Wednesday, May 25, 2005

கனவு

எல்லோருக்கும் ஒரு நிறைவேறாத கனவு, ஆசை இருக்கும். எப்படியாவது அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். சில சாத்தியமான கனவாகவும், சில சாத்தியமற்றுமிருக்கும். என் கனவு சாத்தியமானது. ஆனால் நிறைவேறுமா என்ற குழப்பம் இப்போதெல்லாம் அடிக்கடி வரத் தொடங்கிவிட்டது. என் கனவு கன்யாகுமாரியிலிருந்து இமையம் வரை பயணம் செய்ய வேண்டும். ஆடம்பரமான பயணமாக இல்லாமல் மடங்களில் சாப்பிட்டுப் படுத்து வெறுமனே ஒரு பாண்ட் ரீசேட்டுடன் முடிந்தவரை நடையாக ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் கால அளவு பற்றிய கவலை எனக்கில்லை. பயணத்தின் வழியில் உயிர் போயினும் அக்கறையில்லை. பயணம் மேற்கொண்ட திருப்பதி இருந்தால் போதும் என்ற கனவு தற்போதெல்லாம் ஒரு உந்துதாலக என்னை அலைக்கழிக்கின்றது. இது சாத்தியமா? என்று அடிக்கடி மனம் உழலத்தொடங்குகின்றது. குடும்பம், குழந்தைகள் என்று கட்டுப்பட்ட பின்பு இப்படியான வினோத ஆசை வரக்கூடாதோ? ஆனால் வந்து விட்டது. குழந்தைகள் வளர்ந்த பின்பு என்று தள்ளிப் போட்டால்?
என் கனவுக்குள் தான் இல்லாததால் என் கணவருக்கு என்மேல் கோபம். தனியாக இந்தியாவில் பயணம் செய்வது சாத்தியமில்லை என்பது என் நண்பர்களின் வாதம். எந்த ஒரு உறவும் இல்லாமல் புதிய இடம், புதிய மனிதர்கள் இதில் கிடைக்கும் திருப்திதான் எனக்கு வேண்டும். எது எப்படியிருப்பினும் என் கனவு இதுவாக இருக்கும் பட்சத்தில் அதை எப்படியாவது சாத்தியப்படுத்த முயல வேண்டும். முடியுமா? வெறும் கனவுதானா?

எவ்வளவுதான் சாப்பாட்டைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் (நினைக்கின்றேன்) உடல்பருக்கின்றது. எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் (இதுவும் நினைப்புத்தான்) சுறுசுறுப்பு இழந்து களைக்கின்றது. I am not getting any younger.. (So Sad)

15 comments:

சயந்தன் said...

உது தான் சொல்லுறது கலியாணத்துக்கு முதல், ஆசைப்படுற எல்லாத்தையும் செய்து முடிச்சுப் போட வேணும். சொல்லப்போனால் என்னை மாதிரி!

கறுப்பி said...

ஓ சயந்தன் எதுவரை சென்றீர்கள்? கறுப்பியைப் பொறுத்தவரை திருமணமே தேவையில்லாத பந்தம்.

கரிகாலன் said...

கறுப்பி அக்கா!!

"ஆசை போவது விண்ணிலே கால்கள்
போவது மண்ணிலே பாலம் போடுங்கள்
யாராவது"

வீட்டுக்கு வீடு வாசல் படிதான்.உறவுகள்,கடமைகள்,பொறுப்புக்கள் யாவும் தலைமேல் சுமக்கும் போது(விரும்பியோ விரும்பாமலோ)சில விடயங்களில்
கனவு காண மட்டும் தான் நமக்கு உரிமை இருக்கிறது.ஆனாலும் கனவு
காண்பதை நிறுத்திவிட்டால் மனிதன்
துவண்டுவிடுவான் வாழ்க்கை சுமையால்.
எனவே கனவு காண்பதை நிறுத்தாதீர்கள்
அது மனிதனுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், மனிதனை வெற்றி நோக்கி செலுத்தும் ஒரு உந்து சக்தி.
எனவே கனவு காண்பதனை நிறுத்திவிடாதீர்கள்.ஒரு போதும் நிறுத்தி
விடாதீர்கள்.

