Tuesday, June 28, 2005

நூறு கழிப்பறைகள்!


(Theeranathy)

கறுப்பி யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து பின்னர் சிறிது காலம் லண்டன், ஹொலண்ட், பெல்ஜியம் என்று வாழ்ந்து தற்போது கனடாவில் வசிக்கின்றேன். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை அனேகமாக பாடசாலைகள், வைத்தியசாலைகள், திரையரங்குகள், புகையிரதங்கள் போன்றவையே பொதுவாகப் பொதுமக்களால் பாவிக்கப்படும் கழிப்பறைகள். எல்லாமே "குழி" வடிவக் கழிப்பறைகளே. இவை அனைத்தையும் பாவித்த அனுபவம் கறுப்பிக்கும் இருக்கின்றது. இந்தக் கழிப்பறைகளுக்குள் நுழையும் போது மிகவும் அவதானத்துடனும் ஒருவித ஜாக்ரதையுடனுமே உள்ளே நுழைய முடிகின்றது. (எந்த நிலையில் இவைகள் இருக்கப் போகின்றனவோ என்ற பயம்) இருந்தும் அருவருப்பூட்டும் வகையில் இதில் எந்த ஒரு கழிப்பறையையும் கண்டதாக நினைவில்லை. அனேகமாக சிறிதாக ஒரு மூத்திர நெடியோடு நெருப்புத்தண்ணீர் என்ற அழைக்கப்படும் கிருமி நாசினியின் நெடியே தூக்கலாக இருப்பதுண்டு. இந்த இரசாயணப்பதார்த்தத்தின் மணம் சுத்தமாகக் கழிப்பறைகள் இருக்கின்றன என்ற ஒரு நம்பிக்கையைத் தருகின்றது.

அதன் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் பல இடங்களில் கழிப்பறைகளைப் பாவித்த அனுவமும் உண்டு. லண்டன், ஹொலெண்ட் போன்ற நாடுகளின் கழிப்பறைகளோடு ஒப்பிடும் போது பெல்ஜியத்தில் கழிப்பறைகள் மிகவும் சுத்தமானதாகக் காணப்பட்டது. இதற்கு காரணமாக சனத்தொiயைக் கூறலாம். தற்போது கனடாவில் பல விதமாக கழிப்பறைகளைப் பாவிக்கின்றேன். படுமோசமான நிலையில் இருப்பவை பளிங்குபோல் சிறு குறைகூடக் கூறமுடியாத வகையில் பராமரிக்கப்படுபவை என பலதையும் காணக்கூடியமாக உள்ளது. இதற்குப் பல்கலாச்சார நாடாக கனடா இருப்பது தான் காரணம். பராமரிக்கப்படாத நிலையில் இருக்கும் கழிப்பறைகள் அனேகமாக ஆசிய நாட்டவரின் வியாபாரத்தலங்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. இவற்றைத்தான் நான் அதிகம் பாவித்திருக்கின்றேன் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தீராநதியில் எஸ்.ராவின் "நூறு கழிப்பறைகள்" கதை படித்தபேது இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு விடுமுறைக்காகச் சென்று அங்கு நான் பாவித்த பொதுக்கழிப்பறைகள் பற்றிய ஞாபகங்கள் வந்தன.

சென்னையில் சாலிக்கிராமத்தில் எனது சகோதரிக்கு ஒரு பிளாட் இருப்பதால் நான் குடும்பத்துடன் அங்குதான் சில வாரங்கள் தங்கியிருந்தேன். எனது அண்ணா குடும்பம் தி.நகரில் கீதாஞ்சலி ஹோட்டலில் தங்கியிருந்தார்கள் எனவே அனேகமாக சென்னையில் பொதுக்கழிப்பறைகள் பாவிக்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இருந்தும் "தேவதாஸ்" திரைப்படம் பார்ப்பதற்கு ஒரு பழைய பிரமாண்டமான திரையரங்கிற்குச் சென்றிருந்தேன் (பெயர் ஞாபகத்தில் இல்லை). நான் சென்றிருந்த அன்று சிவாஜியின் மூத்தமகன் ராஜ்குமார் குடும்பத்துடன் திரைப்படம் பார்க்க வந்திருந்தார். இன்னும் பல நாகரீக இளைஞர்கள் யுவதிகள் வந்திருந்தார்கள். அந்தத் திரையரங்கில் இடைவெளியின் போது கழிப்பறைக்குச் சென்றேன். கழிப்பறைகளின் தோற்றம் இப்போதும் எனக்கு நினைவில் இருக்கின்றது. மிகமிகப் பழைய முறையில் நான் ஒருநாளும் பார்த்திராத ஒரு வடிவத்தில் கதவுகளற்று நுழைவாசல் தொடக்கம் மிக அசுத்தமாக இருந்த அந்தக் கழிப்பறைக்கு நெருக்கமாகக் கூட என்னால் போக முடியவில்லை. பேசாமல் திரும்பி வந்து விட்டேன். இந்தக் கழிப்பறையைத் தான் தமிழ்நாட்டின் செல்வந்தர்களின் ஒருவரான சிவாஜியின் குடும்பமும் பயன்படுத்துகின்றார்கள் என்பது என்னால் நம்பமுடியாமல் இருந்தது.

