Monday, June 20, 2005

நஷ்ட ஈடு



“வாழாவெட்டி” என்று சமூகத்தால் விழிக்கப்படும் தாயினால் வளர்க்கப்பட்டவன் நான். இரண்டு அறைகளைக் கொண்ட மண்ணாலான கொட்டில் வீட்டின் முன்னே, உச்சி வெய்யில் நேராய் இறங்க, தன்னை ஒடுக்கி கந்தல் சேலையால் தலையை மூடிக் குந்தியிருந்து, கிடுகு பின்னி பாரமாய் சுமந்து சென்று விற்றும், பால் அப்பம், முட்டை அப்பம் என்று வட்ட வட்டமாய் வாயில் நீரூறும் சுவையுடன் அப்பங்களைச் சுட்டு விற்றும், பிள்ளைகளை வளர்த்தவள் என் அம்மா. "அம்மா" என்றால் பல காலமாய் என் மனதில் வர்ணங்கள் அற்ற கந்தல் சேலையுடன் குந்தியிருக்கும் ஒரு கொத்தியாத்தை உருவமே பதிந்திந்தது. அவள் முகத்தில் தீவிரத்தின் கீறல்கள் நிரம்பி வழியும். புன்னகைக் கோடு எங்காவது ஓடுகின்றதா என்று அவள் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் தருணங்களில் பக்கத்தில் இருந்து பார்த்த நாட்கள் ஏராளம். எனக்கும், என் அக்காவிற்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர வைத்தவள் அவள். என் நான்காவது வயதில் அக்காவின் படிப்பில் பலதையும் நான் தெரிந்து வைத்திருந்தேன். சாப்பாடு, நித்திரைக்கான நேரம் போக என் நேரங்கள் அனேகம் படிப்பிலேயே கரைந்தன. சிறுவயதுக்கான குறும்புகள் அனைத்தையும் இழந்தவன் நான். ஆனால் அதற்காக வருந்தியதாக ஞாபகம் இல்லை.

இரண்டு குழந்தைகளுடன் தனியாக விடப்பட்ட போதுதான் அம்மாவிற்கு கல்வியின் அருமை புரிந்தது என்பாள். தன் பெற்றோர் விட்ட தவறைத் தான் விடக்கூடாது என்பதில் மிகவுமே கவனமாக இருந்தாள். புன்னகை மறைந்த முகமானாலும் அன்பைச் சுரக்க அவள் மறந்ததில்லை. மரத்துத் சுருங்கிய கைகளால் பள்ளியால் வரும் என்னை இழுத்து நெற்றி வியர்வையை அவள் வழிப்பதில் சுகம் காண்பவன் நான். எப்போதும் என் பார்வை அவள் முகத்தில் பதிந்து எதையோ தேடும். எதைத் தேடுகின்றேன் என்பதும் புரிந்ததில்லை. என் அம்மாவை வேறு உருவமாகப் பார்க்க விரும்பினேனோ என்னவோ. பளிச்சென்ற முகத்துடன், பொட்டும், பூவும் கலர் சேலையும், சிரிப்புமாக.

அம்மாவின் பத்து விரல்களை நம்பி எமது குடும்பம் இயங்கியது. பஞ்சத்தில் படுத்தாலும் பாடசாலையை நாங்கள் ஒருநாளும் தவற விடுவதில்லை. பழுப்பேறி, மூலை சுருண்ட பாடப்புத்தக்தை நெஞ்சோடு அணைத்துக் கல்வி கற்றோம். இரவு நேரங்களில் வீட்டு வேலைகள் முடிந்த பின்னர், என்னையும் அக்காவையும் இருபுறங்களாகப் படுக்க வைத்து எங்கள் தலையைக் கைகளால் அழைந்த படியே படிப்பு, சமூகம், வாழ்வு என்று தனக்குத் தெரிந்தவற்றை எமக்குள் புகுத்தி எம்மைச் சிந்திக்க வைக்கும் அம்மா, அப்பாவின் பார்வைக்கு அழகற்றவள். கறுப்பாக, கட்டையாக இருக்கும் அவள் முகத்தில் பற்கள் துருத்திக்கொண்டிருக்கும். அப்பா அழகானவராம் அம்மா சொல்லி நான் அறிந்து கொண்டது. நான் அப்பாவைக் கொண்டிருப்பதாக அடிக்கடி சொல்லுவாள். அதன் பின்னர் அழகு என்பது வெறும் மாயை, அழிந்து போகக் கூடியது, அழகென்று கர்வம் கொள்பவர்கள் கோழைகள், அறிவிலிகள் எல்லாமே பார்ப்பவர் கண்களில்தான் இருக்கிறது என்றும் சேர்த்து சொல்லுவாள். எனக்கு என் நிறத்தில், அழகில் கூச்சம் இருந்தது. இதில் பெருமைகொள்ள என்ன இருக்கிறது என்ற கேள்வியும் இருந்தது.