Jayaprakash Sampath said...

கறுப்பி, இந்தப் பதிவைப் படித்த பின்பு, உங்களை நேரிலே பார்த்து கைகுலுக்க வேண்டும் போல இருந்தது. எனக்கும் இப்படி கனவுகள் உண்டு. கூட யாரும் இல்லாமல், தன்னந்தனியாக வெகுதூரம் பயணம் செய்ய வேண்டும். நான் வேலையில் (1996 இல்) இருந்த போது, அப்படிப்பட்ட அனுபவம் ஒரு முறை நேர்ந்தது ( ஆனால் பாதயாத்திரை அல்ல) . சென்னை -> திருவனந்தபுரம் -> கொச்சி ->பெங்களுர் ->கோவா->மும்பை-> இந்தோர் ->ராய்ப்பூர்->கல்கத்தா->விசாகப்பட்டினம்->சென்னை. கையிலே ஒற்றை சூட்கேசுடன் கிளம்பி, கிடைத்த விடுதிகளில், தங்கி, கிடைத்ததை சாப்பிட்டு, உடன்பு சரியில்லாமல் போய், நானே என்னை கவனித்துக் கொண்டு, தன்னந்தனியாக பியர் சாப்பிட்டு, மும்பையில் முதல் முதலாக ·ப்ளோர் ஷோ பார்த்து, இரவுப்பயணங்களில் berth க்கு லஞ்சம் கொடுத்து, பாதாள ரயிலை ஆவென்று பார்த்து வியந்து செலவிட்ட அந்த நான்கு மாதங்களில் கிடைத்த அந்த அனுபவம், வலைப்பதிவுகளில் சிலருடன் சண்டை போடும் போது கூட கிடைத்ததில்லை. என்றைக்காவது சந்தர்ப்பம் கிடைக்கும் போது, எல்லாத்தையும் தூக்கிப் போட்டு விட்டு, இந்தியா முழுக்க தனியாக வலம் வரவேண்டும் என்று ஒரு ஆசை இருக்கிறது.

பினாத்தல் சுரேஷ் said...

Hi Icarus!
1996:
சென்னை -> திருவனந்தபுரம் -> கொச்சி ->பெங்களுர் ->கோவா->மும்பை-> இந்தோர் ->ராய்ப்பூர்->கல்கத்தா->விசாகப்பட்டினம்->சென்னை???
I was travelling similarly in same time too..
except Indore, Add Bilaspur, Bhilai and Ranchi.. Same time, similar trip..

Strange Coincidence..

Forgive my english Karupi..Kalappai vootle thuru pidichi pochi.

Nice post..

கறுப்பி said...

ம்.. Icarus நல்லாத் தான் அனுபவித்திருக்கின்றீர்கள். நான் 2003இல் பிள்ளைகள் அண்ணா குடும்பத்துடன் இந்தியா வந்திருந்தேன். கோவா ஊட்டி கன்யாகுமாரி திருவனந்தபுரம் நாகர்கோயில் சென்னை என்று போய் வந்தோம். பிள்ளைகளுடன் வந்ததால் முற்றுமுழுதாக அவர்கள் சந்தோஷத்திற்காக கடற்கரைகளில்தான் நாட்களைக் கழித்தோம். என் சந்தோஷத்திற்காக ஒரு இலக்கியக் கூட்டத்தில் (காலச்சுவடு கண்ணன் ஒழுங்கு செய்தது) கலந்து கொண்டு பல இலக்கியவாதிகளைச் சந்திக்கும் சந்தர்பம் கிடைத்திருந்தது.
அடுத்தது நான் மட்டும் செல்ல வேண்டும். நீங்கள் பியரோடு நிறுத்திக் கொண்டு விட்டீர்கள். இந்தியாவில் தூய்மையான கஞ்சா கிடைக்குமாமே? முயன்றதில்லையா?

கறுப்பி said...

ரஜனிகாந்த் ஏன் ஆளாளுக்கு வெருட்டுறீங்க…

மயிலாடுதுறை சிவா said...