அடுத்து கோவா சென்றிருந்த போது கடற்கரை அருகில் ஒரு பொதுக்கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். நுழைவாசலே மூத்திர வீச்சத்தால் மூக்கைத் தாக்கியது. இருந்தும் ஒருமுறை மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு மூச்சை அடக்கியபடியே உள்ளே ஓடிச்சென்று வந்தேன். அதுவரை மூச்சைப் பிடிக்க முடியாமல் உள்ளே காற்றை எடுக்க வேண்டி வந்ததால் ஏற்பட்ட அசௌகரியம் வெளியில் வந்து அன்று சாப்பிட்ட அனைத்தையும் சத்தி (வாந்தி) எடுத்து விட்டேன். கழிப்பறைக்குப் பணம் வசூலிக்கின்றார்கள். இருந்தும் சிறிது கூட சுத்திகரிக்க அவர்களால் ஏன் முடியாமல் போனது. பணம் வசூலிப்பவர் எப்படி நாள் முழுவதும் அந்த வீச்சத்திற்குள் இருக்கின்றார்.

இதே போல் புகையிரதங்களிலும் ஊட்டியிலும் திருவனந்தபுரத்திலும் கட்டாயமாகப் பொதுக்கழிப்பறை உபயோகிக்க வேண்டி வந்து மிகவும் அவஸ்தைப் பட்டுள்ளேன்.

அதே நேரம் நான் கன்யாகுமரியில் ஒருவாரம் தங்கியிருந்த விவேகானந்தா கேந்திராவிலும் இன்னும் பல ஹோட்டல்களிலும் சுத்தம் செய்யப்பட்ட, நெருப்புத் தண்ணீர் மணம் கொண்ட கழிப்பறைகளையும் உபயோகித்திருக்கின்றேன்.

இந்தியா மிகப்பெரிய நாடாகவும் சனத்தொகையில் உச்சத்தில் இருப்பதாலும் பொதுஇடங்களில் அதிகம் சுகாதாரத்தை எதிர்பார்க்க முடியாதுதான். என்றாலும் மிகப்பழைய முறையிலான கழிப்பறைகளை புதுப்பிப்பதும், கிருமி நாசினிகளை நாளாந்தம் உபயோகித்துச் சுத்தப்படுத்துவதும் அத்தனை சிரமமாக இருக்காது என்றே நம்புகின்றேன். இந்தியா என் கனவு நாடு. அங்கு நாம் தவிர்க்க முடியாத இடங்களில் இப்படியான அசௌகரியங்கள் இருப்பது வருத்தத்தைத் தருகின்றது.

5 comments:

மு. சுந்தரமூர்த்தி said...

'திண்ணை'யில் வந்த நண்பர் பரிமளத்தின் 'பரி-மலம்' கட்டுரையை வாசியுங்கள். சாரு நிவேதிதாவின் 'எக்சிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும்' நாவல் கிடைத்தால் படித்துப் பாருங்கள். புது டில்லியின் பொதுக்கழிப்பறைப் பற்றி குறிப்புகள் இருக்கும்.

துளசி கோபால் said...

ஆமாம் கறுப்பி,

நீங்க சொல்றது முற்றிலும் உண்மை! ஏந்தான் நம்ம ஜனங்க இப்படிக் கொஞ்சம்கூட சுகாதார உணர்வே
இல்லாம இருக்கறாங்கன்னு சிலசமயம் வருத்தமும், பல சமயங்களிலே கோபமும் வருது!
பொது இடம் மட்டுமில்லே, சில நண்பர்கள்/உறவினர் வீடுகளிலும் கொஞ்சம் இப்படி அப்படித்தான்!
சுத்தமா இருக்குமே தவிர, பளிச்சுன்னு இருக்காது. ஏதோ இருட்டுப் பொந்துபோல!!!!

இதுக்குப் பயந்துக்கிட்டுத்தான், தி.நகர்லே ஒரு 'கெஸ்ட் ஹவுஸ்'லே தங்குவோம். தேவைன்னா உடனே
ஒரு ஆட்டோ பிடிச்சு வந்துட்டுப் போகலாமுல்லே!

என்றும் அன்புடன்,
துளசி.

கறுப்பி said...

சுந்தரமூர்த்தி படிக்கின்றேன். நன்றி. துளசி நன்றி.

Mookku Sundar said...

அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இந்திய மேலாளர்கள் off shore project work நிமித்தம், அடிக்கடி விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர். அவரும் சமீபத்தில் இதிப் போலொரு கருத்தை சொன்னார். பெரிய பெரிய நிறுவனங்களில் கூட கழிப்பறைகள் சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை - என்னும் விதமாக. ஆடம்பரமான ரிசப்ஷன், அழகு யுவதி, செடி கொடிகள், நறுமணங்கள் என்று முன்னறையை அலங்கரிக்கும் நாம், கழிப்பறை விடயங்களில் கோட்டை விட்டுத்தான் விடுகிறோம் - முகத்துக்கு மேக்கப் போட்டு, செண்ட் தெளித்துக் கொண்டு
குளிக்காமல்/அழுக்கு உள்ளாடைகளுடன் வருவது போல. ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்.

கறுப்பி said...

Mokku Sundar,
கழிப்பறை கடின அனுவங்கள் என்பது எல்லோருக்குமே நிச்சயமாக இருக்கும் நன்றி.