சனி மாலையை வலைப்பதிவாளர்களுக்கு என்று ஒதுக்கி வைத்தாலும் கோடை வந்து விட்டாலே தமிழ் நிகழ்வுகளால் நிரம்பிவிடும் ரொறொண்டோவின் வழமையான ஒரு மிகவும் பிஸியான சனிதான் அன்றும். காலை 10 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை கவிதை மொழிபெயர்புப் பட்டறை, அதே மண்டபத்தின் இன்னுமொரு பகுதியில் வாழும் தமிழின் புத்தகக் காட்சி, அதன் முடிவில் நாடக எழுத்தாளர் ஜெயகரனின் நாடகப்பிரதி வெளியீட்டு விழா, அதே நேரம் வெளியே பூங்காவில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு என்றும் மூச்சு விட நேரமற்ற ஒரு நாளாக நான் எண்ணியிருந்தேன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்?
குளிர்காலங்களில் யன்னல் கதவுகள் திறக்கப்படாத குடில்களிலெல்லாம் ஸ்பிரங் கிளீனிங் என்று வேண்டாத பொருட்கள் அகற்றுதல் மும்மராக இடம்பெறும். கறுப்பி கொஞ்சம் லேட். காலை சில கழிவுகளை அகற்ற முனைந்து காலில் போட்டு, கால் வீங்க, அழுது, ஐஸ் வைத்து நொண்டி நொண்டிப் படுத்து விட்டேன். ஐயோ எல்லாவற்றையும் கோட்டை விடப்போகின்றேனே என்று திடுக்கிட்டெழுந்து நான் போகப் போறேன் என்று வீட்டில் வாங்கிக்கட்டிக் கொண்டு மாலை ஐந்த மணி அளவில் மொழிபெயர்ப்பு பட்டறைக்குள் முகத்தைக் காட்டி, புத்தக வெளியீட்டிலும் முகத்தைக் காட்டி, ஒரு மாதிரி வலைப்பதிவாளர்களைச் சந்திக்க எனது நண்பரும் பல கால வலைப்பதிவு வாசகரும், எனது படங்களுக்கு கமெரா, எடிட்டிங் செய்பவருமான ரூபனுடன் பூங்காவிற்குப் போய்ச் சேர்ந்தேன்.
இச் சந்திப்பில் வெங்கட், கிஸோ, நக்கீரன், தான்யா, பிரதீபா, வசந்திராஜா (வாசகி), சக்தி, டீசே, சத்யா (வாசகி), ரூபன் (வாசகன்), கறுப்பி போன்ற ரொறொண்டோ வாழ் நபர்களும், வேற்று மாநிலத்தில் இருந்து பாலாஜிபாரி, மதி கந்தசாமியும், சுந்தரவடிவேல், அவரது மனைவி ஜானகி, மகன் மாசிலன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இதில் சக்தி, நக்கீரன், பாலாஜி பாரி, மதிகந்தசாமி, சுந்தரவடிவேல், அவரது மனைவி ஜானகி, மகன் மாசிலன் மட்டுமே எனக்குப் புதியவர்கள் ஏனையோர் ஏற்கெனவே அறிமுகமானவர்கள். இரண்டு பூங்கா இருக்கைகள் அருகருகே இருந்ததால் அமர்ந்து கொண்டோம். கொஞ்சம் நெருக்கமாக இருந்ததால் தாம் வேறு இருக்கைகள் எடுத்து வருவதாக டீசே, கிஸோ, பாலாஜி பாரி(யும் என்று நினைக்கின்றேன்) ஆண்களுக்கே உரிய மிடுக்கோடு எழுந்து சென்று, இருக்கைகளை அசைக்க முடியாமல் வெறும் பூக்கள் சிலவற்றை பேக்காட்டக் கொண்டு வந்தார்கள் (பூ என்றால் புல்லுக்குள் இருக்கும் களையின் பூ)
அவர்களைக் குத்திக் காட்டுதல் தவறென்று உணர்ந்ததால் எல்லோரும் புற்தரையில் இருக்க முடிவெடுத்தோம்.
முதல் ரவுண்டாக எம்மை நாம் அறிமுகம் செய்து கொண்டதோடு, எப்படி வலைப்பதிவின் அறிமுகம் கிடைத்தது என்று எமது திருவாய் திறந்து மொழிந்தோம். (இந்த வேளை வெங்கட் எஸ்கேப்)
இரண்டாவது ரவுண்டாக எமக்குப் பிடித்த, நாம் படிக்கும் வலைப்பதிவுகள் பற்றிக் கூறினோம். (யார் யார் எவருடையதைக் கூறினார்கள் என்று கறுப்பி தகவல் தருவது தவறென்றுணர்ந்து)
ஒட்டு மொத்தமாக எல்லோரையும் கவர்ந்ததாக
நாராயணன்
மாண்டிரீஸர்
தங்கமணி
பெயரிலி
பத்மா அரவிந்த் என்று ஒத்துக் கொண்டோம்.