கறுப்பிக்கு,
வணக்கம். உங்களது கனவு நியாயமே. என்க்கும் இதுப் போல ஆசை உள்ளது. ஆனால் உங்களைப் போல நடந்து அல்ல. புகை வண்டியில் இந்தியா முழுக்க மனதிற்குப் பிடித்த நண்பர்களோடு செல்ல ஆசை. ஆனால் உங்களுக்கு நடை பாதை சாத்தியமா? அல்லது நீண்ட நாட்கள் ஆகலாம்.

நீங்கள் எஸ்.ராம கிருஷ்ணனின் "துணையெழுத்து" படித்தது உண்டா? நீங்கள் சிந்திப்பதுப் போல பல கட்டுரைகள் பல உண்டு.

உங்களின் எழுத்துகளில் பலவற்றை நான் விரும்பி படித்தது உண்டு. உங்களுக்கு திருமண வாழ்க்கை கொஞ்சம் போர் அடித்து விட்டதோ? அந்த வட்டத்தில் இருந்து மீண்டு வருதல் சுலபமான காரியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

நன்றி

மயிலாடுதுறை சிவா...

கறுப்பி said...

மயிலாடுதுறை சிவா.
என்னுடைய இந்த பத்தியைப் படித்துவிட்டு நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்துக் கேட்டார் என்ன நடந்தது என்று. ஞானம் வந்து விட்டதா? விரக்தியா? கணவருடன் சண்டையா? (யாருக்குத்தான் இல்லை அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை) இப்படியாக.
எதற்காக விரக்தி, ஞானம், பிரச்சனை என்ற பார்க்க வேண்டும். என் கனவு, இது ஆசை இது. குடும்ப சந்தோஷம் என்பது ஒன்று. அது கிடைக்கிறது. ஆனால் கிடைக்காததற்குத்தானே மனம் ஏங்கும். ஏங்குகின்றது. இரண்டும் கிடைத்தால் மிகமிக சந்தோஷம் தானே. குழந்தைகள் வளர்வது, திருமணம் செய்வது, பின்னர் பேரப்பிள்ளை இதில்தானே எல்லோரும் சந்தோஷம் காணுகின்றார்கள். எல்லோரரும் ஒருமாதிரி இல்லை. என் சந்தோஷம் இப்படி ஒரு பாதையை விரும்புகின்றது. அவ்வளவுதான்.
நடந்தா என்று கேட்டீர்கள். எல்லா இடமும் நடக்க முடியாது ஆனால் முடிந்தவரை நடந்தேதான். காலம் பற்றிய சிந்தனை இல்லையானால் அதில் சிரமம் இருக்காது.

துளசி கோபால் said...

கறுப்பி,

எங்களுக்கும் இந்தக் கனவு இருக்கு! ஆனா நடக்க முடியாது.
'மணிக்கூண்டு' சொன்னது போல ரயில்வண்டி!!! இந்தியா முழுக்கச்
சுத்தணும்!!! இவர் ரிடையர் ஆனதும் ஒருவருஷம் இப்படிப் போகலாமுன்னு
இருக்கோம்!!!

என்றும் அன்புடன்,
துளசி.

வசந்தன்(Vasanthan) said...

திருமண பந்தமே தேவையில்லாதது என்று கறுப்பி சொன்னதைக் கேட்டு கோபம் கொண்ட ரசிகர்களில் நானும் ஒருவன். (என்ன, எங்கயோ கேட்ட மாதிரியிருக்கா?)

நிறையத்தடவை, வன்னியில் தனியாக மைல் கணக்கில் காலாற நடந்திருக்கிறன். கால்கடுக்கவும் நடந்திருக்கிறன். நடப்பது நிச்சயமாக ஆனந்தமான அனுபவம்தான்.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

எனக்கு நடராஜா சேர்விஸ், ட்ரெயின், விமானம், சைக்கிள் என்னத்தில என்றாலும் பரவாயில்ல...நீங்க சொல்லுற மாதிரி இந்தியாவையும், இலங்கையையும்(<--எந்தளவு சாத்தியம் என்று கேக்கக்கூடாது!!) சுத்திப் பாக்கோணும். காலம் பிரச்சனையேயில்லை..தனியே..அதுவும் இந்தியா & இலங்கையிலா என்கிற பேச்சுக்கள் தான் கனவை நனவாக்க முடியாமல் எதிரே நின்று எரிச்சல் படுத்துகின்றன.