அப்பா பக்கத்து ஊர் பெண் ஒருத்தியின் அழகில் மயங்க, அவருடனான தன் உறவை துண்டித்துக் கொண்டாள் அம்மா. தொழில் பார்க்கும் தன் உதவியில்லாமல் அம்மாவால் இரண்டு பிள்ளைகளுடன் வாழ முடியாது என்று எண்ணியிருந்த அப்பாவின் முகத்தில் கரி பூசி வாழ்ந்து காட்டினாள். பண உதவியைச் சாட்டாக வைத்து தன் பிள்ளைகளுடனான தொடர்பைத் தொடரலாம் என்று எண்ணியிருந்த அப்பாவிற்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. அம்மாவின், அம்மா பிள்ளைகளாக வாழ்ந்து, வளர்ந்தோம் நானும் அக்காவும். நான் அப்பாவை வெறுத்தேன். வெறும் உடல் அழகிற்காக என் அம்மாவை மோசம் செய்த மிகப் பாவியாக அவரை நான் என் மனதில் உருவகித்துக் கொண்டேன். நல்ல குணமும், படிப்பும்தான் உலகில் முக்கியம் வெளிப்புற அழகு என்பது அழிந்து போகும் என்பது சின்னவயதிலேயே எனக்குள் ஆழமாகப் புகுந்து கொண்டவை.

என் அக்கா அம்மாவை ஒத்திருந்தாள். அவளிற்குப் பாடசாலையில் பல பட்டப்பெயர்கள் இருந்தன. அவள் காது பட யாராவது படம் தெளித்தால் சுருண்டு போவாள். வீட்டு மூலையில் அம்மா பார்க்காத வண்ணம் ஒளித்திருந்து அழுவாள். ஒன்றுக்கும் மனம் உடைந்து போகக் கூடாது, அழக் கூடாது என்பது அம்மாவின் இன்னுமொரு வேண்டுகோள். என் உலகம், எனது அம்மாவையும் அக்காவையும் மட்டுமே கொண்டிருந்ததால், வக்கிரம் படைத்த வெளி உலகை நான் வெறுத்தேன். முடிந்தவரை அம்மாவையும், அக்காவையும் சந்தோஷப்படுத்துவதிலேயே எனது உலகம் உருண்டு கொண்டிருந்தது. சொந்தங்கள் “அட ஆம்பிளப்பிள்ளை வெள்ளையா வடிவா இருக்கிறான் பெட்டைச்சிதான் இப்பிடிப்போயிட்டாள்” என்று அம்மாவிடம் அங்கலாய்த்துக் கொள்ளுவார்கள். நான் என் சொந்தங்களையும் வெறுத்தேன்.

அக்கா படிப்பில் கெட்டிக்காறி. அவளுக்கு இலக்கியத்தில் ஆர்வம் அதிகமாக இருந்தது. என்னை அழைத்துக் கொண்டு யாழப்பாணத்தின் பெரிய வாசகசாலைக்குப் போவாள். எனக்கு வாசிப்பில் ஆர்வம் இல்லாது போனாலும், சும்மா இருந்து தட்டித்தட்டி அதுவே ஒரு ஆர்வமாகி மிகச் சின்ன வயதிலேயே ஈழத்து இலக்கியங்கள், தமிழ் நாட்டு இலக்கியங்கள் என்று நல்ல பல இலக்கியங்களை அடையாளம் கண்டு கொண்டேன். எனது திறமை விஞ்ஞானத்தில் இருந்தாலும் நானும் ஒரு முழுநேர இலக்கிய விரும்பியாக மாறிப்போயிருந்தேன். என் வாசிப்புக்களைப் பகிர்ந்து கொள்ள என் பாடசாலையில் ஒருவரும் இல்லை. இதனால் நான் வாசிப்பவற்றையெல்லாம் அம்மா பாத்திரங்கள் கழுவும் போதோ, மீன் கழுவும் போதோ, அருகில் குந்தியிருந்து விளக்கத் தொடங்கினேன். அம்மா புரிந்து கொண்டாளா இல்லையா தெரியிவில்லை ஆனால் என்னை ஊக்குவிப்பதற்காக “உம்” கொட்டத் தவறுவதில்லை.

