெரியவில்லை. அப்பாவின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற மகளாக வாழ்ந்தேனா? நிச்சயமாக இல்லை என்பது தெரிந்த போது குற்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. எட்டுப் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இருந்தும் ஒரு சாதாரண ஈழத் தமிழ் குடும்பம் எதிர்பார்க்கும் ஒரு சாதாரண தமிழ் பெண்ணாக அப்பாவிற்கு நான் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏன் இல்லை என்ற கேள்வியை நான் கேட்டு என்னை சமாதானப்படுத்த என் விடையாக "நான் என்பது தனி மனுசி பெற்றோரின் விருப்பை நிறைவேற்ற ஒரு தனி மனுசியின் விருப்புக்கள் கொல்லப்படக் கூடாது. நான் நானாக வாழ விரும்பின் என் அப்பாவின் விருப்புக்களை நான் நிராகரிக்க வேண்டும்". செய்தேன்.
கனேடித் தமிழ் முதியோர் சங்கத்தில் இணைந்து எனது பெற்றோர் முடிந்தவரை தம்மை சுறுசுறுப்பாகவும், சந்தோஷமாகவும் வைத்திருக்கின்றார்கள். என் குடும்பம், என் குழந்தைகள், வேலை என்று நேரம் போகக் கிடைக்கும் சில இடைவெளி இலவச நேரங்களில் என் பொழுதுகள் என் பொழுது போக்கிற்காக மட்டும் செலவழிந்து போக அருகில் இருந்தும் பெற்றோரைக் காண்பது கூட பல சமயங்களில் மாதக்கணக்காக நீளும். இடைவெளி நீள்கையில் காணும் போது கூட என்ன கதைப்பது என்பது தெரியாமல் போகும். நெருக்கமாகி சுகம் விசாரிக்க முற்படுகையில் நடிக்கின்றேனோ என்று ஒன்று வந்து என்னைத் தடுத்து நிறுத்தும். என் அன்பு, அப்பாவிற்குத் தெரிகின்ற மாதிரி எதையாவது செய்ய வேண்டும் என்று மனம் துடிக்கும். வயதாகி விட்டது. அப்பாவிற்கு ஒன்றாகி விட்டால்? நான் அவர் மேல் கொண்ட பாசம் தெரியாமல் போய் விடுமோ என்று மனம் தடுமாறும். இருந்தும் என் ஒரு அசைவும் நடித்தலோ என்று எனக்குள்ளேயே கேள்வி எழுகின்றது. இந்த சமூகத்தில் எல்லோருமே நடிக்கின்றார்களோ? என்ற ஐயம் மிஞ்சி நிற்கின்றது. அப்படியாயின் எனக்கு மட்டும் ஏன் நடிக்க முடியவில்லை. இல்லை எல்லோருமே இயல்பாக இருக்கின்றார்கள். நான் மட்டும்தான் இயல்பற்றவள் என்றும் மனம் தடுமாறுகின்றது.

மரணம் என்பது இயல்பானது. எண்பதை எட்டி விட்ட எனது தந்தையின் நடை தளர்ந்து விட்டது, பற்கள் சிலவற்றைக் காணவில்லை. எட்டுப் பிள்ளைகள், பதினாறு பேரப்பிள்ளைகள், இரண்டு பூட்டப்பிள்ளைகள் கண்டு சில சறுக்கல்ளையும், பல ஏற்றங்களையும் கொண்ட நிறைந்த வாழ்வு. “அப்பா இப்ப என்ன நினைக்கிறீங்கள்? சந்தோஷமா வாழ்ந்தனீங்களா? அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கும் உங்ளுடைய நண்பர்களின் சாவு உங்களுக்கு என்னத்தைச் சொல்லிப் போகுது? கேட்க ஆசை. இது தவறாக அணுகுமுறையோ? நான் அடுத்த முறை அப்பாவைக் காணும் போது என்ன கதைக்க?. என் அப்பாவுடன் மனம் விட்டுக் கதைப்பதற்கு ஏன் ஒன்றும் இல்லாத வெறுமை எனக்குள் தேங்கி நிற்கின்றது. புரியவில்லை. புரிதல் விரைவில் நிகழவேண்டும். இல்லாவிடின் நித்திரையற்ற என் இரவுகளுக்கு அர்த்தமற்றுப் போய் விடும்.

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் மனிதா மரணத்தின் மேன்மை சொல்வேன். "மானிட ஆன்மா மரணமெய்யாது மறுபடி பிறந்திருக்கும்" மேனியைக் கொல்வாய், மேனியைக் கொல்வாய்.. நீ விட்டு விட்டாலும் இவர்களின் மேனி வெந்துதான் போகும் ஓர்நாள்.