பெயரிலி தற்போது படங்களைப் போட்டு வாசகர்களில் கண்ணில் பூச் சுத்துவதும், இது ஒரு தொத்து நோயாப் பலரின் வலைப்பதிவுகளில் பரவ முயல்வதால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. காசியின் சேவை பாராட்டப்பட்டது. சக்தி தான் வலைப்பதிவிற்குப் புதிது என்றும் கதைப்பதற்குப் பயமாக இருக்கிறது என்று வெட்கப்பட்டு முகத்தை கைகளால் மூடிக் கதைத்தார். வேறு என்ன புதியவை செய்யலாம் என்று மதி கேள்வியை வைத்தார். பெரிதாகப் பதில் அதற்கு வரவில்லை. (போதும் என்ற மனமே பொன் செய்யும்)
எப்படி வலைப்பதிவுகளை படிப்பதற்கு தேர்ந்தெடுக்கின்றோம் என்ற ரவுண்டில், எமக்குப் பிடித்த வலைப்பதிவாளர்களைத் தவிர்த்து கவர்சியான தலைப்புகளைப் பார்த்தும், பின்னூட்டங்களின் எண்ணிக்கையைப் பார்த்தும் தெரிவு செய்வதாகக் ஒட்டுமொத்தமாகக் கூறினார்கள் என்று நினைக்கின்றேன். (கறுப்பி தலைப்பிடுவதற்காக கவர்ச்சி நடிகைகளின் பெயர்களை சேகரிக்கத் தொடங்கிவிட்டேன்)
அடுத்த ரவுண்டுக் கிடையில் மீண்டும் ஆண் சிங்கங்கள் ரீ வாங்கி வர எழ (கிஸோ டீசே) பாலாஜி பாரி தானும் வருவதாக எழுந்தார். டீசே ஏதோ அதட்டி அவரை இருத்தி விட்டுச் சென்று விட்டார். எனது காதில் பெரிதாக விழவில்லை. (பாவம் பாலாஜி பாரி) சில நிமிடங்களின் பின்னர் உல்லாசப்பயணிகளைத் தன் வசம் இழுத்துக் கொள்ளும் சுவை மணம் மிக்க கனேடிய பேமஸ் "ரிம்ஹோட்டன்" கோப்பி "டோனட்ஸ்" உடன் வந்தார்கள்.
இதற்கிடையில் சக்தி, சத்யா எஸ்கேப் ஆகிவிட்டதால் மீண்டும் நாம் இருக்கைகளில் இருந்து கொண்டோம்.
டீசே கமெராவைத் தூக்க, முகத்தை வெட்டி ஒட்டும் வேலை அறம்புறமாக வலைப்பதிவில் இடம் பெறுவதால், சும்மா கலாம் புலாமாக ஏதாவது எடுத்துப் போடுவதாக முடிவெடுக்கப்பட்டது. பல படங்களை டீசே தட்டினார். கறுப்பிக்கு பெயரிலியில் இருக்கும் நம்பிக்கை டீசேயின் புகைப்பிடிப்பில் இருக்கவில்லை. பல படங்கள் மிஸ்ஸிங். (என்னத்தைத் தட்டினாரோ தெரியவில்லை) இந்த வேளை கிஸோவும் கிளம்பி விட்டார். அவருக்குத் தான் நட்சத்திரம் என்ற திமிர் அப்போதே வந்துவிட்டதை உணரக் கூடியதாக இருந்தது.
சுந்தரவடிவேல் தான் படிக்க விரும்பாத சில வலைப்பதிவாளர்களின் பெயர்களைக் கூறினார். (அதை வெளியிட கொப்பி ரைட் என்னிடம் இல்லை). பின்னர் கலகலப்பாகப் பேசிச் சிரித்து கொண்டிந்தோம். நாம் சிரிக்கும் போது எம்மையும் மீறி மாசிலன் தனக்குப் புரிந்து போல் சிரித்து எல்லோரையும் கலகலப்பாக்கினார். பின்னர் பொதுவாக உரையாடிக் கொண்டிருந்தோம். பாலாஜி பாரியுடன் உரையாடும் சந்தர்ப்பம் கறுப்பிக்குக் கிடைத்தது (பாலாஜிக்குப் பிடிக்கிறதோ என்னவோ அவருடன் உரையாடும் போது ஜெயமோகனை அடிக்கடி நினைவிற்குக் கொண்டு வந்தார்) இப்படியே சும்மா கொஞ்ச நேரம் கடியில் போனது. பின்னர் இரவு உணவிற்காக எங்கு செல்லலாம் என்ற கேள்வி எழு, ஒரு இலங்கை உணவகத்திற்குப் போவோம் என்று பாலாஜி பாரியின் விருப்பமாக "ஹொப்ப கட்" எனும் அப்பத்திற்கு பேர் போன உணவகத்திற்குச் சென்றோம். சந்தோஷமா ஒரு பியர் அடிப்போம் என்றால் நொன்அல்கஹோல் என்றார் உணவகத்து உரிமையாளர். போய் இருந்து விட்டோம் என்ன செய்வது
சாப்பாட்டு ரவுண்டில்
அப்படைஸராக எல்லோருக்கும் ஒரு அப்பம் ஓடர் கொடுத்தோம்.