பின்னர் இலக்கியக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், வேற்றுமொழி படைப்புக்கள் என்று எனது வாசிப்புப் பரவத் தொடங்கியது. சிறு சிறு இலக்கியச் சந்திப்புகள் பற்றி அறிந்து கொண்டு வெறும் பார்வையாளனாக சுவரோரம் நின்று கேட்கத் தொடங்கினேன். தொடக்கத்தில் என்னை ஒருவரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. என் கருத்துக்கள் என் வாய் வரை வந்து மடிந்து கொண்டிருக்கும். பல சந்திப்புக்களின் பின்னர் நான் அடையாளம் காணப்பட்ட போது, நானும் கருத்துக்களைக் கூறத் தொடங்கினேன். என் ஆர்வம் அந்த இளைஞர்களைக் கவர்ந்திருந்தது. எல்லோருமே என்னிலும் விட வயதில் மிகவும் மூத்தவர்கள். இருந்தும் வாழ்வு, அரசியல், இலக்கியம் என்று என்னால் அவர்களுடன் கலந்துரையாட முடிந்தது. நான் அவர்களை நண்பர்களாகக் கொண்டதற்காப் பெருமைப்பட்டுக் கொள்வேன். எல்லாம் அறிந்த, நல்ல மனம் கொண்ட முழுமையான நண்பர்கள் அவர்கள் என்பது என் கணிப்பு. இலக்கியக் கலந்துரையாடல் என் வீட்டிலும் சில வேளைகளில் இடம்பெறுவதுண்டு. எனது நண்பர்கள் என்று வயதில் மூத்த இளைஞர்களை வீட்டிற்கு அழைத்து வந்த போது அம்மா கொஞ்சம் சங்கடப்பட்டாள். வயதுக்கு வந்த அக்கா வீட்டில் இருக்கிறாள், பல ஆண்கள் வீட்டிற்கு வந்து போவது அம்மாவிற்குச் சரியாகப் படவில்லை. இவர்கள் மற்றைய ஆண்கள் போல் நடந்து கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு சமூகம் பற்றிய மிதமான அக்கறை இருக்கின்றது என்று அவளுக்கு எடுத்துச் சொல்லி சம்மதம் வாங்கிக் கொண்டேன். தொடக்கத்தில் அக்கா உள்ளே ஒளிந்து கொண்டாலும், போகப் போக அவர்கள் பேச்சு அவளுக்கு சுவாரசியத்தையும் ஆர்வத்தையும் கொடுக்கத் தானாகவே வெளியே வந்து எங்களுடன் கலந்து கொண்டு “அம்மாவந்தாள்” அப்பு “மோகமுள்” ஜானகி “அக்கினிப்பிரவேசம்” கங்கா என்று அலசினாள்.