இதில் எனக்கு நம்பிகை இல்லை

15 comments:

Aruna Srinivasan said...

இந்த வார இறுதியில் உங்கள் பெற்றோரை ஒரு முறை பார்த்து வாருங்கள். பெரிதாக பேச வேண்டும் என்பது அவசியமில்லை. சும்மா பார்க்க போனாலே போதும். உங்கள் அன்பு அவர்களுக்கு நீங்கள் சொல்லிதான் தெரிய வேண்டும் என்றில்லை. சின்னதாக புன்னகை - அடி வயிற்றிலிருந்து வருமே அந்தப் புன்னகை போதுமே. வாத்சல்யத்தோடு அவர்கள் கையைப் பற்றிக் கொண்டிருந்தால் கூட போதுமே.

"என் அன்பு அப்பாவுக்குத் தெரிகிற மாதிரி..." என்று சொல்கிறீர்கள். பின்னே, இதில் நடிப்பு என்கிற வார்த்தைக்கு இடம் ஏது கறுப்பி? இது முரணாக இல்லையோ?

அப்படியே நடிப்பு என்று உங்களுக்குத் தோன்றினாலும், ஏன் நீங்கள் தயங்க வேண்டும் ? அப்படி என்ன உலகில் துளிக்கூட சமரசம் செய்யாமலேயே வாழ்கிறோமா என்று யோசித்துப் பாருங்கள். யார் யாருக்கோ, எதற்கோ.. நம் வேலைக்காக, தெரிந்தவர்கள்/ அறிந்தவர்கள் என்று எங்கேயோ எதற்கோ பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும்தானே இருக்கிறோம்? நம்மைப் பெற்றவர்களுக்காக முகத்தில் ஒரு புன்னகைக் கீற்று வரக்கூடாதா என்ன?

அவர்களைப் பார்க்கதான் போனீர்கள் என்பது தெரிந்தாலே அவர்கள் சந்தோஷப்படுவார்கள். - ஏதோ வேலையாக போய்விட்டு, அப்பாவையும் பார்த்துவிட்டு.... ரீதியில் இல்லை. காரைப் போட்டுக்கொண்டு அவர்களைப் பார்க்க மட்டுமே என்று ஒரு நேரம் ஒதுக்குகிறீர்கள் பாருங்கள் - அது அன்பு. அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறீர்களே அது அன்பு. இதில் எங்கே நடிப்புக்கு இடம் என்று புரியவில்லை.

புரிதல் வரும். தானே வரும்.

கறுப்பி said...

நன்றி அருணா. ஏனோ தெரியவில்லை. பெரிய இடைவெளி எனக்கும் எனது பெற்றோரிற்கும் இடையில் வந்துவிட்டு போன்ற ஒரு குற்ற உணர்வு. இது எனக்கு மட்டுமா? எல்லோருக்கும் உள்ளதா தெரியவில்லை.

-/பெயரிலி. said...

கிட்டத்தட்ட கமலாதாஸ்-->சுரையா ரேஞ்சில எழுதியிருக்கிறியள். திரும்பி முருங்கை ஏற மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

முதிர்ச்சி என்பது, எங்கள் இயலாமையின் எல்லைக்கோட்டைப் புரிந்துகொள்ளுதலே என்பதுதான் என் கருத்து. அந்த வயது இப்ப உங்களுக்கு வந்திருக்கெண்டு நினைக்கிறன். மெய்யாத்தான் சொல்லுறன். ஆனா, கவனம். இந்த மனநிலை சின்ன வயதிலே செய்ததெல்லாமே பிழையோ எண்டு எண்ணுற நிலையையும் தந்திடும்.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

கறுப்பி, நன்றாக எழுதியிருக்கிறீர்கள். எல்லோரும் ஒரே வழியில் அன்பை வெளிப்படுத்துவதில்லை. உங்களின் இந்தப் பதிவும் சுய ஆதங்கமுமே உங்கள் அன்பைச் சொல்கிறது. உங்களுக்கான பதிலை அருணா அழகாக எழுதியிருக்கிறார்கள். அதையே நானும் சொல்வேன். உங்கள் பெற்றோரைப் பார்த்து வாருங்கள். பெரிதாகப் பேச வேண்டும் என்பதில்லை. உடனமர்ந்து ஒரு கோப்பைத் தேநீர் பருகுங்கள். (நீ என்ன செய்தாய் என்று திருப்பிக் கேட்டுவிடாதீர்கள்!)

பத்மா அர்விந்த் said...
This comment has been removed by a blog administrator.
பத்மா அர்விந்த் said...

karupi
I tried to reply in Tamil and found many typos.so deleted it.
Please visit your father. some time, a simple hug can covey what one cannot express in 1000 words.
You are not alone. My husband has same problem with his parents too.

SnackDragon said...