(எல்லோரும் கையில் மெனுவைத் தூக்க டீசே கொஞ்சம் ரென்சனாவது தெரிந்தது. பில் தன் தலையில் பொறிந்து விடும் என்ற பதட்டம் போலும்)
இரண்டாவது ரவுண்டாக
பலவிதமான உணவுகள் ஓடர் கொடுக்கப்பட்டது. (பகிர்ந்துண்ணல் முறைக்காக)
பாலாஜி பாரி எனக்கு அருகில் இருந்ததால் அவரின் ஓடர் மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது. முதலில் இட்டலி சட்னி சாம்பார் என்றார், அடுத்த பிளேட்டாக மசாலா தோசை என்று இரண்டு ஓடர்களைக் கொடுத்தார். பல வருடங்களுக்குப் பின்னர் இந்த உணவை உண்ணப் போவதாக மிகுந்த மகிழ்ச்சியோடு கூறினார். ரூபனிடமிருந்து கொஞ்சம் புட்டும் எடுத்துக் கொண்டார். பக்கத்தில் இருந்த இலங்கை வகை சம்பலைப் பார்த்து என்னென்று கேட்க, சத்யா சம்பல் என்றார். அப்படியென்றால்? என்ற அவரின் கேள்விக்கு தான்யா, இந்தியாவில் சட்னிபோல் ஈழத்தில் சம்பல் செய்வார்கள் கொஞ்சம் ரையாக இருக்கும் என்று விளக்கம் கொடுத்தார். அதன் பின்னர் சாம்பல் நன்றாக இருக்கிறது, சாம்பல் அப்படியிருக்கிறது என்ற பாலாஜியை சாம்பல் என்றால் Ash என்று அர்த்தம் என்று சத்யா பாலாஜிக்குக் குட்டு வைத்தார்.
சிக்கின் புரியாணி, புட்டு, பிறைட் ரைஸ், கொத்து ரொட்டி, கணவாய், சிக்கின், மட்டிண்கறி என்று பலவித உணவுகள் மேசைக்கு வந்தன.
இறுதியாக வட்டிலப்பம், பீடா மேசைக்கு வந்தன. வட்டிலப்பம் என்றவுடன் ஏதோ அப்பவகை என்று எண்ணியதாக பாலாஜி பாரி கூறினார். சிறிது எடுத்து வாயில் போட்டு விட்டு நன்றாக இருப்பதாகவும் கூறினார். மாசிலன் ஓடியோடி பல உணவுவகைகளை சுவைபாத்துக் கொண்டிருந்தார்.
மாலை ஆறுமணிக்கு ஆரம்பித்த வலைப்பதிவாளர்கள் சந்திப்பு இரவு 11:30க்கு நிறைவிற்கு வந்தது. அடுத்த வலைப்பதிவாளர் சந்திப்பு அடுத்த வருடம் பாலாஜி பாரி வசிக்கும் நீயூ ப்ரோன்ஸ்விக்கில் நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. (சும்மா)
எல்லாவற்றையும் கவர் பண்ணினேனா தெரியாது. ஏனையோர் அதனைச் செய்யலாம் என்ற நம்பிக்கையுடன்
(நல்ல முறையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தாலும் கறுப்பிக்குச் சில மனக்குறைகள் இருக்கத்தான் செய்தன. கறுப்பியுடன் மோதும் ஈழநாதன், கறுப்பியைப் பிடிக்காது என்று மொழிந்த ரோஸாவசந்த், கறுப்பிக்காகப் பிரத்தியேக தளம் போட்ட எல்லாளன், வன்னியன், இன்னும் சும்மா ஜள்ளு விடும் வசந்தன், சயந்தன், அருகில் இருக்கும் தங்கமணி, தூர இருக்கும் நாராயணன் போன்றோரும் கலந்து கொண்டிருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும் கறுப்பிக்கு)