எனக்கு பாடசாலையில் மாலை நேரங்களில் வாசகசாலையில் பகுதி நேர வேலையும், அக்காவுக்கு பாடசாலை நேரம் போக ஒரு தனியார் கல்விச் சாலையில் பகுதி நேர வேலையும் கிடைத்தன. அம்மா இப்போதெல்லாம் குந்தியிருந்து கிடுகு பின்னுவதில்லை. நாங்கள் கொண்டு வரும் பணத்திலேயே எங்கள் குடும்பம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டது. நானும் நண்பர்களும் நாடகங்கள், திரைப்படங்கள் பார்க்கச் செல்லும் போது அக்கா தயங்காமல் எங்களுடன் இணைந்து கொள்வாள். விடுமுறை நாட்களில் கட்டுச் சாப்பாட்டுடன் கடற்கரைக்கோ, பூங்காவிற்கோ சென்று இலக்கிய வாதங்களுடன் நாட்களைக் கழிக்கப் பழகிக் கொண்டோம். என் நண்பர்களில் ஒருவர் எனது அக்காவை விரும்பித் திருமணம் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு. அக்கா சமூகப்பார்வைக்கு அழகற்றவள். சீதணம் என்று கொடுக்க எங்களிடம் ஒன்றுமிருக்கவில்லை. அக்காவிடமிருந்தது அறிவும், குணமும் மட்டுமே. அறிவையும் குணத்தையும் யாசித்து திருமணம் செய்து கொள்ள முன்வரும் ஆண்கள் பரந்த மனம் உடையவர்களாக இருக்க வேண்டும். என் நண்பர்கள் அப்படியானவர்களாக இருந்த போதும், வெறும் நட்பு என்ற ரீதியில் பழகி விடும் மிக நல்லவர்களாக இருப்பது எனக்குக் கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது.

அக்கா தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தாள். நான் பொறியிலல் துறையில் மேற்படிப்பை மேற் கொண்டேன். நண்பர்களில் சிலர் திருமணம் செய்து கொண்டு குடும்பஸ்தர்களாகி விட, சிலர் வேலை நிமித்தம் வேறு ஊருக்குப் போய் விட்டார்கள். நான் என் ஆசையை விழுங்கிக் கொண்டேன். எல்லா அம்மாக்களையும் போல் என் அம்மாவும் ஆசைப்பட்டாள் என் அக்காவின் திருமணத்திற்காக. சாதகத்தை வெளியே எடுத்தாள். மெல்லி படலம் போல் முகத்தை மேவியிருக்கும் சோகத்துடன் அக்கா மறுப்போ, சம்மதமோ எதுவுமின்றி மௌனமானாள். நான் அவளின் விருப்பம் கேட்டுப் பல தடவை கதை தொடக்கிய போது பேச்சை வேறு திசைமாற்றினாள். என் எதிர்ப்பையும் மீறி பெண்பார்க்கும் சடங்கு என் வீட்டிலும் தொடங்கியது. பெண்ணிற்கு அழகு குறைந்திருந்ததால், பெருந்தன்மையுடன் பணத்தைக் கூட்டிக் கேட்டார்கள் மாப்பிள்ளைச் சிங்கங்கள். பல சாதகங்கள் தட்டிப் போய் கடைசியில் தன்னிலும் பதினைந்து வயது மூத்த மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டி வீட்டை விட்டு வெளியேறினாள் அக்கா. அக்காவைப் பிரிவதற்காய் அம்மா கண் கலங்கினாள். நான் கலங்கிப் போனேன். இந்த உலகம், மனித மனங்கள், சமூகவழக்கங்கள் எல்லாவற்றின் மேலும் எனக்கு வெறுப்பு. மிக நல்லவர்களா இருந்த என் நண்பர்களையும் நான் வெறுத்தேன்.

அக்காவிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது.



