Friday, June 03, 2005

குட்டித்தூக்கம்



கோடை காலம் வந்துவிட்டாலே அலுவலக வேலை நேரத்தில் மதிய உணவிற்குப் பிறகு கண்களை இழுத்து இழுத்து நித்திரை வருகின்றது (வலைப்பதிவை வாசிக்க இன்னும் கூடுகின்றது). அதிகம் வேலை இல்லாத போதும் அலுவலகம் கொஞ்சம் அமைதியாகக் காட்சியளித்தால் ஏன் ஓரு குட்டித்தூக்கம் போடக்கூடாது என்று மனம் இழுக்கிறது. ஆனால் துணிவில்லை. நான் பாட்டுக்கு நித்திரையில் ஆழந்து விட பக்கத்தில் அலுவலக முதலாளி வந்து நின்றால் என்ன செய்வது என்ற பயம்தான். இருந்தும் எனது வேலைகளை ஒழுங்காகச் செய்கின்றேன் நேரத்திற்கு முடிக்கின்றேன். ஆனால் வியாபாரம் சோர்ந்து போய் விட்டதால் வேலைகள் அதிகமில்லை. இணையத்தளங்களில்தான் அதிக நேரம் போகின்றது. இந்த நிலையில் சும்மா தேமே என்று இருப்பதை விட குட்டித் தூக்கம் போட அனுமதி தந்தார்களானால் எவ்வளவு நன்னாக இருக்கும். வீட்டிற்குப் போன பின்பு சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். வேலை இருக்கோ இல்லையோ வேலை செய்து கொண்டிருப்பது போல் நடிக்க வேண்டிய கட்டாயம். (வாழ்க்கையில் நடித்து நடித்துச் சலித்து விட்டது)

குமுதம் ஆனந்திவிகடன் போன்றவற்றில் இந்திய அரசாங்க ஊழியர்கள் அலுவலக நேரத்தில் தூங்குவதை வைத்தே எத்தனை நகைச்சுவைகள் வந்திருக்கின்றன. (பேசாமல் இந்தியாவிற்குப் போய் விடலாமா என்று தோன்றுகின்றது? அரசாங்க வேலை கிடைக்கவும் வேணுமே?)
எனது அம்மா ஒரு ஆசிரியை இலங்கையில் பல கிராமங்களில் (நான் சிறுமியாய் இருக்கும் போது) தொழில் பார்த்தவர். அங்கெல்லாம் மதிய நேரச் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு ஒரு குட்டித்தூக்கம் போட்டு விட்டுத் திரும்பவும் செல்வார்களாம். கேட்கும் போதே ஆசையாக உள்ளது. அதுமட்டுமல்ல. எங்கள் குடும்பத்தில் எட்டுக் குழந்தைகள். கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஒருவரும் இல்லையெனின் அம்மா வகுப்பறையில் ஏணையைக் கட்டி ஆட்டுவாராம், எனக்கு அந்தளவிற்கு வசதியெல்லாம் வேண்டாமப்பா சின்னதா ஒரு அரைமணித்தியாலம் கண் அயர்வதற்கு எனது அலுவலகம் அனுமதி வழங்கினாலே போதும்.
எனக்கு நினைவிருக்கிறது நான் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த பாடசாலையில் எனது இரசாயண ஆசிரியை யாரையாவது உரத்து வாசிக்கச் சொல்லி எல்லோரையும் கவனமாகக் கேளுங்கள் என்று விட்டு ஒரு குட்டித்தூக்கம் போடுவார். (ஆட்டோகிராப் ஞாபகத்திற்கு வருகிறது) குறட்டையும் வரும். குறட்டை ஒலி கேட்கத் தொடங்கியவுடன் நாங்கள் கதைக்கத் தொடங்குவோம். ஆசிரியை அசைந்தால் கவனமாகக் கேட்பது போல் நடிப்போம். (நடித்து நடித்தே பாழடிக்கப்பட்டு விட்டது வாழ்க்கை)

இப்போது எனக்கு நித்திரை வருகிறது காஞ்சிபிலிம்ஸ் ஏதாவது மாறுவேடப்போட்டி போடுவார், பெயரிலி படம் காட்டுவார், இல்லாவிட்டால் ஈழநாதன் ஏதாவது வம்புக்கு இழுப்பார் அப்படியாவது எனது கண்களுக்கு வேலை கொடுத்து நித்திரையால் மூடுவதைத் தடுக்கலாம் என்று பார்த்தேன். ஒன்றையும் காணோம். எனது இன்றைய நித்திரையை விரட்ட ஒரு குட்டித் தூக்கப் பதிவைப் போடுகின்றேன்.

அதுசரி பகல் நித்திரை வராமலிருக்க ஏதாவது வழியிருந்தா யாரவது சொல்லுங்கப்பா. கண்ணில குளிர் தண்ணியை அடிக்கவும் என்று சொல்ல வேண்டாம்.
(நாளை சனிக்கிழமை நல்லா ஒரு நித்திரையடிக்க வேணும்)

ஆஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ

8 comments:

Voice on Wings said...