கறுப்பி,
முதலில் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியது, எவரின் வாழ்வுக்கும் தனித்தனிக் காரணிகள் உண்டு.
(புரியல்லைன்னா ரென்சன் ஆகாதீங்க எனக்கும் மப்பாகத்தான் இருக்கு) அதாவது, நீங்கள் உங்கள் அப்பாவுக்கு நல்ல மகளாக இருந்திருக்கலாம். ஆனால் நல்ல நண்பராக இருந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். எனவே ஒரு நண்பனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியதை உங்கள் அப்பாரிடம் பகிர்ந்து கொள்ள முடியாது போயிருக்கலாம். அதற்கேயதற்குரியக் காரணிகள் உள்ளன. பொதுவில் இதை ஜெனரேஷன் கேப் (பாரம்பரிய இடைவெளி) என்று சொல்கிறோம். இது தவிர இந்த இடைவெளிக்கு நமது கலாச்சாரமே முக்கிய காரணமாய் அமைகிறது என்று நான் சொல்வேன்.
நமது தமிழக/ஆசிய (?)குடும்ப அமைப்பில் , மனித வாழ்வின் முக்கிய விசயங்கள் யாவும் ஒரு திருடனுக்குரியவை போல் பார்க்கப்படுகின்றன. உதாரணமாய், காதல், காமம் போன்றவை. எனவேதான் இவை பற்றி குடும்பத்தாரோடு விவாதிக்க , பகிந்துகொள்ள , மகிழ வாய்ப்பில்லாத ஒரு சூழ்நிலையில் நாம் உள்ளோம். என் நண்பனோடு பகிர்ந்து கொண்ட எத்தனையோ விசயங்களை என் தமக்கையோடு பகிர்ந்து கொண்டதில்லை. அதையெல்லாம் பகிர்ந்து கொண்டிருந்தால் இன்று எனக்கும் அவர்களுக்கும் நல்ல அலைவரிசை இருந்திருக்கும் என்று நான் நினைத்ததுண்டு. அதிர்ஷ்டவசமாக, பெரும்பான்மையான(**) அது போன்ற விசயங்களை என் தந்தையிடம் என்னால் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அதற்கு நான் மட்டுமே காரணமல்ல , அவரும்தான். அது போலவேதான் என் தமைக்கையும். அவருக்கும் எனக்கும் இருக்கும் இடைவளிக்கு நான் மட்டுமே காரணமல்ல.
(ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன்) கதலுக்காக உங்கள் தந்தையின் நலன் பாதிக்கப்படுகிறதென்றால், அதற்கு நீங்கள் மட்டும் காரணமில்லை. உங்கள் தந்தையின் புரிதலும்தான். அதன் பின்னணி அவரது கலாச்சார சாய்வுகளும்தான்.(யாரங்கே விழுமியம் என்று முனகுவது ..மூச்..)
உங்களால் இயன்றதை நீங்கள் செய்யுங்கள் . உங்கள் திருப்திக்காக . நீங்கள் உங்கள் தந்தை மேல் வைத்துள்ள அன்புக்காக. அதை கடமை என்று கூட சொல்லாதீர்கள். களங்கப்பட்டுவிடப்போகிறது.நடிப்பு என்று சொன்னால் எல்லவற்றையும் சொல்லவேண்டும், இல்லையென்று கொண்டால் எல்லாவற்றையும் அப்படியே கொள்ள வேண்டும். உங்கள் சுயநலத்துக்கு தகுந்தாற்போல் இந்தப் புரிதல்களை மற்றிக்கொண்டு பயன்படுத்தாதவரை நீங்கள் நேர்மையானவர்தான்.

Anonymous said...

பெற்ற பிள்ளை தாய்தந்தையரைப் பார்க்க இவ்வளவு தயக்கமமும், பரிந்துரைகளும் தேவையா?..."ஈன்று புறந்தருதல்" மட்டுமே அவளது கடன்! ஆனால் அவள் அத்துடன் நின்று விடுகிறாளா?. பிள்ளைகள் பெற்று வளர்த்த நமக்கு தெரியுமே!. படிப்பையும், பண்பையும் பார்த்து அவர் வழங்கினாலும், இல்லாவிடாலும் நம்மை நாம் தீர்மானித்துக் கொள்ள தேவையான சுதந்திரத்தை வழங்கி இருக்கிறார்தானே?... குற்ற உணர்வு என்பது கொல்லும் விஷம்!... அதனால் கிஞ்சித்தும் ப்யன் இல்லை. உங்கள் பெற்றோரைப் பார்ப்பது உங்கள் விருப்பம்!. ஆனால், உங்கள் பிள்ளைகள் உங்களைப் பார்த்துகொண்டிருக்கிறர்கள்!.

