96களில் என்று நினைக்கின்றேன். கறுப்பி இல்லத்தரசியாக மட்டும் இருந்த காலத்தில் யாழ் இந்துக் கல்லூரியின் கலையரசி விழாவிற்கு (எனது சகோதர்கள் படித்த பாடசாலை) எனது குடும்பம் சகிதம் சென்றிருந்தேன். (குடும்பம் என்றால் அப்பா, அம்மா, அண்ணாக்கள், அக்காக்கள் என்று) வழமையாக கலைவிழாக்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு கருத்துக் கணிப்பு எனக்குள் இருந்தது. அதிலிருந்து விலகாமல் முதலில் ஒரு வரேற்பு நடனம், பின்பு ஒரு நாட்டிய நாடகம், ஒரு நகைச்சுவை நாடகம், இடையில் பேச்சுரைகள் இப்படிப் போய்க் கொண்டிருந்த நிகழ்வில் ஒரு நகைச்சுவை நாடகம் என்றால் ஒரு சமூகநாடகமும் அங்கே மேடை ஏற்றப்படுவது வழமை அதற்கேற்ப சமூக நாடகமாக ப.அ.ஜெயகரனின் “பொடிச்சி” நாடகம் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் “பொடிச்சி” என்ற பெயரே வழமையான சமூக நாடகங்களின் பெயரில் இருந்து மிகவும் வேறுபட்டிருந்தது எனக்குள் ஆவலை எழுப்பியது. பெண்களைப் பற்றி ஊரில் கதைக்கும் போது முக்கியமாக குறையாகச் சொல்லும் போது பேச்சு வழக்காகப் பாவிக்கப்படும் சொற் பதந்தான் இந்தப் “பொடிச்சி”. (உதாரணமாக உந்தப் பொடிச்சி படு மோசம்). இப்படியான ஒரு சொல்லை நாடகத்தலைப்பாக வைத்திருப்பதே நாடகம் வித்தியாசமாக அமையப் போகின்றது என்ற ஆவலைத் தூண்டியது. ஜெயகரனும் அப்போது எனக்கு அறிமுகமற்றவர்.
மேடைக்கு சில ஆண்கள் வந்தார்கள். எல்லோரும் ஒரே மாதிரியாக கறுப்பு பாண்ஸ்சும், கடும் மஞ்சள் நிற ரீ சேர்ட்டும் அணிந்திருந்தார்கள். வசனங்களாக உரைக்காமல் சில சொற்களை உரத்து சொல்லத் தொடங்கினார்கள். பின்னர் மேடையில் ஒரு பெண் அவளைச் சுற்றிச் சுற்றி ஆண்கள் வார்த்தைகளை எறிந்த வண்ணமிருந்தார்கள்.
நான் நிமிர்ந்து இருந்து கொண்டேன். வழமையை விட மிக வித்தியாசமாக இந்த “பொடிச்சி” நாடகம் அமையப் போகின்றது என்பது தெரிந்தது. பெண் அடிமைத் தனத்தை மையமாக வைத்து எமது சமுதாயம் பெண்களை எப்படிப் பார்க்கின்றது நடாத்துகின்றது என்பவற்றை குறியீடாக இயக்கியிருந்தார் ப.அ.ஜெயகரன். அன்று நான் பார்த்த அந்த “பொடிச்சி” நாடகம்தான் என் வாழ்வில் நான் பார்த்த வித்தியசமான முதல் நாடகம் என்பேன். அதன் பின்னர் அரங்காடல் நிகழ்வொன்றில் ஜெயகரனின் “எல்லாப்பக்கமும் வாசல்” எனும் மற்றுமொரு தரமான நாடகமும் பார்க்கக் கிடைத்தது.
சில வருடங்கள் பின்னர் கறுப்பி மெல்லப் படிதாண்டி இலக்கிய உலகம் என்று செல்லத் தொடங்கிய போது ஜெயகரனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 99ல் அரங்காடல் நிகழ்வுக்காய் “இன்னொன்று வெளி” எனும் நாடகத்தின் ஒரு முக்கிய பாத்திரத்தில் என்னை நடிக்கும் படி கேட்டார். அது என் முதல் மேடை நாடகம். அந்த நாடகமும் ஜெயகரனிற்கு பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ஜெயகரனின் ஆக்கத்திலும் இயக்கத்திலும் உருவான “எதிர்காற்றினிலே”, “முதல்வர் வீட்டு நாய்” போன்ற நாடகங்களிலும் கறுப்பிக்கு நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
தொடர்ந்து “நாளை நாடகப்பட்டறை” எனும் பெயரில் “காலப்பயணம்”, “என்னை விசாரணைக்கு உட்படுத்துங்கள்”, “சொல்லின் ஆளத்துள்”, “இரண்டு புள்ளிகள்”, “இரசிகன்” போன்ற நாடகங்களையும் மேடையேற்றி உள்ளார்.
கனேடி நாடகச் சூழல் என்பது புலம்பெயர்ந்த நாடுகளிலேயே முன்னணியில் இருப்பதாக அறிகின்றேன். அதிலும் தரமான தனது சொந்தப்பிரதிகளைத் தானே இயக்கும் ஒரே நாடகக் கலைஞனாக ப.அ. ஜெயகரன் ஒருவதைத்தான் கனேடிய நாடகச் சூழலில் கூற முடியும். இக்கலைஞரின் சிறந்த நாடகங்களில் நடிக்கும் சந்தர்பம் கிடைத்தை நான் எப்போதும் பெருமையாகக் கொள்கின்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பதிவுக்கு நன்றி.
//பெண்களைப் பற்றி ஊரில் கதைக்கும் போது முக்கியமாக குறையாகச் சொல்லும் போது பேச்சு வழக்காகப் பாவிக்கப்படும் சொற் பதந்தான் இந்தப் “பொடிச்சி”. (உதாரணமாக உந்தப் பொடிச்சி படு மோசம்). //
என்னால் முழுமையாக ஒத்துக்கொள்ள இயலவில்லை.
அதற்கும் பாவிக்கப்படுகிறது என்பதுதான் என் கருத்து.
இதேபோல் தான் பெட்டை என்ற சொல்லும். பெடியன் என்பதற்குரிய எதிர்ப்பாற் சொல்லாய் இருந்தாலும் அதையும் தம்மைக் கேவலமாய் விழிக்கவே பாவிக்கிறார்கள் என்ற தோரணை பெரும்பாலான பெண்களிடமுண்டு.
என்னைப் பொறுத்தவரை அதற்கு மட்டுமே அச்சொற்கள் பயன்படுத்தப்படுவதில்லையென்பது என் கருத்து.
புலிகளிடத்திற்கூட பெட்டை என்ற சொல்லைப் பாவிப்பது ஏறத்தாள தடை என்ற அளவில் இருப்பதாக அறிகிறேன். ஏனென்று புரியவில்லை.
வசந்தன், மன்னிக்க வேண்டும் இன்றுதான் தங்கள் பின்னூட்டத்தை அவதானித்தேன். இவையெல்லாம் பேச்சுத் தமிழில் உருவானவை என்று நினைக்கின்றேன். அதனால்தானோ என்னவோ தரமற்றதாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது அவைகள் மாறிவருகின்றன என்றே நம்புகின்றேன்.
//சுமதி ரூபன் அக்கா.\\ he he he
மூர்த்தி நன்றிகள்.
Post a Comment