//அதுசரி பகல் நித்திரை வராமலிருக்க ஏதாவது வழியிருந்தா யாரவது சொல்லுங்கப்பா.//

Power naps்னுன்ன்ன்ன்ன் ன்னு கேள்விப்பட்டதில்லையா? கம்ப்யூட்டர பாத்துகிட்டு வேல செய்யற மாதிரி நைசா ஒரு குட்டி தூக்கம் போட்டுடுங்க. அதுக்கப்பறம் freshஆ இருக்கும். :)

Disclaimer: முதலாளி பாத்துட்டாருன்னா அதனால ஏற்படற பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல :|

ஏஜண்ட் NJ said...

தூங்காதே... டண்டனக்கா
தூங்காதே...
தூங்கிப்புட்டு பின்னாலே ஏங்காதே...

அப்டீன்கற ஒரு தமிழ் சினிமா பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

Muthu said...

கறுப்பி,
தூக்கம் வரவில்லையென பலர் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். எனவே ஒருவகையில் நீங்கள் கொடுத்துவைத்தவர்தான். :-).

Chandravathanaa said...

சுமதி
இன்று காலைதான் கண்ணனின் வலைப்பதிவில் இதை வாசித்தேன்.
சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள்.
தூக்கம் வராமல் தடுப்பதை விட இது நல்ல விடயம்.
குட்டித் தூக்கம் போட்டு எழுந்தால் சுகமாகவும் வேலை செய்ய மனமாகவும் இருக்கும்.
இந்த முறை உலக நாடுகள் முழுவதும் வந்தால் நல்லாயிருக்கும்.
சிபாரிசு செய்து பாருங்கள்.

Online Security Tips and Tricks for Kids said...

இந்த குட்டி தூக்கத்தை பற்றி சிங்கப்பூர் நண்பர்கள் கண்டிப்பாக தெரியும்.. சிங்கப்பூரில் சக சீன ஊழியர்கள் சீக்கிரமாக மதிய உணவை முடித்துவிட்டு ஒரு குட்டி தூக்கம் போடுவார்கள்.. கேட்டால் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பர்.. நானும் முயன்றிருக்கிறேன்.. ஆனால் எனக்கு புத்துணர்ச்சி வருவதுக்கு பதில் என் மனைவியிடம் இருந்து போன் வரும்.. சாப்பிட்டாசா என்று ?

Chandravathanaa said...

சங்கர்
அன்பும் தொல்லைதான்

Vijayakumar said...

அய்யகோ!! இப்போது எல்லாம் நீங்க சொல்ற தூக்கம் மீட்டிங்ல உட்கார்ந்து இருக்கும் போது மட்டும் தான் வருதுங்கோ. மத்த நேரம் எல்லாம் மனிட்டர்ல எதோ படிக்கிற மாதிரி தூங்கிட்டிருக்கிற என் பக்கத்துல உட்கார்ந்திருக்கும் அந்த சீன நண்பரை தான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதா இருக்கு.

சிங்கப்பூரில் சில ஜப்பானிய கன்சட்ரக்ஷன் கம்பெனியில் தூங்குவதற்கென்று சில நேரம் ஒதுக்குகிறார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன்.

என் மனைவி மதுரையில் கல்லூரியில் படிக்கும் போது உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டு கல்லூரி க்ளினிக்கில் மதியம் ஒரு குட்டித் தூக்கம் போட்டு வருவார் என்று அடிக்கடி என்னிடம் சொல்லி என் காது புண்ணாகி விட்டது.

இந்தியாவில் சில சாப்ட்வேர் கம்பெனியில் எந்த நேரத்திலும் விளையாட்டரங்கம் சென்று விளையாடலாம். தூக்கம் வந்தால் அங்கு போய் ஒரு டேபிள் டென்னிஸ் போட்டு வந்தால் தூக்கம் கலைந்து போவதாக நம்ம சாஃப்ட்வேர் மக்களுக்கு ஒரு ஐதிகம் உண்டு.

அந்த வசதியில்லாத சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலைப்பார்த்ததால் டீ குடிக்க போகிறோம் என்ற பெயரில் பக்கத்து ரோட்டு கடைக்கு சென்று தூக்கத்தை கலைத்து விட்டு வருவது வழக்கம்.

கல்லூரியில் வாய் திறந்து தூங்கி புரோபசர் எரிந்த சாக்பீஸ் வாயில் சென்று தங்கியது இன்னொரு கதை.

தூக்கங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.

கறுப்பி said...

அப்பாடா ஒரு பெரிய தூக்கமே போட்டிட்டு வந்தாச்சு. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இந்தத் தொல்லை இருக்கின்றது. பத்தோடு பதினொன்றாக நானும் இருந்துவிட்டுப் போகின்றேன்.