அன்புள்ள தம்பிக்கு,

உன் சுகம் எப்படி? நான் இங்கே நல்ல சந்தோஷமாக இருக்கின்றேன். இந்தக் கடிதம் உனக்கு மட்டுமே எழுதுகின்றேன். படித்தவுடன் கிழித்து எறிந்து விடு. அம்மாவிடம் காட்டி விடாதே. தம்பி என் திருமணத்தின் போது நீ கலங்கி நின்றது எனக்கு இன்னும் கண்களுக்குள் நிற்கின்றது. நீ திருமணம் பற்றிய எனது எதிர்பார்ப்புக்களை கேட்ட போதெல்லாம் நான் பேச்சைத் திசை மாற்றினேன் என்பது உனக்குப் புரிந்திருக்கும். புரிந்து நீ குழம்பியதை நான் அறிவேன். தம்பி மனிதர்களில் ஒருவமே நிறைவானவர்கள் இல்லை. பல அறிஞர்களின் புத்தகத்தை வாசித்து விட்டதால் பெருந்தன்மையுடன் எல்லோரும் நடப்பார்கள், இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. எல்லோருமே சுயநலவாதிகள். நானும் நீயும் கூடத்தான். உன் படித்த நல்ல வேலையில் இருக்கும் நண்பர்களில் ஒருவராவது என்னை விரும்பித் திருமணம் செய்ய மாட்டார்களா என்று நீ மனதுக்குள் ஏங்கியதை நான் அறிவேன். அது உன் சுயநலம். எனக்குள்ளும் அதே சுயநலமிருந்ததால் அழகான உன் நண்பன் ஜெகனை நான் காதலித்தேன். அவனும் காதலித்தான். ஆனால் அது உனக்குத் தெரியாது. பின்னர் அவன் தன் சுயநலமாக பணக்காற அழகி ஒருத்தியைக் கலியாணம் செய்து கொண்டு விட்டான். இங்கே யாரும் யாரையும் குறை சொல்ல முடியாது. எல்லோருமே சுயநலமாகத்தான் காயை நகர்த்துகின்றோம். வெற்றி சிலருக்குக் கிடைக்கிறது. தோற்பவர்கள் இறப்பதில்லை. வாழ்ந்துதான் முடிக்கின்றார்கள். நான் இப்போது சந்தோஷமாக இருக்கின்றேன். இவர் எனக்குப் பொருத்தமான நல்ல நண்பராக இருக்கின்றார். நீ அதிகம் யோசிக்காமல் சந்தோஷமாக இரு. அம்மா எப்படி இருக்கின்றா? பதில் போடு.

இப்படிக்கு உனது அக்கா.

நான் கடிதத்தைத்தோடு, எனக்குள்ளிருந்த பலவற்றைக் கிழித்துப் போட்டேன். எல்லோரும் சுயநலவாதிகள். அக்கா அழகாகச் சொல்லிவிட்டாள். என்னால் ஏற்க முடியாமல் இருந்தது. ஒருவேளை சுயநலவாதிகள் ஒப்பீட்டல் கூடுதலாக இருக்க முடியும். ஆனால் உலகில் எல்லோருமே சுயநலவாதிகள் என்று ஒட்டு மொத்தமாக கூற முடியுமா? என் அப்பா சுயநலவாதி. ஆனால் அம்மா அவளை எப்படி சுயநலவாதியென்பேன். அம்மாவைப்பற்றி எனது மனம் ஆராயத் தொடங்கியது. தனியாக கிடுகு பின்னி என்னையும் அக்காவையும் படிப்பித்தவள். தன் சுகங்களை காவு கொடுத்தவள். இவள் எப்படி சுயநலவாதியெனும் அடைப்புக்குறிக்குள்?.
“அம்மா நானும் அக்கா மாதிரித் தமிழ் இலக்கியம் படிக்கப் போறன். எனக்கு விஞ்ஞானத்தில நாட்மில்லாமல் இருக்குது” நான் மண்டாடியபோது. “அப்பா இல்லாமல் கூனிக்குறுகி நிண்டு கிடுகு பின்னி உன்னைப் படிப்பிச்சனான். சாப்பாட்டுக்கு வழியில்லை, பிள்ளை என்ஜினியரா வர வேணுமெண்டு கனவு காணுறாள், எண்டு என்னைப் பழிச்சாக்களுக்கு நான் வெண்டு காட்ட வேணும்” அம்மாவின் அந்த வார்த்தைகள் என் தலையின் ஒரு மூலையில் ஓடி மறைந்தது.

நான் சுயநலவாதியாக இருக்க விரும்பவில்லை. முடிந்த வரை நான் என் வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவையும் கண்காணித்து, சுயநலமற்று வாழ முனைய வேண்டும் என்று உறுதி கொண்டேன். அதன் பின்னர் என் ஒவ்வொரு அசைவும் மிக நிதானமாக சுயநலமற்றிருந்தது எனக்குள் பெருமையையும், நிம்மதியையும் தந்தன. கல்வியை முடித்துக் கொண்டு வேலையில் சேர்ந்த போது பணக்காற அழகிகளின் சாதகங்களுடன் அம்மா வந்தாள். எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு என் அம்மாவும், அக்காவும் எதற்காக நிராகரிக்கப்பட்டார்களோ அதே காரணமான அழகற்றவள் என்று சமூகத்தால் பட்டம் கூ+ட்டப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டேன். மீண்டும் பெருமையும், நிறைவும் எனக்குள். சுயநலமற்ற விட்டுக் கொடுப்போடு என் வாழ்வு நிறைவாக நகர ஒன்று, இரண்டு என்று இரண்டு குழந்தைகளுக்கு நல்ல அப்பாவானேன்.