Sri Rangan said...

கருப்பி,வார்த்தைகளால் உணர்வுகளைப் பெரிதாக வெளிப்படுத்தமுடியாது!எனவே கரங்களைப் பற்றி மௌனித்திருப்பது -தோளில் கரங் கோற்பது உணர்வின் அதிஉச்சபச்சமொழி.Aim of all education should be to transform the spirit into a fountain and not into a cistern!

கறுப்பி said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள். ஏதோ மனதில் உள்ளதை உள்ளபடி எழுதியிருந்தேன். குழம்புவதும் தெளிவதும்தானே வாழ்க்கை. பின்னூட்டங்களைப் பார்த்த பின்னர் ஒரு தெளிவு வந்து விட்டது போல் இருக்கின்றது. நன்றிகள் அனைவருக்கும்.

SHIVAS said...

இலங்கை தமிழர்களை மேற்கோள்காட்டி கனேடிய பிரதமர்(?)மற்றைய கனேடிய மக்களுக்கு, பெற்றோர்கள் தினத்தன்று ஒரு கருத்தை சொன்னார் என்று யரோ சொன்னதை இங்கு சொல்கிறேன்.
பெற்றோர் தினத்தன்று கூடியிருந்த மக்களை பார்த்து அவர்,"கனடாவில் வசதியாக வாழும் நாம், பெற்றோர்களை காப்ப்கங்களில் விட்டுவிட்டு, வருடத்திற்கு ஒரே ஒரு நாள் மட்டும் பெற்றோர் தினம் என்று சொல்லிக்கொண்டு கொண்டாடுகிறோம். ஆனால் பல ஆயிரம் மயில்களுக்கு அப்பாலிருந்து காலத்தின் கட்டாயத்தால் கனடா வந்த இலங்கை தமிழர்கள், அரும்பாடுபட்டாவது தங்கள் பெற்றொரையும் கனடா வரவழைத்து தங்களுடன் கடைசிவரை வைத்துக் கொள்கிறார்கள். வருடம் முழுவதும் பெற்றொர்களை தங்கள் வசம் வைத்து கொண்டாடும் அவர்களை பார்த்து நாமும் திருந்தவேண்டும்" என்று கூறினாராம்.

ஆனால் முதல் முரையாக தமிழ் குடும்பம் ஒன்று தங்கள் பெற்றோரை முதியோர் காப்பகத்தில் விட்டதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது.
நாளை உங்களுக்கும் வயதாகும் என்பதை மறக்கவேண்டாம். நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் தான் சிறந்த உதாரணமாக இருக்கவெண்டும். தமிழர்களுடைய கலாச்சாரம் என்பது கனேடிய வீதிகளில் கந்தனுக்கு தேர் இழுப்பது மட்டுமல்ல என்பதை தயவுசெய்து நம் பிள்ளைகளுக்காவது கற்றுக் கொடுக்கவேண்டும்.
ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால், மன்னிக்கவும்.

கறுப்பி said...

காஞ்சி பில்ம்ஸ் ரொம்பத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். என்னுடைய பெற்றோர் முதியோர் காப்பத்தில் இல்லை. எனது மூத்த சகோதரியுடன் இருக்கின்றார்கள். அடுத்து முதியோர் காப்பத்தில் இருக்கும் பல ஈழத்து முதியோர்களை எனக்குத் தெரியும் அவர்கள் தமாகவே முதியோர் காப்பகத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பிச் சென்று இருக்கின்றார்கள். காரணம் அவர்கள் தமக்கான "பிரைவசி" யை விரும்புகின்றார்கள். அவர்களால் தனியாக இயங்க முடிய மட்டும் தாம் தனியாக இருப்பதைப் பல படித்த ஆங்கிலம் பேசக்கூடிய முதியோர் விரும்புவதை நான் பார்த்திருக்கின்றேன்.
நானும் அப்படித்தான் நினைத்திருக்கின்றேன். எனக்கு மூன்று குழந்தைகள் இருந்தாலும் என்னுடைய பிற்காலத்தில் என்னால் தனியாக இருக்கலாம் என்று நான் எண்ணும் வரை தனியாக இருப்பதையே நானும் விரும்புகின்றேன். அதற்காக பெற்றோர் பிள்ளைப் பாசம் குறைந்து போய் விட்டது என்று அர்த்தமல்ல.

SHIVAS said...

ஐயையோ மன்னிச்சிடுங்க.

கறுப்பி said...

காஞ்சி பிலிம்ஸ் (*_*)

Anonymous said...

My appa and amma passed way only last year. My heart still heavy. I feel sad all the time. Please everybody don't miss the change to see your amma and appa hold their hands,etc. Basically be there for them atleast emotionally.I miss them big time. I agree with "Aruna Srinivasan" 100%