Nirmala. said...

ஓ... கூடிய சீக்கிரம் இப்படி நிறையப் பேர் கிளம்பப் போகிறோம் போலிருக்கு. எங்கேயாவது வழியில் சந்திக்கலாம் கறுப்பி.

நிர்மலா.

சன்னாசி said...

கல்லூரி வாழ்க்கையின் கடைசிக்காலத்தில் அடித்த ட்ரிப்பில் சென்னையில் தொடங்கி பெங்களூர் வழியாக மேற்குக் கடற்கரை வழியாகத் தொடங்கி வடக்கே போய், திரும்ப இறங்கி, கிழக்குக் கடற்கரை வழியாக வந்து சேர்ந்தோம். காஷ்மீர், வடகிழக்கு (அஸோம் விதிவிலக்கு) தவிர அனைத்து மாநிலங்களும் போய்வந்தாயிற்று. ஜெய்ப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது சங்கடமாயிருக்கிறதென்று செருப்பைக் கழற்றிவைத்துவிட்டு இரண்டு நிமிடம் கழித்துப் பார்த்தால் ஜீபூம்பா தூக்கிப்போயிருந்தது! பழைய நினைவுகளைக் கிண்டிவிட்டீர்கள். அஹமதாபாத் ரயில்வே நிலையத்தில் பெரும் தண்ணிக்குப்பிறகு ரயில்பெட்டியில் இருந்த பரோட்டாவைச் சாப்பிடலாமென்று வந்துபார்த்தால் இரண்டு நாய்கள் கம்பார்ட்மெண்ட்டுக்குள் ஏறி பரோட்டாப் பார்சல்களைப் பிரித்து மேய்ந்துவிட்டு இந்த நாயும் பால்குடிக்குமா என்ற ரீதியில் Shrek-2வில் வரும் பூனை போல எங்களைப் பார்த்து விட்ட ஒரு பரிதாப லுக்கு இருக்கிறதே!! உருகிப்போய்விட்டோம்; உருகாத இரண்டு பேர் விட்ட உதையில் தலைதெறிக்க அவை ஓடிப்போனது வேறு கதை!! எத்தனை அனுபவங்கள்! பேருக்குத்தான் கல்விச் சுற்றுலா - மற்றபடி கதையே வேறு!! இப்போது யோசித்துப் பார்த்தால் எவ்வளவு அருமையான அனுபவம் என்றுதான் தோன்றுகிறது.

கறுப்பி said...

வசந்தன் யாரையா உங்களக் கலியாணம் கட்ட வேண்டாம் எண்டு சொன்னது. அங்க இன்னுமொருத்தர் ஒற்றைக்காலில நிக்கிறார் வலைப்பதிவாளர்களே பொம்பிள பாக்கத் தொடங்கிட்டீனம். வாழ்க வளர்க.
துளசி கோபால், ஷ்ரேயா, நிர்மலா பாருங்கள் அனேகமாக ஆண்கள் தாம் ஒரு trip போனதாகக் கூறுகின்றார்கள் பெண்கள்தான் கனவுகளில் வாழ்கின்றார்கள்.
நிச்சயமாக இந்தியாவில் ஏதாவது ஒரு மடத்தில் நிறம்பப்பேரைச் சந்திக்கப் போகின்றேன் என்பது மட்டும் தெளிவாகின்றது.
மாண்ரீஸர் - ஏனையா இதையெல்லாம் சொல்லி என்ர வயிற்றெரிச்சலைக் கிளப்பிறீங்க?
நல்லா என்ஜோய் பண்ணியிருக்கிறீங்க எண்டு மட்டும் விளங்குது. விளக்கமா இது பற்றி ஒரு பதிவு போட்டு மற்றவர்களின் வயிற்றெரிச்சலையும் பெற்றுக் கொள்ளலாமே?