எனக்கு மலை நாட்டிற்கு மாற்றல் வந்தது. கைக் குழந்தையுடன் கஷ்டம் வேண்டாம் முதலில் தனியே போய் செட்டில் ஆகிப் பின்னர் குடும்பத்தை அழைத்துக் கொள்ளலாம் என்று ஒரு வீட்டில் கிடைத்த சிறிய அறையில் இரண்டு மாதங்கள் போக்கிக் கொண்டேன். புதிய வேலைத்தளம், வேலைப் பழு அதிகமாக இருந்ததால் கிழமைக்கு ஒரு முறை மட்டும் தொலைபேசியில் மனைவி, அம்மாவுடன் கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வேலை முடிந்து வீட்டிற்கு உடம்பு அலுப்போடு வந்தால், வீட்டு வேலைக்காறி சாப்பாடு கொண்டு வந்து அறையில் பரிமாறுவாள். தொடக்கத்தில் புதிய வேலை, புதிய மனிதர்கள் என்று என் கவனம் எங்கோ இருந்து காலப்போக்கில் வேலைக்காறியின் மேல் திரும்பியது. சின்னப்பெண். கலியாணமானவள். மருண்ட விழிகளுடன் கொள்ளை அழகாக இருந்தாள். வேண்டுமென்றே உடைகளை விலத்துவாளா? இல்லை தற்செயலானதா என்ற கேள்வி எனக்குள் இல்லாமல் அவள் அழகை படிக்கத் தொடங்கினேன். பொன்நிற பூனை மயிர்கள் மார்பில் புரள, மெல்லிய மண்ணிறத்து விம்மல் எனக்குள் இரசாயண மாற்றத்தை உண்டு பண்ணியது. கண்கள் கருகருவென்று காமம் பொங்கிமிதக்க நின்றாள். நான் கால்களை வேகமாக ஆட்டி ஆட்டி என்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தேன். மெல்லிய உதட்டுக்குள் எப்போதும் இருக்கும் ஒரு சிறு புன்னகை எத்தனை நாளுக்கு பாப்போம் என்று பயம் காட்டியது. வற்றிய என் மனைவியின் உடலில் உருண்டு புரண்டது ஞாபகம் வர மனதுக்குள் ஏக்கம் பற்றிக் கொண்டது. தொடைகள் திரள கால்களை நிலத்தில் ஊன்றி அழுத்தினேன். இப்படி ஒரு உடலை அனுபவிக்கும் சாத்தியமே வாழ்வில் இல்லாமல் போய் விடுமா? துக்கம் மனதுக்குள் மேவத்தொடங்கியது. சாப்பாடு தொண்டைக் குழிக்குள் சிக்கி மூச்சுத் திணற அவள் கையைப் பிடித்து இழுத்து அணைத்து முத்தமிட்டேன். அவளின் விம்மிய மார்புகள் என் நெஞ்சோடு உரசி என் உஷ்ணத்தை உச்சிக்குக் கொண்டு வந்தது. என் பிடியை விலக்கி அவள் நிதானமாக வெளியேறி தூரப் போய் புள்ளியாகி மறைந்து போனாள்.

4 comments:

Thangamani said...

நல்ல கதை கறுப்பி!

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

anbuLLa karupy,
kathai sinthanaiyaith thUNdumpadi siRappAka irukkiRathu. vAzththukkaL.
anbudan, jeyanthi sankar

Sri Rangan said...

கருப்பி,கதைக்கரு நல்லவொரு படைப்புக்கு வழி திறக்கும்.எனினும் சிறுகதையானது தனது பண்பால் சொல்வது எவ்வளவோ!அவ்வளவையும் சொல்வதற்கு பஞ்சிப்படுகிறது உங்கள் மொழி.இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாம்.என்றபோதும் நன்றாகவுள்ளது.
அன்புடன்
ஸ்ரீரங்கன்

கறுப்பி said...

ஜெயந்தி சங்கர், தங்கமணி நன்றிகள். சிறீரங்கன் புரிகிறது. முயல்கின்றேன். நன்றி